திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் பழமை வாய்ந்த வண்டார்குழலியம்மை சதேம வடராண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுடன் இணைந்த கோவிலாகும். அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும்.
மேலும் இந்த கோவில் காரைக்கால் அம்மையார் கைகளால் நடந்து வந்து சிவபெருமானை வணங்கிய பேறு பெற்ற தலமாகும். கோவில் வளாகத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக அன்னதான கூடம் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
நேற்று காலை கட்டுமான பணிக்காக 10-க்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளங்கள் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது விநாயகர் சிலை, முருகர் சிலை, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அரசர் சிலை, சொக்கநாதர் சிலை என 6 கற்சிலைகள் அங்கு கண்டெடுக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவாலங்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்திற்கு வந்து 6 சாமி சிலைகளுக்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் தொல்லியல்துறை அதிகாரிகள் பார்வையிட்ட பின்னர் தான், அந்த சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தது என்ற முழு விவரங்கள் தெரிய வரும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment