ஈன்ற குழந்தையை நிலத்தில் அடித்துக் கொலை செய்து புதைத்தது தொடர்பாக சிசுவின் தாய், பெரிய தாய் ஆகியோர் கைது
செய்யப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பெண்ணொருவர் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
அங்கு நோயாளி பரிசோதிக்கப்பட்டபோது அவர் குழந்தையொன்றைப் பிரசவித்திருப்பது தெரியவந்திருக்கிறது.அது பற்றி மேலும் விசாரித்த வேளையில் பிறந்த குழந்தை இறந்து விட்டதாகவும் அதனைப் புதைத்து விட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.இப்பெண்ணின் தடுமாற்றத்தில் சந்தேகம் கொண்ட வைத்தியர்கள் இது பற்றி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணை கரடியனாறு பொலிஸார் விசாரணைக்குட்படுத்திய பொழுது மேற்படி பெண்ணும் அவரது சகோதரியும் சேர்ந்து பிறந்த குழந்தையை நிலத்தில் அடித்துக் கொலை செய்து புதைத்திருப்பது தெரியவந்திருக்கின்றது.அதன் பிரகாரம் சகோதரிகளான குழந்தையின் தாய் தம்பிப்போடி அரியமலர் (வயது 40), குழந்தையின் பெரிய தாய் துரைராசா தவமலர் (வயது 44) ஆகிய இருவரும் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கணித்தீவு வீதி, இலுப்படிச்சேனை எனும் முகவரியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment