June 1, 2016

இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்குமாறு உத்தரவு!

ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுவை ஆராய்ந்த பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான நீதியரசர்கள் குழு, மனுவை விசாரணைக்கு எடுக்க அனுமதி வழங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களம், எவ்விதமான நியாயமான அடிப்படையும் இன்றி தம்மை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து விளக்கமறியலில் வைத்தது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் வழங்கிய உத்தரவிலும் சட்டரீதியான அடிப்படையும் இல்லை எனவும், இதன் மூலம் தமது சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்களை கவனத்தில் எடுத்து கொண்ட உயர்நீதிமன்றம் மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் பிரதிவாதிகளுக்கும் அழைப்பாணை அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment