September 3, 2015

அறப்போர் செயற்பாட்டாளர்கள் பிரித்தானிய பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தடுக்கப்பட்டு விசாரணை! பின்னணியில் சிறீலங்கா தூதரகம்?

தமிழின அழிப்பிற்கு நீதிவழங்கும் வகையில் பன்னாட்டு நடுவர் மன்றம் அமைக்கப்படுவதை வலியுறுத்தி மிதிவண்டிப் பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டு விட்டு நெதர்லாந்தில் இருந்து இன்று பிரித்தானியா திரும்பிய
அறப்போர் செயற்பாட்டாளர்கள் பிரித்தானிய காவல்துறைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுக்கப்பட்டு, தனியாக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்தில் இருந்து இன்று காலை பிரித்தானியாவின் ஹார்விச் துறைமுகத்தில் வந்திறங்கிய இவர்களை வழமைக்கு மாறாக மிகவும் பண்பான முறையில் ஆயப்பிரிவு (சுங்கத் திணைக்களம்) அதிகாரிகள் நடத்தியதோடு, தவறுதலாகப் ஆயப் படிவம் ஒன்றை அறப்போர் செயற்பாட்டாளர் ஒருவர் நிரப்பத் தவறிய பொழுது, தாமே அதனை நிரப்பி அதில் கையொப்பம் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து ஆயப்பிரிவை மூன்று செயற்பாட்டாளர்களும் கடந்த பொழுது இவர்களுக்காகக் காத்திருந்த பிரித்தானிய காவல்துறைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், இவர்களைத் தனியாக அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தமிழீழத் தேசியக் கொடியோ, அன்றி தமிழர்கள் என்று தம்மை அடையாளப்படுத்துவதற்கான எந்தச் சின்னங்களையோ இவர்கள் அத்தருணத்தில் வைத்திருக்காத பொழுதும், இவர்களைப் பிரத்தியேகமாகத் தெரிவு செய்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், எங்கு சென்று விட்டு வருகின்றீர்கள், எதற்காகச் சென்றீர்கள், புலிகளுக்கு நிதி திரட்ட முற்பட்டீர்களாக? புலிகளை ஆதரிக்கின்றீர்களா? சிறீலங்காவில் இப்பொழுதும் புலிகள் செயற்படுகின்றார்களா? போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அத்துடன் ‘புலிகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?’ என்று இவர்களிடம் காவல்துறை அதிகாரி ஒருவர் வினவிய பொழுது, ‘அவர்கள் சுதந்திரப் போராளிகள்’ என்று அறப்போர் செயற்பாட்டாளர் கோபி சிவந்தன் பதிலளித்துள்ளார்.
எனினும் அதனை மறுத்துரைத்த காவல்துறை அதிகாரி, பிரித்தானியாவில் ‘புலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீங்கள் எவ்வாறு சுதந்திரப் போராளிகள் என்று கூறுவீர்கள்?’ என்று வினவியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த கோபி சிவந்தன், ‘நான் எனது உயிரைப் பாதுகாப்பதற்காக சொந்த நாட்டை விட்டு வெளியேறிய பொழுது எனது குடும்பத்திற்குப் புலிகளே பாதுகாப்பு அளித்தார்கள். அன்றொரு காலத்தில் நெல்சன் மண்டேலாவைப் பயங்கரவாதி என்று பிரித்தானியா அழைத்தது. இப்பொழுது அவரை சுதந்திரப் போராளி என்று அழைக்கின்றது. அப்படித்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் விடயத்திலும்’ என்று விளக்கமளித்துள்ளார்.
இதற்கிடையே மூன்று அறப்போர் செயற்பாட்டாளர்களின் தனிப்பட்ட விபரங்களைத் திரட்டிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், தமது ஊதியத்திற்காக இவர்கள் செய்யும் தொழில் பற்றியும் வினவியுள்ளனர்.
சிறீலங்காவில் மகிந்தவின் ஆட்சி நிலவிய கடந்த ஆறு ஆண்டுகளாக பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட அறப்போராட்டங்களின் பொழுது எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்காத பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், தற்பொழுது மேற்குலகிற்கு சார்பான ஆட்சி மாற்றம் அங்கு ஏற்பட்டுள்ள நிலையில் திடீரென இவ்வாறு நடந்து கொண்டது, தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது இவ்வாறிருக்க, இலண்டனில் இயங்கும் சிறீலங்கா தூதரகத்தின் அழுத்தமும், சிங்கள-இந்திய புலனாய்வு நிறுவனங்களின் தொடர்ச்சியான வேவு நடவடிக்கைகளும், பிரித்தானிய காவல்துறையினரின் திடீர் அணுகுமுறை மாற்றத்தின் பின்னணிக்கான காரணிகளாக இருக்கலாம் என்று, அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த 22.08.2015 அன்று இலண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசறிவியல் மற்றும் இராசரீக ஆய்வரங்க மண்டபம், நிகழ்வு நடைபெறவிருந்த நாளன்று அதிகாலை வேளையில் அம் மண்டபத்தை நீண்டகாலமாக நடத்தி வரும் இயக்குனருக்குத் தெரியாமல் இந்திய நில உரிமையாளரால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டமையும், அதனையடுத்து அவசர அவசரமாகப் பிறிதொரு இடத்திற்கு ஆய்வரங்கம் மாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment