June 1, 2015

அம்பாறையில் வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து தியை நோக்கிய பயணம் (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் நீதியை நோக்கிய பயணம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று அக்கரைப்பற்று நகரில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு நிகழ்வின்போது பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அக்கரைப்பற்று நகரில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கு சில மணிநேரம் தரித்து நின்றனர்.
கவனயீர்ப்பில் கலந்து கொண்டவர்கள் மற்றும் பிரதான பாதை வழியாக பயணித்தவர்களிடம் வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து அதற்காக அதிக பட்ச தண்டனையுடனான நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் வகையில் எழுதப்பட்ட மடலில் பல நூற்றுக் கணக்கானோர் கையொப்பமிட்டனர்.
கவனயீர்ப்பில் கலந்து கொண்டவர்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள், விசாரணையை துரிதப்படுத்தி தீர்ப்பை துரிதப்படுத்துங்கள், சந்தேக நபருக்கு 14 நாட்கள் தடுப்புக் காவல் வழங்கப்பட்டு பின்னர் சாட்சியங்கள் போதவில்லை என வழக்கை தள்ளுபடியை தடுக்க வேண்டும்,
1995-1999ஆம் ஆண்டு தண்டணைச் சட்டக்கோவைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட பெண்கள் சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு உச்ச பட்ச தண்டணை வழங்குவதற்கான சட்டக்கோவை அமுல்படுத்த வேண்டும்,
 இலங்கையில் எந்த இடத்திலும் பாலியல் வன்முறை இடம்பெற்றால் துரித விசாரணையும் அதற்கான நீதியும் உடன் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட வாசகங்ளை போராட்டக்காரர்கள் தாங்கி நின்றனர்.
இக்கவனயீர்ப்பு போராட்டத்தின் போது,
சமூகத்தில் உள்ள பெண்கள், ஆண்கள் அனைவரும் இணைந்து சம்பந்தப்பட்ட சட்டத்துறை,வைத்தியத்துறை,பாதுகாப்புத் துறை,அரச மற்றும் அரச சார்பற்ற துறைகளுக்கு பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான பயணத்தை தொடருவோம் என அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற துண்டுப் பிரசுரங்களை அக்கரைப்பற்று நகரில் விநியோகிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment