சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிபுணர் குழுக்களையும் இந்தியா கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் சுனைனா மற்றும் ஐஎன்எஸ் சுட்லேஜ் ஆகிய கப்பல்களிலும், இந்திய விமானப்படையின் சி-17 போக்குவரத்து விமானத்திலும் இந்தியா உதவிப் பொருட்களையும் மீட்பு அணிகளையும் அனுப்பியுள்ளது.
இரண்டு கப்பல்களும், 30தொடக்கம் 40 தொன் வரையான உதவிப் பொருட்களுடன் கொச்சியில் இருந்து சிறிலங்கா சென்றுள்ளன. இவை இன்று காலை கொழும்பைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், கூடாரங்கள், குடிநீர், மருந்துகள், உடுதுணிகள், மற்றும் அவசரகாலத் தேவைக்கான பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.
மேலும், மீட்புப்படகுகள், வெளியிணைப்பு இயந்திரங்கள் மற்றும் சுழியோடிகளும் இந்தக் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட உதவிக் கோரிக்கையை அடுத்து, வியாழக்கிழமை இரவு இந்த உதவிப் பொருட்களை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 6 மணிநேரங்களில் இரண்டு கப்பல்களும் தயார்படுத்தப்பட்டன என்று இந்தியக் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், மீட்பு மற்றும் நிவாரண உதவிகளுக்கு இந்தியக் கடற்படை தயார் நிலையில் உள்ளது. அவசர கோரிக்கை விடுக்கப்பட்டால் அனுப்புவதற்காக, கொச்சியில், இந்தியக் கடற்படையின் இரண்டு டோனியர் விமானங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இந்திய உள்துறை அமைச்சில் நேற்று நடத்தப்பட்ட அவசர கூட்டம் ஒன்றையடுத்து, விமானம் மூலம் அவசர உதவிப் பொருட்களை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து, இந்திய விமானப்படையின் கனரக போக்குவரத்து விமானமான, சி-17இல், 60 தொன் அவசர உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்றது.
புதுடெல்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபை மற்றும் தேசிய அனர்த்த மீட்புப்படை ஆகியவற்றின் அதிகாரிகளும், கொழும்புக்குச் சென்றனர்.
சென்னையில் தங்கிச் சென்ற இந்த விமானத்தில், மருத்துவ உதவிகள், கூடாரங்கள், தார்ப்பாய்கள், அவசரகால விளக்குகள், நடமாடும் கழிப்பறைகள், ஆகியனவும் ஏற்றிச் செல்லப்பட்டன.
இதுகுறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிலங்கா மிகவும் அருகில் உள்ள நட்பு நாடு. அங்கு நெருக்கடிகள் ஏற்படும் போது முதலில் கைகொடுக்கும் நாடாக இந்தியாவே இருந்து வருகிறது. சுனாமி ஏற்பட்ட போதும் இந்தியாவே முதலில் உதவியது. இம்முறையும் இந்தியாவே முதலில் உதவிகளை அனுப்பியுள்ளது.
மேலதிக உதவித் தேவைப்பாடுகள் தொடர்பாக சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து கலந்துரையாடி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment