June 4, 2015

டென்மார்க் நாட்டுப் பாராளுமன்றத் தேர்தலில் முதன்முதலாக ஈழத்தமிழர் ஒருவர்!(படம் இணைப்பு)

எதிர்வரும் யூன் 18ம் நாள் நடைபெறவுள்ள டென்மார்க் பாராளுமன்றத் தேர்தலில் டென்மார்க் வாழ் தமிழ் மக்களில் 40 வீதமானோர் வாழ்கின்ற பகுதியில்- (vestjylland Storkreds: Herning, Ikast-Brande, Ringkøbing-Skjern, Skive, Holstebro, Viborg, Silkeborg, Stuer, Lemvig ) – திரு கஜேந்திரன் சிறிசுரேந்திரன் (கஜன்) அவர்கள்
போட்டியிடுகின்றார் என அறியப்படுகின்றது. 25 ஆண்டு காலமாக புலம்பெயர்ந்து டென்மார்க் நாட்டில் டெனிஸ் மக்களுடன் சமூக இணைப்பு மற்றும் நட்புறவோடு வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழ்மக்கள் மத்தியில் ஈழத்தமிழர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தலில் பங்கெடுப்பது என்பது இதுவே முதல் தடவையாகும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறான சூழலில் நாம் வாழும் நாடுகளின் அரசியல்பொருளாதார வளர்ச்சியில் பங்குகொண்டு அவற்றின் வளர்ச்சிக்கு உழைப்பதோடு தமிழினப்படுகொலைக்கு நீதிகிடைக்க குரல்கொடுக்கமுடியும் என்ற நிலைப்பாட்டில் டென்மார்க் நாட்டில் முதலாவது தடவையாக ஈழத்தமிழர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தலில் சமூக மக்கள் கட்சியில்(SF)போட்டியிடுகின்றார். அவருக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை வெற்றிகொள்ளவைப்பது தமிழ்மக்களினதும் கடமையாகும்.
அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பற்றும் பொறுப்பினைக் கொண்டுள்ள புலம்பெயர் தமிழ்மக்கள், தாம் வாழும் நாடுகளில் சனநாயக அடிப்படையிலும் அறவழிகளிலும் தமது விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற காலம் இதுவெனக் கருதுகின்றனர்.
சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பினால் தாயகத்தை விட்டு வெளியேறி புலம்பெயர்தேசங்களில் வாழுகின்ற 1500 000 தமிழ்மக்கள் தாம் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் பேணிக்காத்து போற்றி வருகின்ற அதேவேளை வாழிட நாட்டுச் சட்டதிட்டங்களையும் வழமைகளையும் ஏற்று வாழ்வதோடு அந்நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பங்குபற்றிவருகின்றனர்.

No comments:

Post a Comment