July 11, 2015

தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் திங்கள் வேட்புமனு தாக்கல்!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இதுவரை 05 கட்சிகளும் 03 சுயேட்சை குழுவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் த. அகிலன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நிலையில் ஆரம்ப நாளான 03 ஆம் திகதி ஜெனசெத பெரமுன என்ற கட்சி முதலாவதாக தமது வேட்புமனுவை தாக்கல் செய்தது. அத்துடன் 09 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர். அவர்களில் சத்தியேந்திரா சாம்பசிவம் தலைமையில் ஒருகுழுவும்,
ஞானப்பிரகாசம் அன்ரன் நீக்லஸ் தலைமையில் இன்னொரு குழுவும், இதயராணி தலைமையில் இன்னொரு குழுவுமாக 03 குழுவினர் இதுவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் நேற்று வெள்ளிக்கிழமை பிரதான கட்சிகள் உட்பட 4 கட்சிகள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தன. அதற்கமைய டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களில் டக்ளஸ் தேவானந்தா , முருகேசு சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரீன், முன்னாள் யாழ்.மாநகரசபை ஆணையாளர் பற்குணராசா யோகேஸ்வரி , கல்வியியலாளர் இராமசாமி செட்டியார் செல்வடிவேல் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளனர்.
தமிழரசுக்கட்சியும் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேட்புமனு தாக்கல் செய்தது. தலைவர் மாவை சேனாதிராசா, கந்தையா சுரேஸ் பிரேமச்சந்திரன் , ஈஸ்வரபாதம் சரவணபவன், மதியாபரணம் சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், கந்தர் நல்லதம்பி சிறிகாந்தா , மதினி நெல்சன், ஆனந்தராஜ் நடராசா , கந்தையா அருந்தவபாலன் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
அதேபோல நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியும் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. வேட்பாளர்களாக திருமதி விஜயகலா மகேஸ்வரன், ராஜலிங்கம் சிவசங்கர், சின்னத்துரை குலேந்திரராசா ,உள்ளிட்டவர்கள் போட்டியிடவுள்ளனர்.
மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலம் எதிர்வரும் 13 ஆம் திங்கட்கிழமை மதியம் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் இதுவரை கட்டுப்பணத்தை கட்டி விண்ணப்பங்களை பெற்றுச் சென்ற சுயேட்சைக்குழுக்களில் 6 குழுவினர் இன்னமும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே குறித்த காலத்திற்குள் அவர்களும் வேட்புமனுவினை தாக்கல் செய்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி போன்றவை எதிர்வரும் 13 ஆம் திகதி வேட்புமனுவினை தாக்கல் செய்யவுள்ளன.

No comments:

Post a Comment