கைதடிப் பகுதியில் இரண்டு பெண்களை தாக்கி, அவர்களின் ஆடைகளைக் கிழித்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரம், புதன்கிழமை (23) உத்தரவிட்டார்.
கைதடி பகுதியிலுள்ள சனசமூக நிலையமொன்றில், கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில், இரண்டு தரப்பினர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த பெண்ணொருவர் உட்பட்ட 5 பேர் கொண்ட கும்பல், அப்பகுதியைச் சேர்ந்த 2 பெண்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், அவர்களின் ஆடைகளையும் கிழித்துள்ளனர்.
படுகாயமடைந்த பெண்கள், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர், தாக்குதல் சம்பவம் குறித்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிஸார், 5 சந்தேகநபர்களையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை செய்த பின்னர், பொலிஸ் பிணையில் விடுவித்திருந்தனர்.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் நீதவானுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட ஐவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் மூவர் (இரண்டு ஆண்கள் ஒரு பெண்) நீதிமன்றில் ஆஜராகியமையையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், ஏனைய இருவரையும் விரைந்து கைது செய்யுமாறும் பொலிஸாருக்கு பணித்தார்.
No comments:
Post a Comment