125 தொகுதிகள் - 75 மாவட்ட விகிதாசாரம் - 25 தேசிய விகிதாசாரம் - மொத்தம் 225 என்று இருந்த தேர்தல் முறை திருத்த கணக்கு இப்போது மாறி 145 தொகுதிகள் - 55 மாவட்ட விகிதாசாரம் - 37 தேசிய விகிதாசாரம் - மொத்தம் 237 என அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது.
அதாவது 125 ஆக இருந்த தொகுதிகள் 145 ஆக அதிகரிக்கப்பட்டு 20 தொகுதிகள் கூடியுள்ளன. இது எங்கள் உறுதியான விட்டுக்கொடுக்கா போராட்டத்துக்கு கிடைத்துள்ள முதற்கட்ட வெற்றி.
மூன்று நாட்களுக்கு முன்னர் இருந்த நிலைமையை இது முற்போக்கான நிலைமை என்பது நிச்சயம். அடுத்த கட்டமாக பாராளுமன்றத்தில் இந்த மசோதா கொண்டு வரப்படும் போது அவசியமானால் இன்னமும் தொகுதிகளை கூட்டுவோம்.
அதேவேளை இரட்டை வாக்கு முறைமை இன்னமும் ஏற்று கொள்ளப்படவில்லை. இது தொடர்பான சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளின் போராட்டம் தொடரும் என ஜமமு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
இது தவிர நாட்டின் இன, அரசியல், பொருளாதார, சமூக பன்மை தன்மை யதார்த்தத்தை பிரதிபலிக்கும் முகமாக தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழு செயற்படவேண்டும் எனவும், ஒரு மாவட்டத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை இனத்தைவிட மாற்று இன, மத ரீதியான சிறுபான்மை மக்கள் வாழும் பட்சத்தில் அவர்களது பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் முகமாக எல்லை நிர்ணய ஆணைக்குழு புதிய தொகுதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அமைச்சரவை ஆவணம் உறுதிபடுத்தியுள்ளது.
தென்னிலங்கையில் பெரும்பான்மை இனத்துடன் கலந்து வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் சார்பாக, இவற்றையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
தேர்தல் திருத்த செயற்பாடுகளில் தொடர்ச்சியாக அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளும் ஒன்றுபட்டு செயலாற்றிய காரணத்தாலேயே இந்த முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது என நான் நினைக்கின்றேன்.
முழு வெற்றி கிடைக்க நாம் தொடர்ந்தும் இலக்கை நோக்கி செயற்பட தயாராக உள்ளோம். தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி நிகழ்ச்சி நிரல்கள் காரணமாக எமது ஐக்கிய முற்போக்கு முயற்சிகளை குழப்ப முயல வேண்டாம் என அனைவரையும் நான் கோருகிறேன்.
எங்களுடன் இந்த தேர்தல் முறை சீர்திருத்த போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மட்டுமல்ல, ஜேவிபி, களபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி, ஐக்கிய சமவுடமை கட்சி, நவசமசமாஜ கட்சி, ஹெல உறுமய ஆகியவையும் இணைந்து கொண்டுள்ளன.
இவற்றையும் இணைத்துக் கொள்ள நாம் அதிகம் சிரத்தைகள் எடுத்துக்கொண்டோம். அந்த முயற்சிகள் நற்பலன்களை அளித்து வருகின்றன.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் நானும், எங்கள் பிரதி தலைவர்களான அமைச்சரவை அமைச்சர் பழனி திகாம்பரமும், இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனும் கடந்த மூன்று நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட இரகசிய கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு ஆளும் மற்றும் எதிரணி அரசியல் கட்சி தலைவர்களையும், ஜனாதிபதியின் தேர்தல் திருத்த வரைபை தயாரிக்கும் விற்பன்னர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம்.
அந்த பேச்சுவார்த்தைகளின் முழு விபரங்களையும் பகிரங்கமாக வெளியிட முடியாது என்றாலும், அவை சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவ அவசியங்களை பெரும்பான்மை தலைவர்களுக்கு புரிய வைக்க மிக சிறப்பாக வழி செய்து வருகின்றன என்பதை மட்டும் இப்போது கூறி வைக்கின்றேன்.
No comments:
Post a Comment