May 21, 2015

ஆந்திராவில் 20 தமிழர் படுகொலை ; அம்பலப்படுத்திய செல்போன் அழைப்புகள்!

செம்மரங்களை வெட்டியதாக 20 அப்பாவி தமிழர்களைப் படுகொலை செய்த விவகாரத்தில் ஆந்திரா அரசு தெரிவித்த அனைத்துமே கட்டுக் கதைகள்தான் என்பதை பலியானோரின் செல்போன் அழைப்பு விவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளது.


திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை கடந்த மாதம் 7-ந் திகதி ஆந்திரா காவல்துறை மற்றும் வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்தனர். 

ஆனால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் முன்னரே கைது செய்யப்பட்டு கொடூர சித்ரவதைகளுக்குக்குப் பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டி இருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆந்திரா போலீசாரின் போலி என்கவுண்ட்டரை அம்பலப்படுத்துகிற சாட்சிகளும் தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த படுகொலை தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேடு படுகொலையானோரின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து ஆந்திரா பொலிசின் தெரிவித்த அனைத்துமே கட்டுக் கதைகள் என அம்பலப்படுத்தியுள்ளது.

இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

செம்மரங்களை ஏப்ரல் 5-ந் திகதி முதலே தமிழர்கள் வெட்டியதாக ஆந்திரா காவல்துறை ஒரு சிசிடிவி சாட்சியத்தை வெளியிட்டிருந்தது.

ஆனால் படுகொலை செய்யப்பட்டோரில் வேட்டகிரிபாளையம் பெருமாள், கலசமுத்திரம் பழனி, காந்திநகர் மகேந்திரன், படவீடு முனுசாமி ஆகியோரது செல்போன் அழைப்புகள் மூலம் அனைவருமே ஏப்ரல் 6-ந் திகதி தான் தமிழகத்தில் இருந்து புறப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6-ந் திகதி பகல் முழுவதும் இந்த மூவரது செல்போன்களுக்கும் வந்த பிற செல்போன் அழைப்புகளும் இதனை உறுதி செய்கின்றன.

அனைவருமே 6-ந் திகதி இரவில்தான் போலீசாரால் ஆந்திரா- தமிழக எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்பும் பின்னரும் இந்த மூவரது செல்போன்களுக்கும் தற்போது சாட்சியமாக இருக்கும் மூவரது செல்போன்களில் இருந்து அழைப்புகள் சென்றுள்ளது.

இதேபோல் வேறு சிலரது செல்போன்களுக்கும் எழுதப்படிக்கத் தெரியாத இவர்களது செல்போன்களில் இருந்து ஆந்திரா போலீசாரே எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியும் இருந்துள்ளனர்.

அதாவது இந்த மூன்று பேர் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்த தமிழர்களையும் ஆந்திராவுக்குள் வரவழைத்து சுட்டுக் கொல்லவே ஆந்திரா போலீஸ் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் மூவரும் போலீசில் சிக்கிக் கொண்டதை உணர்ந்து கொண்டவர்கள் தமிழகத்துக்கே திரும்பி வந்துள்ளனர்.

ஏப்ரல் 7-ந் திகதி அதிகாலையில் மூவரது செல்போன்களும் ஆந்திராவின் சந்திரிகிரி வனப்பகுதியில் இருந்ததாக காட்டுகிறது...

அதாவது சந்திரகிரி வனப்பகுதியில் செம்மரங்களே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா கூறுவது போல ஏப்ரல் 5-ந் திகதி முதல் தமிழர்கள் மரம் வெட்டவில்லை என்பதும்

ஏப்ரல் 6-ந் திகதி தமிழகத்தில் இருந்து புறப்பட்டு சென்றவர்களை வழிமறித்து கைது செய்து சுட்டுப் படுகொலை செய்து செம்மரமே இல்லாத காட்டில் ஆந்திரா காவல்துறை வீசியிருப்பதும் அம்பலமாகியுள்ளது.

No comments:

Post a Comment