March 5, 2015

உரிமை இழந்தோம்.. உடமை இழந்தோம்.. உணர்வை இழக்கலாமா? - புகழேந்தி தங்கராஜ்!

எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம் தமிழனை.....
விமானத்திலிருந்து குண்டு வீசிக் கொல்லலாம்....
உலகே தடை செய்த கொத்துக் குண்டுகளால் கொல்லலாம்....
உணவுப் பொருள் சப்ளையை நிறுத்தி பட்டினி போட்டுக் கொல்லலாம்.....

இந்த இடத்தில் தாக்கமாட்டோம் - என்று அறிவித்துவிட்டு, அந்த இடத்தில் திரள்வோரைத் திரள் திரளாகக்  கொன்று குவிக்கலாம்....
மருத்துவமனைகள் மீதும் பள்ளிகள் மீதும் குண்டுவீசி குவியல் குவியலாகக் கொல்லலாம்....
விண்ணிலிருந்து குண்டு வீசி, பால்பவுடருக்காக கியூ நிற்கும் தாய்மார்களை  ரத்தச் சேற்றில் மூழ்கச் செய்யலாம்.....
பாஸ்பரஸ் குண்டுகளால் பற்றியெரியச் செய்து, அடுத்த நொடியே சாம்பலாக்கலாம்.....
பேரோசை எழுப்பும் குண்டுகள் மூலம் மலர்களையொத்த  மழலைகளின் தொப்புள் கொடி கிழித்து தாண்டவமாடலாம்....

என்ன கொடுமை இது - என்று நீங்கள் கொதித்துவிடக் கூடாது.
நீங்கள் என்றால் நீங்கள் மட்டுமில்லை.
உலகில், ஐ.நா. உட்பட ஒரு பயல் ஒரு வார்த்தை கேட்டுவிடக்கூடாது.
அப்படியெல்லாம் கேட்டுவிட்டால் இலங்கையின் ஆண்மை, அதாகப்பட்டது இறையாண்மை, என்ன ஆவது?
ஒன்றரை லட்சம் உயிர்களைக் காட்டிலும், சிங்கத்துக்குப் பிறந்த அந்த நரிகளின் இறையாண்மை உன்னதமானதா இல்லையா?

இலங்கைக்கு இருக்கிற இறையாண்மையைப் போன்ற ஏதோ ஒரு ஆண்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இருக்கவேண்டும். ஒருவேளை அந்த அமைப்புக்கு அப்படியொன்று இல்லாவிட்டாலும்,  சுமந்திரன்களுக்கு இருக்கிறது அது. 

விதம் விதமான உத்திகளைப் பயன்படுத்தி விரட்டி விரட்டிக் கொன்று குவிக்கலாம் தமிழனை....
லட்சக்கணக்கான உடல்களை புல்டோசரால் உழுது புதைக்கலாம்....
கேட்கக் கூடாது நீங்கள்!
அதுமட்டுமல்ல... இன்னொரு உரிமையும் உங்களுக்குக் கிடையாது.

'இதை எப்படி இனப்படுகொலை என்று சொல்லலாம்' என்று உங்கள் மீதே சீறிப்பாயும் சுமந்திரனைப் பார்த்து சுண்டுவிரலைக்கூட நீங்கள் நீட்டி விடக் கூடாது... 
ஒன்றரை லட்சம் உறவுகள் கொல்லப்பட்ட கோபத்தில், கொலையாளிகளுக்கு வாய்தா வாங்கிக் கொடுக்கும் சுமந்திரனைப் பார்த்து 'துரோகி' என்று சுட்டுவிரலை நீட்டி விட்டீர்களென்று வையுங்கள்...... தமிழினத்துக்காக  உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்திருக்கும் அந்த மனிதரின் எடுபிடிகள் உங்கள் மீது எகிறி விழுவார்கள்.

அலரி மாளிகையின் இந்த ஆஸ்தான  சாமியாடிகளின் ஆட்டத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை, ஈழத்து இளைஞர்களும் புலம்பெயர் இளையோரும்! "நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வஜனம் கிஜனமெல்லாம்   பேசிக்கொண்டிராமல், சுமந்திரனுக்கு எது தகுந்ததோ அந்த  'மரியாதை'யைத் தந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். 

உலகெங்கும்  சிதறிக்கிடக்கும் தமிழினம், ஈழத் தாயகத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட  இனப்படுகொலையை மூடி மறைக்க எவர் முயன்றாலும் பதறித்துடித்துப் பற்றவைக்கிறது நெருப்பை! 'இருப்பாய் தமிழா நெருப்பாய்' என்கிற   உணர்விலக்கியத்தின் ஊற்றுக்கண் காசி ஆனந்தனின் கட்டளையை மறக்காமல், விருப்பு வெறுப்பெல்லாம் இல்லாமல், பொறுப்புடன் எரிகிறது அந்த நெருப்பு. இனத்தைக் காட்டிக்கொடுக்கும் எவருக்கும் நடக்கக் கூடியதுதான் இது. இப்போது சுமந்திரனுக்கு நடந்திருக்கிறது.

நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியிருக்கும் ஒரு மின்னஞ்சலை  இரண்டு நாள் கழித்து இன்றுதான் பார்க்க முடிந்தது. (கடல் குதிரைகள் - படத்தின் டப்பிங் பணி காலை முதல் இரவு வரை தொடருகிற நிலையில், எந்த மின்னஞ்சலையும் நேரத்துக்குப் பார்க்க முடியவில்லை.... பதிலளிக்க முடியவில்லை..... நண்பர்கள் மன்னிக்கவும்!)

'ஈழப் பிரச்சினையில் நாம் ஆதரவு தரலாம், ஆறுதல் சொல்லலாம், நியாயம் கேட்கலாம்... அந்தக் களத்திலிருந்து பேசுவோர் எந்தெந்த சூழ்நிலையில் பேச வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல் அவர்கள் மீது பாய்வது நியாயமா' என்று என்னிடம் நியாயம் கேட்கிறது அந்த மின்னஞ்சல். இதற்கான தன்னிலை விளக்கத்தை, நான் தெரிவித்தாக வேண்டும்.

அண்மையில் அமெரிக்காவில் நடந்த சந்திப்பு ஒன்றின்போது, "நடந்தது இனப்படுகொலை என்றெல்லாம் பேசித் திரியாதீர்கள்.... அதை உங்களால் நிறுவ முடியுமா" என்று கோபம் கொப்பளிக்க சுமந்திரன் 'சேம் சைடு கோல்' போட்டதைக் கேள்விப்பட்ட பிறகுதான், மீண்டும் எழுதவேண்டும் என்கிற உத்வேகமே எழுந்தது எனக்குள்! 'கடல் குதிரைகள்' வெளியாகும்முன் எழுதத் தொடங்கிவிடக்கூடாது, அது பட வெளியீட்டுப் பணிகளைப் பாதிக்கும் என்று ஒதுங்கியே இருந்தவன் நான். மீண்டும் என்னை எழுத வைத்தது, சுமந்திரனின் துரோகம்தான்!

இதே சமயத்தில் விக்னேஸ்வரன் என்கிற மனிதர் செய்த மவுனப் புரட்சி வேறு மேலதிகமாக உலுக்கிவிட்டது என்னை. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான் - என்கிற தீர்மானத்தை அண்ணன் சிவாஜிலிங்கம்தான் கொண்டுவந்தார், வட மாகாண சபையில்! தகுந்த ஆதாரங்களைக் கொடுத்தால், அந்தத் தீர்மானத்தை தானே  முன்மொழிவதாக முதல்வர் விக்னேஸ்வரன் உறுதிமொழி கொடுத்தபோது, அப்படியெல்லாம் செய்யமாட்டார் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், இலங்கை உச்சநீதிமன்றத்தில்  நீதியரசராகத் திகழ்ந்த அவர், சிவாஜிலிங்கம் கொடுத்த ஆதாரங்களைப் பார்த்ததும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். தீர்மானத்தை தானே முன்மொழிந்தார். 

தீர்மானத்தை முன்மொழிந்ததுடன் நின்றுவிடவில்லை விக்னேஸ்வரன். 'இலங்கை அரசு திட்டமிட்டு நடத்தும் தமிழின அழிப்புக்கு நியாயம் கேட்டு உலகெங்கும் போராடும் தமிழ் இளைஞர்கள் இந்தத் தீர்மானத்தையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தலாம்' என்று ஆண்மையோடு அறிவித்தார். நீதியரசர் விக்னேஸ்வரனின் கம்பீரமான அறைகூவல், 'நடந்தது இனப்படுகொலையா' என்கிற சுமந்திரனின் காட்டுக் கூச்சலை ஒரு கோழை நரியின் ஊளையாக மாற்றிவிட்டது.

மானமுள்ள எவராக இருந்தாலும், தன் அமைப்பு ஆளும் ஒரு மாகாணசபையில்  தனக்கு நேரெதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டவுடன், பதறித் துடித்திருப்பார்கள்.  அமைப்பிலிருந்து விலகாவிட்டாலும் பதவியிலிருந்தாவது விலகியிருப்பார்கள். சுமந்திரன் அசைந்து கொடுக்கவேயில்லை.  'மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்' என்கிறது வள்ளுவம். அதெல்லாம்   மானமிருப்பவர்களுக்குத் தானே.... நமக்கெதற்கு.... என்கிற திட்டவட்டமான முடிவை சுமந்திரன்  எடுத்துவிட்டதாகத் தெரிகிறது. மயிராவது உயிராவது!

காணாமல் போன எம் உறவுகளுக்காகப் போராடும் எங்கள் சகோதரி அனந்தியை, அற்பக் காரணங்களுக்காக நீக்கிவிடத் துடியாய்த் துடித்த சுமந்திரன்கள், 'நடந்தது இனப்படுகொலைதான்' என்று தெளிவாகத் தீர்மானம் போட்ட விக்னேஸ்வரனின் பக்கம் திரும்பிப் பார்க்கக் கூட அஞ்சுகிறார்களே....... அதுதான் ஈழ மண்ணை நம்பிக்கையோடு பார்க்கவைக்கிறது என்னை!

எனக்கு மின்னஞ்சல் வழி இலவச ஆலோசனை தரும் நண்பர்கள், இந்த இனத்தின் தேவை விக்னேஸ்வரனா சுமந்திரனா என்பதை இப்போதே தீர்மானித்துவிட வேண்டும்.

'ஈழப் பிரச்சினையில் நாம் ஆதரவு தரலாம்.... அதே சமயம் அங்கிருந்து  பேசுவோர் எந்தச் சூழ்நிலையில் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்' என்று எனக்கு அறிவுறுத்தும் நண்பர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். 'நடந்தது இனப்படுகொலைதான்' என்று பேசும் விக்னேஸ்வரன்களும்  அனந்திகளும் சிவாஜிலிங்கங்களும் ரவிகரண்களும் கஜேந்திரன்களும் ஏழு கடல்தாண்டி ஏழு மலைதாண்டி எங்கேயோ ஒரு குகைக்குள்ளிருந்தா பேசுகிறார்கள்? இல்லை. சுற்றிலும் நிற்கிற ராணுவ முற்றுகைக்குள்ளிருந்து - கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உறவுகளின் இறுதி மூச்சு உலவுகிற பூமியிலிருந்து -  ஈழத்தின் இதயத்திலிருந்து பேசுகிறார்கள் அவர்கள். 'அது எப்படி இனப்படுகொலை' என்று கூசாமல் பேசும் சுமந்திரன்கள், அலரிமாளிகையின் அடுக்களையிலிருந்து பேசுகிறார்கள்.

எதனால் மீண்டும் எழுதத் தொடங்கினேனோ அதை இப்போதுதான் வெளிப்படையாக அறிவிக்க நேர்ந்திருக்கிறது. கேவலம் ஒரு முதலமைச்சர் நாற்காலியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக,  ஒன்றரை லட்சம் உறவுகள் கொல்லப்பட்டதை அறிந்தும் அறியாதவர்போல் மஞ்சள் துணியால் கண்களை மூடிக் கொண்டிருந்தாரே ஒரு மகானுபாவர்... அந்த மனிதரின்  மரணத்துக்கிணையான மவுனத்தைப் பார்த்து எழுந்த கோபத்தால் தமிழக அரசியலில் எழுதத் தொடங்கியவன் நான்.

நடந்த இனப்படுகொலையைக் கண்டும் காணாதவர்கள் மாதிரி கிடந்தார்கள், இங்கேயிருந்த அக்பர் ரோடு அடிமைகள். நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்க முயல்கிறார்கள் அங்கேயிருக்கிற அலரிமாளிகை அடிமைகள். இந்த இரண்டு துரோகத்தில் எது பெரியது, எது சிறியது என்று கணக்குப் போடுவது வேண்டாத வேலை. துரோகத்தில் அரைவாசி, கால்வாசி, காலேஅரைக்கால் வாசியெல்லாம் ஏது? துரோகம் துரோகம்தான்! 

அண்மையில் வந்திருந்த மின்னஞ்சல்களில், சகோதரர் ச.ச.முத்து அனுப்பியிருந்த மின்னஞ்சலும் ஒன்று. புலம்பெயர் நாடொன்றிலிருந்து இணையதளங்களுக்கு எழுதுகிற முத்துவின் எழுத்துக்களை வார்த்தைக்கு வார்த்தை நேசிக்கிறவன் நான். இந்த முறை முத்து அனுப்பியிருந்த மின்னஞ்சலில், விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பார்வையாளர்களைக் கண்கலங்க வைத்த ஈழத்துக் குயில் ஜெசீகா யூட் குறித்த உணர்வுபூர்வமான கட்டுரை இருந்தது. ஜெசீகா பாடியவுடன் கண்ணீருடன் எழுந்துநின்ற பாடகர் மாணிக்கவிநாயகம் மாதிரி, கண்கலங்கிவிட்டேன் கட்டுரையைப் படித்ததும்!

சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற ஜெசீகா, ஊமை விழிகள் படப் பாடலான   (பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த) 'தோல்வி நிலையென நினைத்தால்' பாடலுடன் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் பாடலை இணைத்துப்பாடி, உலகெங்குமுள்ள தமிழரின்  இதயத்தில் இடம்பிடித்தார்.
 
உரிமை இழந்தோம் உடமை இழந்தோம்
உணர்வை இழக்கலாமா? 
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
என்று ஜெசீகா உண்மையின் விளிம்பில் நின்று உணர்வோடு  பாடியது, ஈழ மண்ணின் சுதந்திரத்துக்காகத் தமது இன்னுயிரைக் கொடுத்த எண்ணற்ற மாவீரர்களின் நினைவுகளைக் கண்ணீரில் நனைத்திருக்கும் என்பது நிச்சயம்.

"கிடைக்கிற சந்தர்ப்பங்களில் கூட அடிபணிவு கருத்துகளையும், அடிமைச் சொல்லாடல்களையும் வெளிப்படுத்தி, உலக சக்திகளின் குரலாக தம்மைத்தாமே கருதும் பெரியவர்கள் எல்லோருக்கும் ஜெசீகா யூட் சொல்லியிருக்கும் செய்தி உறைத்திருக்கும்.......
கிடைக்கும் தளத்தை, கிடைக்கிற மேடையை, கிடைக்கிற ஒற்றைச் சந்தர்ப்பத்தைக் கூட எவ்விதம் எம் மக்களின் அபிலாஷையைத் தெரிவிக்கப் பயன்படுத்துவது என்பது இந்தச் சிறுமி மற்றவர்களுக்கு நடத்தியிருக்கும் பாடம்....." என்கிறார் முத்து நெகிழ்ச்சியுடன்.

முத்துவின் கட்டுரையைப் படித்ததும், ஜெசீகா யூட் பற்றிய உண்மை ஒன்றை என்னால் உணர முடிந்தது. 

ஜெசீகா யூட் என்கிற அந்த இளங்குயில், எப்படியாவது பரிசைப் பெற்றுவிடவேண்டும் என்கிற தவிப்புடன் அந்தப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. வெற்றி பெறுகிறேனோ இல்லையோ, எம்  இனத்தின் தவிப்பை உலகறிய வெளிப்படுத்துவேன் - என்கிற ஓர்மத்துடன்தான் அந்தக் குழந்தை பாடினாள் என்று நினைக்கிறேன் நான். அவளது விழிகளின் விளிம்பில் விரிகிற ஒளி, அதைத்தான் உணர்த்துகிறது எனக்கு! 

முத்து சொல்வதைப் போல், உலக சக்திகளின் குரலாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் முயற்சியிலேயே காலந்தள்ளும் பெரிய மனிதர்களை - அவர்கள் சுமந்திரனாகவோ சம்பந்தன்களாகவோ.... ஏன் மோடியாகவோ கூட  இருந்து தொலைக்கட்டும் - கொல்லப்பட்ட ஓர் இனத்துக்கு நியாயம் கிடைக்க இறையாண்மையின் பெயரால் முட்டுக்கட்டை போடும் அவர்களில்   எவரையும் என்னால் மன்னிக்க முடியவில்லை.

எனக்கு அறிவுரை சொல்லும் என் நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.....
இலங்கையின் இறையாண்மை, வெள்ளாடுகளை வேட்டையாடிய ஓர் ஓநாயின் இறையாண்மை.....
எம் இனத்தைக் கொன்றுகுவிக்க ஆயுதங்களை அள்ளிக்கொடுத்த சோனியா பரிவாரத்தாலும், நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்கத் துணைபோகும் மோடி பரிவாரத்தாலும் இந்தியாவின் இறையாண்மையும் அப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறது. அதனால்தான், 'இந்தியா தான் என் மதம்' - என்று மோடி அறிவிக்கும்போது, 'துரோக இந்தியா என் மதமில்லை' என்று நான் பட்டவர்த்தனமாகப்  பேசவேண்டியிருக்கிறது. 

எம் இனத்தைக் கொன்று குவித்தவர்களுக்குத் துணைபோவது ஒன்றே காங்கிரஸையும் பாரதீய ஜனதாவையும் இணைக்கிற ஒரே மதமென்றால், அந்த மதம் என் மதமில்லை. ஏனென்றால் சோனியா போலவும் மோடி போலவும் மதம் பிடித்துத் திரியவில்லை நான்! கொன்றுகுவிக்கப்பட்ட ஈழ மண்ணின் மைந்தர்களான எம் மக்களின்  இறையாண்மை மீட்கப்படும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன். ஆயிரமாயிரம் வீரர்கள், உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த அந்தக் கனவை, சுமந்திரன் போன்ற துரோகிகள் மறக்கலாம்.... அவர்களை நேரில் தரிசிக்க வாய்ப்பு கிடைத்த என்னால் எப்படி மறக்க முடியும்?

நன்றி - தமிழக அரசியல்.

No comments:

Post a Comment