June 4, 2016

அமைச்சர் சத்தியலிங்கத்துக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரியவர் கைது!

தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய சந்தேக நபரை வவுனியா பொலிஸார் இன்று கைது செய்தனர்.
கடந்த மாதம் 20ம் திகதி வட மாகாண சுகாதார அமைச்சரை தொலைபேசியில் அழைத்து, மரண அச்சுறுத்தல் விடுத்ததுடன் 12 லட்சம் ரூபா கப்பம் கோரியதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

 
இதையடுத்து,வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.பி.சி.எஸ்.கே செனரத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை மேற்கொண்டு கிளிநொச்சி இரத்தினபுரத்தை பிறப்பிடமாகவும் தற்போது வவனியா புதுக்குளத்தில் வசித்து வரும் மாடசாமி சுதாகரன் என்ற 38 வயதுடைய நபரை இன்று சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை வவுனியா நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்ப்படுத்திய நிலையில் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் தன்னை இராணுவ புலனாய்வாளர் எனவும் தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று வந்திருப்பதாகவும் தெரிவித்து பலரிடம் கப்பம் பெறும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் சம்பவம் காரணமாக கடந்த சில நாட்களாக வடமாகாண சுகாதார அமைச்சர் பொது நிகழ்வுகளை புறக்கணித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment