June 14, 2015

புலிச் சட்டையுடன் திரிந்த காலம் சுதந்திரக் காற்றை சுவாசித்தோம்! முன்னாள் பெண் போராளியின் உள்ளக்குமுறல்!

பச்சைச் சட்டையுடன் திரிந்த காலம் எங்களுக்குள் ஒரு மாற்றம். பச்சை வரி வரி உடுப்புக்கு என்ன மதிப்பு இருந்தது. வன்னியில் பச்சைக் காட்டில் பச்சைச் சட்டையுடன் திரிந்தோம். எம்மைப் பாதுகாத்தது பச்சை மரங்கள்.
பெண்கள் வெளிப்பட்ட அந்த நாள்கள் பொன்னானது. பெண் விடுதலை
பெற்றுவிட்டதான ஓர் உணர்வு என்னில் ஓடிக்கொண்டே இருந்த காலம் அது. பஜிறோவில் ஏறிவரும் போது பெண்களுக்கு ஒரு சுதந்திரம் இருந்தது.
என்னை விட கூடுதலாக மக்கள் என்னைப் பார்த்தார்கள். துப்பாக்கி ஏந்தி நாம் போராடும் போது மக்கள் எம்மை அன்பாக வரவேற்று வீடு வீடாக எமக்கு விருந்து கொடுத்தார்கள். தமது பிள்ளைகளைப் போலப் பார்த்தார்கள்.
மனதில் ஓர் துணிவு எமக்கு இருந்தது. வாழ்க்கைப் பயம் அற்றுப் போனது. எது வேண்டுமானாலும் நல்ல விடயங்களாக இருந்தால் ஒற்றுமையாக செய்து முடிக்கும் வல்லமை கொண்டோம். அந்த நம்பிக்கை எமக்குள் இருந்தது.
துப்பாக்கி தோளில் தவழும் போது வாழ்க்கையில் முன் நோக்கித் தான் கூடுதலாக நகர்ந்தோம். அந்தக் காலப் பகுதியில் எமது தமிழ் உறவுகள் வாழ்க்கையை நகர்த்துவதற்காக கஸ்டப்பட்டதில்லை.
துப்பாக்கி தூக்கிப் போராடும் போது தான் குடும்பமானோம். பிள்ளைகளைப் பெற்றோம் சுமை தெரியவில்லை. சந்தோசமாக வாழ்க்கை நகர்ந்தது. கைகொடுக்க நிறையப் பேர் இருந்தார்கள். உதவி கேட்டு எவரும் வருவதில்லை.
போர்க்கள முனையில் இருந்து விடுமுறை நாளில் வீட்டுக்கு வரும் போது பாட்டி தாத்தா அம்மா அப்பா அண்ணா அக்கா தங்கச்சி தம்பி என பாசத்துக்கு அளவேயில்லை.
ஊர் மக்கள் திரண்டு வீட்டுக்கு வந்து நலம் விசாரிப்பார்கள். வரும் போது என்னை அவர்கள் பிள்ளையாக நினைத்து தின்பண்டம் எல்லாம் கொண்டுவந்து தருவார்கள். அவர்கள் என்னைப் பார்க்க அவர்களை நான் பார்க்க எமக்குள்ளே ஒரு ஒற்றுமை இருந்தது.
அந்த அழகான நாள்களை எத்தனை பேர் நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்திருக்கிறோம். நாட்குறிப்பேடு எழுதத் தூண்டியதும் அந்த விடுதலைப் போராட்ட நாள்களில் தான். சண்டையில் நான் உயிருடன் திரும்புவேனோ அல்லது எனது கள நண்பிகள் உயிரை விடுவார்களோ எனக்குத் தெரியாது.
ஆனால் இருக்கின்ற நாள்களில் முழுமையாக வாழ்ந்ததான ஒரு உணர்வு எமக்குள்ளே இருந்தது. பயிற்சியிலும் ஆறுதலிலும் விட்டுப் பிரிதலிலும் பல கதைகள் இருக்கும். அந்தக் கதை எல்லோருக்கும் புதுமையாக இருக்கும்.
பெண்களிடையே ஒரு வரம்பு மீறாத கட்டுப்பாட்டை உருவாக்கிய பெருமை எமக்கு இருந்தது. பெண்ணானவள் பெண்ணாய் வாழ்ந்தாள் என்ற பெருமையைச் சேர்த்த நாள்களை எவராலும் மறக்க முடியாது.
இன்றோ தலை முடிக்கு பூமாலை கட்டி உடலினை தங்கத்தால் நிறைத்து விலையுயர்ந்த சேலை கட்டியும் அவமானப்பட்டு நிற்கிறோம். பெண்களுக்காகப் பெண்கள் எழுச்சி கொண்ட வரலாறு ஈழத்தில் உண்டு.
� அன்று புலியை முறத்தால் அடித்தாள், இன்று அதுவாக வெடித்தால். � என்ற தமிழ் நாட்டுக் கவிஞர் அறிவுமதியின் கவிதை நினைவுக்கு வருகிறது.

ஈழத்துப் புரட்சிப் பெண்களைத் தமிழ் நாட்டுக் கவிஞர்கள் இப்படிப் புகழ்ந்தார்கள். பாரதி தமிழ்மங்கை தமிழவள் தமிழ்நிலா தமிழரசி தமிழினி போன்ற பெயர்கள் பெண்மையை வெளிப்படுத்த துணிந்த பெண்கள். தங்களுக்குச் சூடிக்கொண்ட தமிழ் பெயர்கள்.
தமிழுக்குள் மூழ்கி தமிழர்களுக்காய் போராடி தமிழ்ப் பண்பாட்டில் மேலோங்கியவர்கள் நாங்கள்.
இன்று எங்களின் வாழ்க்கையை யாராவது பார்த்தீர்களா? என்ன ஏது என்று கேட்டீர்களா? தடுப்பு முகாமில் பெண் என்று கூடப் பார்க்காமல் துன்புறுத்தப்பட்டு விடுவித்தார்கள். விடுவிக்கப்பட்டும் இயல்பு வாழ்வை வாழ விடாது சோதனை என்ற பெயரில் எம்மை துன்புறுத்துகிறார்கள்.
நாம் தங்கியிருக்கும் வீட்டுக்கு புலனாய்வாளர்கள் என்று சொல்லி வருபவர்கள் பெண்களிடம் கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்கிறார்கள். அன்றாட வாழ்வின் கஸ்டங்களை விட இராணுவ புலனாய்வாளர்களினாலும் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றோம்.
போராட்ட காலங்களில் எம்மை சமூகம் ஏற்றுக் கொண்டது. இன்று எங்களை கைவிட்டுள்ளது. பிறை நிலா நிலவில் வெண் பரப்பு முற்றத்து மணலில் பாட்டி சோறு ஊட்டிச் சொல்லும் கதைகள் எல்லாம் பாழாகி விட்டன.
எல்லாக் கதைகளையும் பொய்யாக்கி விட்டோம். எமக்கான கதையைப் புதுப்பிக்க .ஆரம்பிக்க முன்னரே நாம் உடைந்து போனோம். எப்படி எங்கள் பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்லப் போகிறோம்? பொய்யான கதை சொல்லி சான்விச்சா ஊட்டப் போகிறோம்.
வெளிப்பட்டவர்களுக்கான வரலாறு ஒன்று இருக்கிறது. அதில் எவ்வளவு கஸ்ரங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கிறது என்ற உண்மை கண்டிப்பாக பதிவாகும்.
நாம் பட்ட துன்பம் எம்முடன் போய்விடவேண்டும் என்று பார்க்கிறோம். ஆனால் இன்று நிலைமை இப்படி இல்லை. நான் பட்ட துன்பங்களை எமது பிள்ளைகளும் அனுபவிக்கும் போது தான் எமக்கு வலி அதிகமாக இருக்கிறது.
இந்த வலிக்கு மருந்து போட யாருமில்லை. எங்கள் உணர்வையும் கற்பனைகளையும் சிதைக்கும் அரசு எமக்கான வாழ்க்கையைத் தருமா? முள்ளிவாய்க்காலிலேயே நாம் செத்து மடிந்திருக்கலாம். இங்கு வந்து அணு அணுவாய்த் துன்பப்படுகின்றோம்.
எங்கள் இனமே எங்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறது. நாங்கள் போராட வழியைக் காட்டியவர்கள் ஏன் போராடினீர்கள் என்று இப்போது கேட்கிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஒவ்வொரு தையையும் எதிர்பார்த்துக் காத்திருந்தும் தையும் பிறக்கவில்லை வழியும் பிறக்கவில்லை.
அரச அலுவலகங்கள் தொடக்கம் பாடசாலை வரை எங்களை எங்கள் பிள்ளைகளை குற்றவாளிகள் போல் பார்க்கிறார்கள். மக்களுக்கு அல்ல சிங்கள அரசுக்கு சேவை செய்யும் பலரால் எப்படி தமிழ் மக்களின் சேவையை நிறைவேற்ற முடியும்.
இதற்குள் எப்படி எங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் போகிறார்கள். ஈழத்தில் பெண்களாலேயே பெண் விடுதலையும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
அரச அலுவலகங்களில் தலைமைப் பதவி வகிக்கும் பெண்கள் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செல்பவர்கள் என்று முன்னாள் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி கூறியிருந்தார்.
பெண்களால் விடிவு காணப் புறப்பட்ட ஈழம் இன்று பெண்களால் அடிமை யுகத்துக்குச் செல்கிறதா? பண பதவி ஆசைக்கு எதையும் விட்டுக் கொடுக்கும் தறுவாயில் இருக்கிறோமோ?
பெண்களே சுயபுத்தியோடு கொஞ்சம் சிந்தியுங்கள். நாங்கள் பெண் விடுதலைக்காகப் போராடினோம். இன்று கஸ்டப்படுகிறோம் ஆனாலும் எம்மிடம் நல்ல சமுதாய சிந்தனை இருக்கிறது. அதனை நீங்கள் வளர்ப்பீர்களா?

துன்னாலைச் செல்வம்

No comments:

Post a Comment