லண்டனில் வரும் 18ஆம், 19ஆம் நாட்களில் நடைபெறவுள்ள பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றிய மாநாட்டில் பிரதமஅதிதியாக சிங்கள தேசத்தின் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அழைக்கப்பட்டிருப்பதற்கு பிரித்தானியாவாழ் தமிழீழ மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான சுவாமிநாதன், சிங்கள-பௌத்த இனவாதிகளான டி.பி.விஜேதுங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகத் திகழ்ந்ததோடு, 1994ஆம் ஆண்டு யூன் மாதம் விஜேதுங்கவால் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதன் பின்னர் 2002ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தேசிய சேமிப்பு வங்கியின் தலைமை மேலாளராக நியமிக்கப்பட்ட சுவாமிநாதன், 2004ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கலைக்கப்படும் வரை அப்பதவியை வகித்தார்.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பொதுமக்களின் வாக்குகள் எவற்றையும் சுவாமிநாதன் பெறாதபோதும், அவருக்கு ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட சிபாரிசின் அடிப்படையில் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட மனோ கணேசன் அவர்களுக்குத் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க மறுத்த அதே ரணில் விக்கிரமசிங்க, தனது தனிப்பட்ட சிபாரிசின் அடிப்படையில் அப்பொழுது அதே பதவியை சுவாமிநாதனுக்கு வழங்கியிருந்தார்.
இவ்வாறு சிங்கள இனவாதிகளுக்கு அடித்தொண்டு புரியும் ஒருவரைப் பிரதம அதிதியாக பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் அழைத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என்று பிரித்தானியாவாழ் தமிழீழ மக்கள் மத்தியிலும், அமைப்புக்களிடமிருந்தும் எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.
இது குறித்து இலண்டன் முதல் ஜெனீவா வரை அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த முன்னணி தமிழ்த் தேசிய மனிதநேய செயற்பாட்டாளர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், பிரித்தானியாவில் உள்ள சைவ ஆலயங்களுக்குள் ஊடுருவும் முயற்சியில் சிங்கள அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும், இதற்குத் துணைபோகும் வகையிலேயே பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் செயற்பாடு அமைந்திருப்பதாகவும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதேநேரத்தில் இது தொடர்பாகப் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான செந்தில் என்பவர் கருத்து வெளியிடுகையில், சுவாமிநாதனை பிரதம அதிதியாக அழைக்கும் முடிவை பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் மீளப்பெறத் தவறும் பட்சத்தில், சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் மாநாடு நடைபெறும் இடங்களின் முன்பாக முற்றுகைப் போராட்டங்களை பிரித்தானியாவாழ் தமிழீழ மக்கள் முன்னெடுக்கும் நிலைதோன்றும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment