April 19, 2015

புலம்பெயர் மக்களின் உதவிகள் எமது மக்களுக்கு ஆறுதலை தரவல்லன: சிறீதரன் எம்.பி!(படம் இணைப்பு)

புலம்பெயர் மக்களின் உதவிகள் எமது மக்களுக்கு எப்பொழுதும் ஆறுதலை தரவல்லனவாக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் நாட்டில் இயங்கும் புலம்பெயர் மக்களின் அமைப்பான அன்னை திரேசா நற்பணி மன்றம் யாழ்ப்பாணத்தில் வறுமை போரினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஊடாக துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
புலம்பெயர் மக்களின் உதவிகள் எமது மக்களுக்கு எப்பொழுதும் ஆறுதலை தரவல்லனவாக இருக்கின்றது. நல்ல உள்ளங்களை படைத்த பலர் அன்று தொடக்கம் இன்றுவரை எமது மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்து வருகின்றனர்.
இன்றுவரை அரசாங்கங்கள் போரின் பின்னதாக தமிழ் மக்களின் மீள்குடியேற்றங்களை பூரணப்படுத்தவில்லை. அபிவிருத்திகளும் முழுஅளவில் மக்களுக்கு போய்ச்சேரவில்லை. அரசியல் பழிவாங்கலுக்கு போரினால் பாதிக்கப்பட்ட ஏராளம் குடும்பங்கள் உள்ளாக்கப்பட்டுள்ளன.
வீட்டுத்திட்டம் வாழ்வாதாரம் வேலை வாய்ப்பு உட்பட பலவிடயங்களில் மக்கள் பழிவாங்கப்பட்டுள்ளார்கள். இன்றுவரை சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பங்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை. காணாமல் ஆக்கச் செய்ப்பட்டவர்கள் பற்றி இன்னும் நீதி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்னும் துயரோடு வாழும் மக்களுக்கு இப்படியான உதவிகள் ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகின்றது என்றார்.
வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட சமயம் பிரான்ஸ் அன்னை திரேசா அமைப்பினர் வடக்கு கிழக்கில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பல்வேறு வாழ்வியல் முன்னேற்றங்களுக்கு உதவுவதாக ஒப்புக்கொண்ட நிலையில் யாழ்ப்பாணம் வந்திருந்த அந்த அமைப்பின் தலைவர் காளிதாஸ் முதற்கட்டமாக இந்த துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார்.
யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்னை திரேசா அமைப்பின் தலைவர் காளிதாஸ் கலந்து கொண்டதுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தலைவர் தனிநாயகம் துணைத் தவிசாளர் செந்தூரன் சென்பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் அருட்தந்தை ஜெரோ செல்வநாயகம் மற்றும் மாணவர்கள் பெற்றார்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment