April 17, 2015

கூட்டமைப்பை வலுப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஆனந்தன் எம்.பி ( படங்கள் இணைப்பு)

துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தென்னியன்குளம், புத்துவெட்டுவான் கிராமங்களின் அபிவிருத்தி சங்கங்களுக்கு, 2014ம் வருடத்துக்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தளபாடங்களை வழங்கினார்.
17.04.2015 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மக்களின் குறைகளை கேட்டறிந்த போது, குறித்த இவ்விரு கிராமங்களினதும் மக்கள் தமது பகுதிகளில் பாதைகள் புனரமைக்கப்படாமை, போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், வீட்டு வசதிகள் இன்மை, பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டியதுடன், அவற்றை நிவர்த்தி செய்துதவுமாறும் வலியுறுத்தினர்.
இதன்போது ஆனந்தன் எம்.பி, இப்பகுதிகள் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டவை. புதிய அரசின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் இப்பகுதிகளுக்கான அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். உங்களது குறைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி தீர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததோடு, கூட்டமைப்பு கட்டமைப்பாக இல்லாததும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஒரு தடையான விடையமாகும் என்றும் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  
பல ஆயிரம் போராளிகள், பொதுமக்களின் தியாகங்களின் பலனாக இன விடுதலை, கௌரவமான அரசியல் தீர்வு என்பவற்றை பெறுவதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ் தேசியக்கூட்டமைப்பாகும். கடந்த 13 வருட காலமாக தமிழ் மக்களின் ஆணையைப்பெற்றுள்ள கூட்டமைப்புக்கு இன்றுவரை எவ்வித யாப்போ, புரிந்துணர்வு ஒப்பந்தமோ கிடையாது. சாதாரணமாக ஒரு கிராமத்தில் இருக்கக்கூடிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கிராம அபிவிருத்தி சங்கம், ஆலய பரிபாலன சபைக்கே யாப்புகள் இருக்கின்ற நிலையில், வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் இனத்தின் இருப்பை தீர்மானிக்கின்ற அரசியல் சக்தியான தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு எவ்வித யாப்பும் இல்லை என்பது வாக்களித்த மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும்.
எவ்வித யாப்பும், புரிந்துணர்வு ஒப்பந்தமும் இல்லாத நிலையிலேயே கூட்டமைப்பு இயங்கி வருகின்றது. இன்று கூட்டமைப்பின் தலைவிதியை ஒருசிலரே நிர்ணயிக்கின்றனர். வெளிப்படத்தன்மை இல்லை. ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கப்படாத நிலைமை காணப்படுகின்றது.
மிகநீண்ட காலமாக கூட்டமைப்புக்குள் இருக்கும் ஏனைய அங்கத்துவ கட்சிகளும் இந்த விடையங்களை கூடிப்பேசி, பல தடைவைகள் விவாதித்து தீர்வு காண முடியாத நிலையிலேயே மக்களாகிய உங்களிடம் இந்த பிரச்சினையை முன்வைக்கின்றோம். கடந்த கால தேர்தல்களில் நீங்கள் மிகவும் அவதானிப்புடன் வாக்களித்தது போன்று, இனிவரும் காலங்களிலும் செயற்பட வேண்டும்.
இன்று கூட்டமைப்பை பதிவு செய்ய முடியாது என்று கூறுபவர்கள், தேர்தல் வந்ததும் கூட்டமைப்பு என்று கூறிக்கொண்டு வாக்கு கேட்டு வந்து உங்களின் வாக்குகளை பெற்ற பின்னர், மறுபடியும் கூட்டமைப்பை கைவிட்டுவிட்டு தமது தனிக்கட்சியை மட்டும் வளர்க்கும் வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இனியும் நீங்கள் அனுமதிக்கக்கூடாது.
ஏனெனில் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னால் ஒவ்வொரு குடும்பங்களினதும் அளப்பரிய தியாகங்கள் இருக்கின்றன. எனவே உங்கள் உறவுகளின் இரத்தம் கண்ணீருடன் எவரும் விளையாடுவதை அனுமதிக்ககூடாது.
இதுவரை காலமும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு உங்களிடம் கேட்ட நாங்கள், இப்போது கூட்டமைப்பின் ஒற்றுமையை வலியுறுத்துமாறு உங்களிடம் கேட்க வேண்டிய நிலையில், கூட்டமைப்புக்குள் இருப்பவர்கள் ஒருசிலரதும், அவர்களது கட்சியினதும் அரசியல் செயற்பாடுகள் இருப்பது வேதனையளிக்கிறது.
யாப்பு, புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டு பலப்படுத்தப்பட்டால் மாத்திரமே அரசுக்கும், சர்வசேத்துக்கும் அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை காண முடியும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் போதே, அன்றாட பிரச்சினைகளிலிருந்து அரசியல் தீர்வு வரைக்கும் எதனையும் சாதிக்க முடியும்.
எந்தவொரு போராட்டமும் வெற்றி பெறுவதற்கு அந்த மக்களை பிரநிதித்துவப்படுத்துகின்ற கட்சி பலம் மிக்கதாகவும், கொள்கை பற்றுள்ளதாகவும், திறமை மிக்கதாகவும், ஆளுமை மிக்கதாகவும், பல்வேறு உட்கட்டமைப்புகளை கொண்டதாகவும், ஒரு அரசாங்கத்துக்கு நிகரானதாகவும், ஜனநாயக பண்புகளை கொண்டதாகவும் இருக்க வேண்டும். இதற்கு மக்களை வழிநடத்தும் தகுதி இருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் அந்த மக்கள் போராட்டங்கள் வெற்றி பெற்றதில்லை என்றும், இத்தகைய பண்புகள் இருந்தால் எந்த சக்தியாலும் கூட்டமைப்பை பிரிப்பதற்கோ உடைப்பதற்கோ முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் துணுக்காய் பிரதேசசபை தவிசாளர் ராஜரட்ணம், உறுப்பினர்கள் அமிர்தலிங்கம், சுகந்தன், முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் பா.நவரட்ணம், கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும், கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

No comments:

Post a Comment