July 15, 2015

பாராளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழரின் தேசியகொள்கையை பலப்படுத்துவோம்! - நோர்வே ஈழத்தமிழர் அவை!

சிங்கள பௌத்த பேரினவாத எண்ணங்களின் பிரதிபலிப்பான சிறிலங்கா அரசியலமைப்பை தமிழர்களாகிய நாம் என்றும் ஏற்றுக்கொண்டதில்லை. இருந்தபோதிலும் தமிழர்களாகிய எமக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சரியான நபர்கள் மூலம் இட்டுநிரப்ப வேண்டியது அவசியமாகும்.


உலகம் ஏற்றுக்கொண்ட சனநாயக வழிமுறையில் தேர்வாகும் தமிழர் பிரதிநிதிகளின் செயற்பாடானது பலம்பெறவேண்டுமாயின் தகுதியான நபர்களின் தெரிவு இன்றியமையாதது.

அந்தவகையில் உலகத் தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புகளில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும் விடையங்களை உள்ளடக்கியதான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு அதனடிப்படையில் பொதுத் தேர்தலை சந்திக்கவுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எங்கள் தார்மீக ஆதரவினை வழங்குகின்றோம்.

1.    தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோரிக்கையின் அடிப்படையில் இரு தேசம் ஒரு நாடு என்பதே நிரந்தரத் தீர்வாக அமையும்.

2.    தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலை குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்.

3.    சுதந்திர தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தவேண்டும்.

ஈடு இணையற்ற தியாகங்களாலும் இழப்புக்களாலும் வலுப்பெற்றுள்ள தாயக விடுதலைக் கோரிக்கையை ஏற்று அதனடிப்படையில் நின்று அரசியல் தளத்தில் தளராது செயற்பட்டுவருகின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எமது ஆதரவினை வழங்குவதாக முடிவெடுத்துள்ளோம்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழர்களது தேர்தல் பங்கேற்பானது எதிர்ரெதிர் கருத்து, உணர்வு, இலட்சியம் கொண்ட இரண்டுதரப்பினர் இலங்கைத் தீவில் இருப்பதை வெளிப்படுத்துவதாகவே இருந்துவந்துள்ளது.

சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனவெறியாட்டத்தில் இருந்து எமது மக்களையும் மண்ணையும் பாதுகாக்கும் வகையில் அறவழியிலும், ஆயுதவழியிலும், அரசியல்வழியிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் எமது விடுதலைப் போராட்டத்திற்கு அந்தந்த காலகட்டங்களில் ஆதரவாக இருந்து பெரும் பலமாக விளங்கியவர்கள் நீங்கள்.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகப்பகுதியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதன் மூலமே எமது அரசியல் அபிலாசைகளுக்கு வலிமைசேர்க்க முடியும் என்று உறுதியாக நம்புகின்றோம்.

அந்தவகையில் தாயகத்தில் சூன்யமாகிப்போன அரசியல் தலைமைத்துவத்தை சரி செய்வதற்கான வேள்வியாக இப்பொதுத் தேர்தல் களத்தை நீங்கள் பயன்படுத்தி எம் இனத்தின் அபிலாசைகளை முதன்மைக் கோரிக்கையாக முன்வைத்து சமரசமின்றி போராடிவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் வெற்றியை உறுதிப்படுத்துமாறு உங்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.


நன்றி!
நோர்வே ஈழத்தமிழர் அவை

No comments:

Post a Comment