April 10, 2015

தொப்புள் கொடி உறவுகள் 20 பேர் ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது உலகத் தமிழர்களின் கூட்டு ஆன்மாவை ஆழமாகத் தாக்கியுள்ளது.. கண்டனச் செய்தியில் ரவிகரன்!!

தமிழக தொப்புள்கொடி உறவுகள் 20 பேர் ஆந்திராவில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது தமிழின ஆன்மாவை ஆழமாகத் தாக்கியுள்ளது என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

ரத்தத்தை உறைய வைக்கும் இச்சம்பவத்தின் பின்னுள்ளவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையின் முழு வடிவம் பின்வருமாறு.
ஆந்திராவில் 20 அப்பாவித் தமிழர்கள் சுட்டுக்கொலை என்கிற செய்தியைக் கேட்டபோது அதிர்ச்சியில் உறைந்துபோனோம். அதன்பின்னர் வெளிவந்த புகைப்படங்களும், முற்றிலும் பொருத்தமற்று முன்வைக்கப்படுகிற நியாயப்படுத்தல்களும் தமிழர் மனங்களில் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட,மேற்கொள்ளப்பட்டு வருகிற இனப்படுகொலையின் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கும் உலகத் தமிழர்கள் ,இச்சம்பவத்தால் துவண்டு போயுள்ளனர். நியாயமே அற்று நடாத்தப்பட்ட இந்த படுகொலையானது தமிழின ஆன்மாவில் அழிக்கமுடியாத வடுவை ஏற்படுத்தி நிற்கின்றது.
எப்போதும் அமைதியை நாடி நிற்கிற தமிழர்கள் மீது எதற்காக இவ்வாறு வன்முறைகள் இழைக்கப்படுகின்றன என்று வேதனையுற வைக்கிறது.
இந்த மனிதகுலப் படுகொலையின் பின் உள்ளோர் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.அது ஒன்றே நீதியின் இருப்பை வெளிக்காட்டி பிராந்தியத்தின் அமைதியை நீண்ட காலம் காக்கவல்லது .
இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தோடும், தாங்கமுடியாத வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும் தமிழக தொப்புள் கொடி உறவுகளோடும் நாம் உணர்வால் இணைந்திருக்கிறோம்.
என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment