May 22, 2015

ஜெயலலிதா நாளை முதலமைச்சராக பதவியேற்பு!

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா நாளை பதவியேற்றுக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் மூன்று மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை
விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார்.
இதனிடையே, ஜாமீனில் இருந்த ஜெயலலிதாவை, மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர்தான் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கடந்த 11ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார். இந்த தீர்ப்பு கருணாநிதி மட்டுமின்றி தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அருண் ஜெட்லி சந்திப்புக்கும், ஜெயலலிதா விடுதலைக்கும் தொடர்பு இருப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனை தமிழக பாஜக திட்டவட்டமாக மறுத்தது.
விடுதலைக்கு பின்னர் ஜெயலலிதா, முதல்வராக பதவியேற்க இருந்த தடை நீங்கியது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க வசதியாக அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னையில் இன்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜெயலலிதா, அதிமுக சட்டப்பேரவை தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் இராஜினாமா செய்தார். இவரது இராஜினாமாவை தொடர்ந்து ஆட்சி அமைக்க வரும்படி ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசையா அழைப்பு விடுத்தார். மேலும் அமைச்சர்கள் பட்டியலை சமர்ப்பிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த அழைப்பை தொடர்ந்து, ஜெயலலிதா நாளை காலை 11 மணிக்கு முதல்வராக பதவியேற்க உள்ளார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment