May 26, 2015

வித்தியா கொலை தொடர்பாக பிரபல சிரேஸ்ட சட்டத்தரணி தவராஜா சொல்வது என்ன?

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கொலை ஏற்படுத்தியுள்ள கண்டனங்களும், கோப அலைகளும், ஆர்ப்பாட்டங்களும், வாதப் பிரதிவாதங்களும் இதுகாலவரை மக்களின் உள் மனங்களில் கொப்பளித்துக்கொண்டிருந்த தாங்கொணாத் துயரத்தின் வெளிப்பாடே.


அதனைச் சகல தரப்பினரும் உணர்ந்து நிதானமாகச் சிந்தித்து இவ்வாறானதொரு அவலம் எதிர்காலத்தில் நாட்டின் எப்பகுதியிலேனும் நடைபெறாதிருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எல்லோரதும் வேண்டுகோள். - இவ்வாறு தெரிவித்துள்ளார் சிரேஷ்ட மனித உரிமைகள் சட்டத்தரணியும் தமிழரசுக்கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைத் தலைவருமாகிய கே.வி.தவராசா. இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு நாட்டில் அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றபோதிலும் இந்த அமைதி தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ளதா என்ற சந்தேகத்தையே ஈவிரக்கமற்ற இக் கொலை ஏற்படுத்தியுள்ளது. கொலைச் சூத்திரதாரிகளின் பின்னணியில் சில ஆயுதக்குழுக்களும் வேறு சில சமூகவிரோதச் சக்திகளும் இருக்கின்றன என்று பரவலாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்து மிகுந்த அச்சம் தருவதாக இருக்கின்றது.
மகளைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்யச் சென்றபோது பொலிஸ் நிலையத்தில் வித்தியாவின் தாயார் நடத்தப்பட்ட முறையும், வித்தியாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு அவ்விடத்திற்கு பொலிஸார் வருதற்கு எடுத்துக்கொண்ட காலதாமதம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர் தப்பித்துக்கொள்ளவும் பின் கொழும்பில் கைதுசெய்யப்படவேண்டிய நிலைக்கு இட்டுச்சென்ற பின்னணியும் பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எந்தவித அச்ச உணர்வோ மனிதாபிமானமோ அற்ற முறையில் மனிதகுலம் வெட்கித் தலைகுனியக்கூடிய வகையிலான இந்த ஈனச் செயலைப் புரிந்தவர்களின் குற்றம் நீதியின் முன் நிருபிக்கப்பட்டு அதியுச்ச தண்டனை வழங்கப்படவேண்டும். அந்த நோக்கம் நிறைவேற்றப்படுவதற்கு வேண்டப்படும் சகல உதவிகளையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் அதன் வாயிலாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் வழங்குவதற்கு நான் தயாராகவுள்ளேன். அதேசமயம் இந்தத் துயர சம்பவத்தைத் தமது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கும் கல்நெஞ்சக்காரர்களையும் வக்கிரபுத்திக்காரரையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
தென்னிலங்கைச் சிங்களச் சகோதரர்கள் இத் துயரத்தில் பங்குகொண்டு கண்டனச் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்ற அதேவேளை அவர்களது தலைவர்கள் என்று கூறிக்கொண்டு தமது இனவாதப் பசிக்கு இந்தத் துயரத்தைத் தீனியாக்க விழையும் முன்னாள் ஜனாதிபதி மற்றும் மக்களால் நிராகரிக்கப்பட்ட சில தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரையும் மக்கள் இனங் கண்டுகொண்டு நிராகரிக்கவேண்டும். இவர்களது செயற்பாடுகள் மிகுந்த கண்டனத்திற்குரியன. கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட துன்ப துயரங்களிலிருந்து மீண்டுவரத் தத்தளித்துக்கொண்டிருக்கும் எமது சமூகத்தை மீண்டும் ஒரு துயரப் படுகுழியுள் வீழ்த்தியுள்ள இக் கோரச் சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட சகலரும் நீதி தேவதையின் முன் பதில் சொல்லியே ஆகவேண்டும். அதற்கான எனது ஆதரவும் ஒத்துழைப்பும் தொடரும்.- என்றுள்ளது.

No comments:

Post a Comment