July 19, 2016

இரணைதீவில் தங்கி நின்று மீன்பிடிக்க விரைவில் அனுமதி: பா.டெனீஸ்வரன்!

கிளிநொச்சி, இரணைதீவு பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்கி நின்று மீன்பிடிப்பதற்கு விரைவில் அனுமதி பெற்றுக் கொடுக்கப்படும் என வடமாகாண மீன்பிடித்துறை, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இரணைத்தீவு பகுதி மீனவர்கள் தமது பகுதியில் மீள் குடியேறவும், அப்பகுதி கடலில் மீன்பிடிப்பதற்கும் அனுமதி கோரி வருவது தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்ட இரணைதீவு பகுதி கடற்படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த 400 மீனவக் குடும்பங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

இவர்கள் அப்பகுதியில் தம்மை மீள்குடியேறுவதற்கும், தமது கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கும் அனுமதி கோரி வருகின்றனர். இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் பேசப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுனரின் கவனத்திற்கும், முதலமைச்சர் மற்றும் வடக்கு அவைத்தலைவர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆளுனர் இது தொடர்பில் பேசியுள்ளார். விரைவில் நானும், வடமாகாண ஆளுனர் மற்றும் அப்பகுதி மீனவர்கள் இரணைத்தீவுக்கு சென்று அங்குள்ள நிலமைகள் தொடர்பில் ஆராயவுள்ளதுடன், மீனவர்கள் தங்கி நின்று மீன்பிடிப்பதற்குரிய ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment