October 12, 2015

தமிழ் அரசியல் கைதிகள் இன்று சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கின்றனர்!

சிறிலங்காவின் பல்வேறு சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், தம்மை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இன்று முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.


கொழும்பு, மகசின், சீ.ஆர்.பி, அநுராதபுரம், தும்பறை, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய சிறைச்சாலைகளில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 250இற்கு அதிகமான அரசியல் கைதிகளே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

”எமது விடுதலைக்காக பல்வேறு முயற்சிகளை கொண்டோம். தற்போது வரையில் எவையுமே கருத்தில் கொள்ளப்படவில்லை.

புதிய ஆட்சியாளர்களுக்கும் எமது விடுதலை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்த போதும் தொடர்ந்தும் பாராமுகத்துடனேயே இருக்கிறார்கள்.

ஆகவே இறுதி முயற்சியாக உயிர்நீக்கும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானித்தோம். இந்தப் போராட்டத்தை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளோம்” என நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் அறிவித்துள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்களில், பெரும்பாலானவர்கள், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாத நிலையில், விசாரணைக் கைதிகளாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மொனராகல, போகம்பரை, அநுராதபுரம், நீர்கொழும்பு, அனுராதபுர, நீர்கொழும்பு, பொலன்னறுவ, மட்டக்களப்பு, மகசின், பதுளை, வெலிக்கடை ஆகிய சிறைச்சாலைகளில் 178 ஆண் அரசியல் கைதிகள் இருப்பதாகவும், வெலிக்கடையில் ஒரு பெண் அரசியல் கைதி இருப்பதாகவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment