பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய சகோதரிக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கும்!
வணக்கம்,
நான் ஒரு முன்னை நாள் போராளி. எனது பெயர் சி.கோகிலவாணி (வாணி). நான் கிளிநொச்சி மாவட்டத்தினைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவள். நான் 1991ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டுவரை விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளியாக நான் இருந்திருக்கின்றேன். என்னுடைய இயக்கப் பெயர் சுகன்யா. நான் இறுதியாக இருந்த பிரிவு செஞ்சோலை. இறுதிப் போரின் பின்னர் நான் சுமார் 2000 இற்கும் அதிகமான போராளிகளை நேரடியாக பம்பைமடு தடுப்பு முகாமில் சந்தித்திருக்கின்றேன். என்னை உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகின்றேன்.
இன்னும் சில தினங்களில் எம் மக்கள் ஒரு பொதுத் தேர்தலை எதிர் கொள்ளப் போகின்றார்கள். 2009களில் இலங்கையின் வடபுலத்திலே ஒரு மிகக் குறுகிய நிலப் பரப்பிலே இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் பின்னர் எம் மக்கள் சந்திக்கின்ற இரண்டாவது பாராளுமன்றத் தேர்தல் இது.30 ஆண்டுகளாக நடாத்தப்பட்ட போரில் நாங்கள் சந்தித்த பேரழிவுகளை, அதிலும் இலங்கை அரசால் இறுதிக் கட்டப் போரில் மனிதாபிமான இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட இன அழிப்பில் எம் மக்கள் எதிர் கொண்ட கொடூரங்கள் இந்தச் சந்ததி அழிந்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அழியாத வடுவாக எங்கள் வரலாற்றில் மீண்டும் மீண்டும் நினைவு படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். போர் முடிவுக்குக் கொண்டு வரப்படட்தன் பின்னர் கடந்து போய் விட்ட 5 வருடங்களையும் இந்த இடத்தில் நாங்கள் ஒருமுறை நினைத்துப் பார்ப்போம். கையறு நிலையில் சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக நாங்கள் நின்ற நிலையின் நினைவுகள் எந்த பிறவியிலும் எங்களை விட்டு அகலப் போவதில்லை. 2009 மே மாதத்தின் பின்னர் எங்கள் வாழ்வியலே முற்று முழுதாக மாறிப் போனது. நலன்புரி முகாம்களிலும் தடுப்பு முகாம்களிலும் சிறைச் சாலைகளிலும் எங்கள் நாட்கள் நகர்ந்தன.
இதனை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் கடந்த நிலையில் இன்றுவரை எமது மக்களது அரசியல் தீர்வுகள் தொடர்பிலோ அல்லது அவர்களது வாழ்வியல் சுதந்திரம் பற்றியோ எந்தவிதமான ஆக்கபூர்வமான விடயங்கள் எங்கள் மக்கள் பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்டனவா என்றால் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்தவிடயம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா கூறுகிறார். 20 ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றத்தில் பேரம் பேசும் சக்தியினைப் பெற்றுக் கொள்ள ஆணை தருமாறு. 20 ஆசனங்களைப் பெற்று இவர் எதைப் பேரம் பேசப் போகின்றார்? அயலாதிக்க சக்திகளின் நலங்களிற்காக எங்கள் உரிமைகளைப் பேரம் பேசுவாரே தவிர எங்களது உரிமைகளுக்காக ஒரு போதும் அவர் பேரம் பேசப் போவதில்லை என்பது வெளிப்படை.
எதிர்வரும் 2016 ஆண்டின் முடிவிற்குள் எமது பிரச்சனைகளிற்கு தீர்வு காணப்படும் என்று சம்பந்தன் ஐயா அவர்கள் கூறியிருப்பதாக பத்திரிகையில் ஒரு செய்தி வெளி வந்திருந்த்து. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு பேரினவாதக் கட்சிக்களும் ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்ற வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருக்கின்ற நிலையில் சம்பந்தன் ஐயா யாருடன் பேசி எங்களுக்குத் தீர்வை 2016க்குள் பெற்றுத் தரப்போகின்றார் என்பதை அவர் வெளிப்படுத்தவேண்டும். இதிலிருந்து ஒன்றை எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே வழங்கிய ஐந்து வருடங்கள் வீணாக்கப்பட்ட நிலையில் இன்னும் ஒரு ஐந்து வருடங்களையும் கொடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கால நீடிப்பு அரசியலுக்கு மக்களாகிய நாங்கள் துணை போக வேண்டுமா?
அரசியல் தீர்வு தான் எட்டப்படவில்லை. மக்களது வாழ்வியலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதா? புலம் பெயர் உறவுகளின் எண்ணிக்கையற்ற நிதிப்பங்களிப்பு எந்தவிதமான திட்டமிடல்களுமின்றி, தூர நோக்கின்றி அவரவரது சுய லாப அரசியல் நோக்கங்கள் கருதி எப்போதும் பிறறிடம் கையேந்தி நிற்கும் சமூகத்தினை உருவாக்குவதில் தான் செலவிடப்படுகிறது. அந்த வகையில் ஐந்து வருடங்களையும் சுகமாக கடத்தி விட்டு தற்போது விதம் விதமான விளம்பரங்கள், உருவேற்றும் வாக்கியங்கள் மூலம் உங்களை நாள் தோறும் சந்தித்து வாக்குக் கேட்கிறார்கள். ஆகவே எம் அன்பிற்குரிய மக்களே நீங்கள் சுதாகரிக்க வேண்டிய தருணம் இது.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளுக்கும் முகவரி தமிழீழ விடுதலைப் புலிகள். அந்த முகவரியூடாகவே அதில் உள்ள அனைவருக்கும் தமிழ் மக்களிடம் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் இன்று சம்பந்தன் ஐயா வெளிப்படைப்படையாகவே அவர்களை ஒதுக்குகின்ற ஒரு செயற்பாட்டைச் செய்கின்றார். அண்மையில் ” விடுதலைப் புலிகளின் எச்ச சொச்சங்கள்” என்று கருத்தில் ஒரு பேச்சினை ஆற்றியிருந்தார். விடுதலைப் புலிகளின் எச்ச சொச்சங்கள் என்றால் அவர்கள் யார்? மக்கள் தான் விடுதலைப் புலிகள். விடுதலைப் புலிகள் தான் மக்கள். 2009களின் முன்பு அவ்வாறு தான் இங்கு நிலைமை காணப்பட்ட்து. இதுவரை நடந்த போரில் 40000 இற்கும் அதிகமான மாவீர்ர்கள் தங்களை ஆகுதியாக்கியிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான போராளிகள் தங்கள் அங்கங்களை இழந்திருக்கின்றார்கள்.
ஆகவே இந்த போராளி மாவீரர்களின் குடும்ப உறவுகளே, நண்பர்களே, அயலவர்களே எம் மக்களின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்துப் போராடிய எங்களது உறவுகளை எச்சங்கள் என்று குறிப்பிடுகின்ற இந்தப் பெரிய மனிதரிற்கும் அவரது குழுவிற்கும் இனியும் நீங்கள் உங்கள் அங்கீகாரத்தைக் கொடுக்கப் போகின்றீர்களா?முள்ளி வாய்க்கால் பேரவலத்தினை உலக அரங்கிற்கு எடுத்துப் போனவர்கள் எம் புலம் பெயர் உறவுகள். இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவாவில் பிரேரணை ஒன்று 2012 ஆம் ஆண்டு முதன் முதலில் கொண்டு வரப்பட்டது. அந்தப் பிரேரணை குறித்து சின்னக் கதிர்காமர் என்று குறிப்பிடப்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களால் வெளியிடப்பட்ட கருத்தை இங்கு முன்வைப்பது மிக அவசியம் என நான் கருதுகின்றேன்.
சுமந்திரன் அவர்கள் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலிருந்து:
ஜெனீவாவிற்குச் செல்வதில்லை என்ற தீர்மானத்தை TNA எடுத்திருக்கின்றது. ஏனெனில் எங்களுக்கு அங்கு இடம் கிடையாது. நாங்கள் இலங்கையிலுள்ள ஒரு கட்சி மாத்திரமே. ஜெனீவாவில் என்ன நடக்கப் போகின்றதென்றால் அங்கு 47 நாடுகளின் பிரதி நிதிகள் வருவார்கள். அவர்கள் தீர்மானத்தை ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்கலாம். நாங்கள் விரும்பினால் அவர்களுடன் பேசி ஒரு சார்பு நிலையினை எடுக்கலாம். ஆனால் நாங்கள் அதை விரும்பவில்லை.
ஏனென்றால் நாங்கள் இலங்கையின் ஒரு பகுதி.. ஆகவே சிறிலங்காவிற்கு எதிராக எந்தவிதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால் சிறீ லங்கா எங்கள் நாடுஎங்கள் அன்புக்குரிய மக்களே, முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் எங்களது புலம் பெயர் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட இறுதிப் போரில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கொண்டுவரப்பட்ட இந்த விடயத்தைப் பலவீனப் படுத்தும் வகையில் தனது கருத்தை வெளியிட்டு எங்கள் இனத்தை விற்கும் இவர் எங்களது பிரதிநிதியா? இத்தகைய ஒரு பிரதிநிதி எங்களுக்குத் தேவையா? இவரை ஆதரித்து இவரது கூற்றினை நியாயப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியும் எம்மக்களது காப்பாளர்கள் என்று நாங்கள் நினைக்கலாமா?
போர் முடிவடைந்தபின்னர் தற்போதைய தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் இயக்கத்தின் தலைவர் கூறிய விடயம் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான ஆபத்துமின்றி மீட்டதற்காக மாண்புமிகு ஜனாதிபதிக்கு நன்றி எனக் கூறியிருந்தார். எங்களது அழிவுகள் இழப்புக்களைப் பற்றி கொஞ்சமும் சிந்தியாமல் எங்களைக் கொன்றொழித்த அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த இவரை நாங்கள் தெரிவு செய்யலாமா?
இது முடிவு செய்ய வேண்டிய நேரம். நாங்கள் ஒரு திருப்புமுனைக் காலகட்டத்தில் இருக்கின்றோம். தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்பது பெயரில் மட்டும் தான் தான் இருக்கின்றது. அங்கிருப்பவர்கள் தமிழரசுக் கட்சியாக, EPRLF ஆக, ரெலோவாக புளொட்டாகத் தான் இருக்கிறார்கள். ஆகவே அவர்களை நிராகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இவர்களுடன் சேர்த்து, காலத்திற்கு காலம் எங்களை அழித்து வந்திருக்கும் இரண்டு சிங்களப் பேரினவாதக் கட்சிகள் சார்பிலும் அபிவிருத்தி செய்வோம் எனக் கூறிக் கொண்டு உங்களிடம் வேட்பாளர்கள் வருகின்றார்கள். அபிவிருத்தி ஒன்றுதான் எங்களுக்கு நோக்கமாயின் எதற்காக நாங்கள் இத்தனை விலைகொடுத்தோம் என்ற கேள்வி நிச்சயமாக உங்களுக்குள் எழுந்திருக்கும் என்று நாம் நம்புகின்றோம். எங்களது பிரச்சனைகளப் புரிந்து கொண்டவர்கள், எங்கள் அவலங்களை அறிந்தவர்கள், எங்கள் துன்பங்களில் பங்கு கொண்டவர்கள் யாருமே இந்தப் பேரினவாத சக்திகளோடு எந்தக் காலத்திலும் இணைந்திருக்கப் போவதில்லை.
ஏனென்றால் அவர்களது குருதியில் கலந்திருப்பது தமிழர் உரிமையின் தூய கொள்கை. அப்படியானால் இப்பொழுது இவர்களுடன் இணைந்து வருபவர்கள் யார்? நிச்சயமாக அவர்கள் எங்களுக்குரியவர்கள் அல்ல. ஆகவே எங்கள் அன்புக்குரிய மக்களே, வாக்கு என்ற ஆயுதம் உங்கள் கைகளில் இருக்கின்றது. மாற்றத்தை ஏற்படுத்த உங்களால் மட்டுமே முடியும். ஆகவே எங்கள் தலைவிதியினை மாற்றியமைப்பதற்கு சரியான பாதையினைத் தீர்மானியுங்கள்.
எங்கள் அன்புக்குரிய சகோதரியே, குடும்ப உறவுகளே,
மாற்றத்தை ஏற்படுத்த உங்களால் முடியும். இனவிடுதலைக்கான, அரசியல் சுதந்திரத்திற்கான, கனவுகளை நனவாக்க அளப்பரிய தியாகங்களை, அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு இன்று மீளாத் துயிலைக் கூட அமைதியுடன் அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அந்த மகாத்மாக்களின் சுயநல நோக்கமற்ற இலட்சியத்தைச் சாத்தியமாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பினை எம்மக்களுடன் இணைந்து நானும் செயலாற்றத் துணிந்து நிற்கின்றோம் என்பதனை எங்கள் நாவினால் அல்ல ஆத்மாவிலிருந்து கூறிக் கொள்ள விழைகின்றேன்.ஆகவே அதற்கான சகல வழி முறைகளையும் தேர்தல் உட்பட்ட சகல ஜன நாயக ரீதியிலான அமைதி வழிப் போராட்ட முன்னெடுப்புக்களில் உங்களுடன் கைகோர்த்துக் கொள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாங்கள் எப்பொழுதும் தயாராக இருப்போம்.
காலச்சுழலில் போராட்டத்தின் வடிவங்கள் மாறிக்கொண்டு வருகின்றன. ஆயினும் இலட்சியம் ஒன்றே. இந்த வேளையில் உங்கள் அனைவரதும் ஆதரவினை நானும் எனது அமைப்பும் நாடி நிற்கின்றது. வருகின்ற ஆகஸ்ட் 17ம் திகதி உங்கள் கடமையைச் பூரணமாக நிறைவேற்றுவீர்கள் என நான் பூரணமாக நம்புகின்றேன். உங்கள் வாக்குகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தில் புள்ளடியிட்டு மூன்று விருப்பு வாக்குகளுக்கும் புள்ளடியிடுவதன் ஊடாக உண்மையான பிரதி நிதிகளைத் தேர்ந்தெடுங்கள்.வரலாறு எம்மை விடுதலை செய்யும் என்ற கடந்த காலக் கனவுகளை நிதர்சனமாக்கும் இலட்சிய நோக்குடன் கூடிய எம்மக்களாகிய உங்களுடன் சேர்ந்து இறுதி வரை போராடத் தயாராக இருப்பேன் என்ற உறுதி மொழியுடன் உங்களிடம் இருந்து தற்போது விடைபெறுகின்றேன்.
நன்றி வணக்கம்.
அன்புடன்சி.கோகிலவாணி – சுகன்யா ( முன்னை நாள் போராளி)நான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் பட்சத்தில் என்னால் முன்னெடுத்துச் செல்லப்படும் விடயங்கள்.
- எமது அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு தொடர்பாக எமது கட்சியினால் முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருத்தல்.•
- எமது மக்களின் வாழ்வியலைக் கேள்விக்குறியாக்கி இன்னும் அவர்களை ஏதிலியாக வைத்திருக்கும் நில ஆக்கிரமிப்பு விடுவிப்புத் தொடர்பான விடயங்களை முன்னெடுத்தல்•
- போரினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் ( பெண்கள், குழந்தைகள், முன்னாள் போராளிகள், மாற்றுத் திறனாளிகள், அங்கவீனமுற்றவர்கள்) அவர்களது வாழ்வியல் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதில் கவனம் செலுத்தல்.•
- உள்ளக மற்றும் சர்வதேசக் கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் சுயதொழில் வாய்ப்புக்கள் மற்றும் கைத் தொழிற்சாலைகள் உருவாக்குதல்.
- இளையோர்களிற்கான திறன் விருத்தி மற்றும் தொழினுட்பக் கற்கை நெறிகளுக்கான வழிகளை உருவாக்கி அவற்றிற்கான சந்தைப்படுத்தல்களை ஏற்படுத்தல்.
No comments:
Post a Comment