July 18, 2016

புனர்வாழ்வளிக்கப்பட்ட 146 கைதிகள் விடுவிப்பு!

சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட 146 கைதிகள் கடந்த 06 மாதகாலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் உத்தியோகஸ்தர் கே.சுதர்சன் தெரிவித்துள்ளார்.


கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் 30ஆம் திகதிவரை சிறு குற்றங்கள் இழைத்த 101 கைதிகள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தாலும் 45 கைதிகள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தாலும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நியாயதிக்க எல்லையினுள் மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஏறாவூர் செங்கலடி, ஆரையம்பதி, வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளையும் காத்தான்குடி, மட்டக்களப்பு, ஏறாவூர், வவுணதீவு, கரடியனாறு, ஆயித்தியமலை, கொக்கட்டிச்சோலை ஆகிய பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கி சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் செயற்படுகின்றது.

இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சிறு குற்றங்கள் இழைத்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டால் அவர்கள் புனர்வாழ்வளிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment