July 19, 2016

சீனக்கடலில் ஒரு கச்சத்தீவு – பரவும் போர்ப் பதற்றம் !

தமிழக மீனவனின் வாழ்வாதாரத்திற்காக, கட்சத்தீவினை மீட்க இங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் வணிகப் பேராசையால் இரு தீவுக் கூட்டங்களை ஆக்கிரமிக்க 6 ஆசிய நாடுகள் மல்லுக்கட்டி வருகின்றன.
தெற்கு சீனக் கடலிலுள்ள பாரசெல்ஸ் மற்றும் ஸ்ப்ராட்லிஸ் தீவுகளை சீனா, தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய 6 நாடுகளும் தங்களுடையது, என்று சொந்தம் கொண்டாடுகின்றன. நடுவர் தீர்ப்பு நீதிமன்றம் சீனாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் சீனாவும் அமெரிக்காவும் அப்பகுதியில் போர் விமானங்களையும் கப்பல்களையும் நிலை நிறுத்தியுள்ளதால், தெற்கு சீனக் கடல் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

தெற்கு சீனக்கடலில் அமைந்திருக்கும் மனிதர்கள் வாழாத இரு தீவுக் கூட்டங்கள் தான் பாராசெல் தீவுகளும், ஸ்ப்ராட்லிஸ் தீவுகளும். இத்தீவுகள் அமைந்திருக்கும் கடல் பகுதியில் கச்சா எண்ணெயும் எரிவாயும் அதிகம் கிடைக்கும். பவளத்திட்டுப் பாறைகள் நிறைந்த இப்பகுதியில் மீன்வளமும் அதிகம். மற்ற நாடுகளுக்குக் கடல் வழி வாணிபம் செய்ய இத்தீவுகள் பேருதவியாய் இருக்கின்றன.

அதனால் தான் சீனா, இத்தீவுகளில் கடற்படைத் தளங்களையும் துறைமுகங்களையும் ஏற்படுத்தி இத்தீவினை கட்டுக்குள் வைத்திருக்கிறது. ‘9 டேஷ் லைன்’ எனப்படும் தனது எல்லைக் கோடால் 500 மைல் தொலைவிலிருக்கும் இத்தீவுகளையும் தனது பிரேதசமாக இணைத்துக் கொண்டுள்ளது சீனா.

ஆனால் வியட்நாமோ 17ம் நூற்றாண்டிலிருந்து அப்பகுதிகள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக மன்றாடுகிறது. 1940க்கு முன்னர் சீனாவுக்கும் அப்பகுதிகளுக்கும் சுத்தமாக எந்தத் தொடர்பும்
இருந்தது இல்லை என்றும், அதன்பிறகு தான் சீனா அவ்விடங்களுக்கு உரிமை கொண்டாடுவதாகவும் வியட்நாம் கடுமையாகக் குற்றம் சாட்டுகிறது.

இந்த இரு நாடுகளுக்குமான பிரச்னை சுமார் 40 ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. 1974ல் பாராசெல்சில் நடந்த சண்டையில் 70 வியட்நாம் வீரர்கள் சீனர்களால் கொல்லப்பட்டனர். மீண்டும் 1988ல் இவ்விரு நாடுகளும் மல்லுக்கட்ட 60 வியட்நாம் வீரர்கள் உயிர் நீத்தனர். ஆனால் இந்தச் சண்டை இவ்விரு நாடுகளோடு முடிந்துவிடவில்லை.

இந்தத் தீவுகளைச் சார்ந்த ஹ்யூங்யான் தீவு பிலிப்பைன்சிலிருந்து 100 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. ஆனால் சீனாவுக்கும் அத்தீவுக்குமான தூரம் 500 மைல்கள். அத்தீவுக்கு மிக அருகில் இருப்பதால் எங்களுக்கே சொந்தம் எங்கிறது பிலிப்பைன்ஸ். இதனால் 2013ல் சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து நடுவர் நீதிமன்றத்தில் பிலிப்பைன்ஸ் முறையிட்டது.

கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய நடுவர் நீதிமன்றம் சீனா இந்த விஷயத்தில் அத்துமீறுவதாகவும், அத்தீவுகள் வரை தனது எல்லையை நீட்டியுள்ளதால் தெற்கு சீனக் கடலின் பெரும்பகுதியையும் சீனா சொந்தம் கொண்டாடுவதாகும் என்று கூறி, அப்பகுதிகள் சீனாவுக்குட்பட்டதல்ல என்றும் தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில், உலக நாடுகளுக்கெல்லாம் ‘அப்பாட்டாக்கரான’ அமெரிக்கா, அக்கடல் பகுதியில் போர் விமானத்தைத் தாங்கி நிற்கும் போர்க்கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது. இந்தப் பிரச்னையில் தான் தலையிட விரும்பவில்லை என்று கூறும் அமெரிக்கா, இப்பகுதியில் ‘சுதந்திர போக்குவரத்து’ முக்கியம் எனவும், இப்பிரச்னை விரைவில் முடிய வேண்டும் என்றும் கூறுகிறது.

இந்தியா வழக்கம்போல் ‘சைலன்ட்டாக’ இருந்தாலும், இந்தியா எங்கள் பக்கம் என்கிறது சீனா. நீதிமன்றத்தின் தீர்ப்பை சீனா மதிக்க வேண்டும் என்று ஜப்பான் அறிவிக்க, “இந்த விஷயத்தில் ஜப்பான் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளது சீனா. மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் கண்டுகொள்ள போவதுமில்லை என்றும் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி கடல் பகுதியில் போர்க்கப்பல்களை நிறுத்தி கடற்படை பயிற்சிகளும் மேற்கொண்டு வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் அந்நாடுகளுக்கு இடையே போர் மூளும் என்ற அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

சமாதான முடிவுக்கு வரலாம் என்றால், சீனா பிற ஆசிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் இப்பிரச்னையைத் தீர்ப்பது தொடர்பாக ஆசிய நாடுகளுக்கே கருத்து வேறுபாடு இருப்பதால் இப்போதைக்கு இப்பிரச்னைக்கு சுமூகத் தீர்வு ஏற்படாது, என்றே தெரிகிறது. வணிக ரீதியாக ஏகப்பட்ட ஆதாயங்கள் இருப்பதால் எந்த நாடும் இத்தீவுகளை விட்டுக் கொடுக்க மறுக்கின்றன. சீனாவோ, இவ்விஷயத்தில் பின்வாங்கினால் இமேஜ் பாதிக்கும், என்பதால் விடாப்பிடியாக இருக்கிறது. பிலிப்பைன்சும் இந்த விஷயத்தில் விட்டுக் கொடுக்காமல் தன் பங்கிற்கு போர்க்கப்பலை ஸ்பாட்டுக்கு அனுப்பியுள்ளது.

தண்ணீருக்காக ஒரு உலகப்போர் வரும் என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்க, தீவுகளுக்காக தென் சீனக் கடல் பகுதியில் போர் ஒன்று ‘சைலன்ட்டாக’ தொடங்கியுள்ளது. தங்களின் சூப்பர் பவரை நிரூபிக்க இந்நாடுகள் போர்க்கப்பல்களை வரிசையாய் நிறுத்த உலக அரசியலில், எந்நேரமும் எந்தப் பூகம்பமும் வெடிக்கலாம். பொண்ணுக்கும் மண்ணுக்குமான போர் மன்னர் காலத்தில் மட்டுமல்ல, மடிக்கணிணி காலத்திலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.




No comments:

Post a Comment