புதுவை லாஸ்பேட்டை பெத்துசெட்டி பேட்டையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இந்த கோவிலில் வழக்கம் போல் நேற்று காலை திறக்கப்பட்டு பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்தன.
அப்போது வள்ளி-தெய்வானை சிலைகளின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க சங்கிலிகள் (தாலி செயின்) காணாமல் போய் இருப்பதை பார்த்து பூசாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அறங்காவலர் குழுவினர் லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் தங்க சங்கிலிகளை திருடிய நபரின் உருவம் பதிவாகி இருப்பது தெரிய வந்தது.
காலை 7-53 மணிக்கு கோவிலுக்குள் நெற்றியில் திருநீருடன் டிப்-டாப் நபர் உள்ளே நுழைந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தபடி சுற்றும் முற்றும் பார்க்கிறான். அப்போது கோவிலில் ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. இதைத்தொடர்ந்து கருவறைக்குள் ஓடும் அவர், ஒரு சில வினாடிகளில் திரும்பி வந்து மீண்டும் பயபக்தியுடன் சாமி கும்பிடுகிறான். அவனது கையில் மஞ்சள் நிறத்தில் சங்கிலி போன்ற பொருள் தெளிவாக தெரிகிறது.
இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகளின் மூலம் அந்த நபர்தான் சாமி சிலைகளின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலிகளை திருடிச் சென்று இருப்பது தெரிய வந்தது.
அந்த நபரை கைதுசெய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment