March 7, 2015

தாய், மகள் கைதைக் கண்டித்து பிரான்சு நாடாளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்! பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை!

இளம் தாயாரும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற அவரது எட்டு வயது மகளும் கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் இடம் பெற்றுள்ள புதிய அரசுத்தலைவர் மாற்றத்துடன் மனிதவுரிமைகள் விடயத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக சர்வதேச நாடுகள் நம்ப வைக்கப்பட்டுள்ளனவா? என அந்நாடுகளின் அணமைக்கால அறிக்கைகளைப் பார்க்கும் போது எண்ணத் தோன்றுகின்றது.
நிறைவேற்றவே போகாத வாக்குறுதிகளை தாரளமாக அள்ளி வழங்கி சிங்கள அரசு சர்வதேசத்தைத் தனது சதிவலையில் சிக்கவைத்துள்ளது. முன்னைய ஆடசிக் காலத்தில் மிகப்பெரிய மோசடிகளில் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பான குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இப்போது சட்டத்திற்குட்பட்ட ஆட்சி நடைபெறுவதாக உலக நாடுகளை போலியாக நம்பவைக்க தொடரந்து முயற்சிக்கப்படுகிறது. ஆனால் மறுபுறத்தில் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களாக அரசினாலேயே பாதுகாக்கப்படுகின்றனர்.
தமிழர்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற இந்த அரசு அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காகத் தினமும் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக பெரிதாக என்ன செய்துவிட்டது? காணமல் போனவர்கள் பிரச்சனை அரசியல் கைதிகள் விடுதலை பறிக்கப்பட்ட மக்களின் நிலங்களை முழுமையாக ஒப்படைப்பது இரகசிய வதைமுகாம்கள் குறித்த விசாரணை…. இப்படியே நீண்டுகொண்டே போகும் தமிழரின் அடிப்படையான பிரச்சனைகள் தீர உண்மையான கரிசனை இந்த அரசுக்கு உண்டா?
ஏன் இல்லை? ஆளுனரை மாற்றினார்கள் தமிழர்களிடமிருந்து பறித்தவற்றில் கொஞ்சத்தை கொடுக்க முயற்சிக்கிறார்கள் என்று சிலர் சொல்ல முற்படலாம் ஆனால் மேலோட்டமாகச் செய்யும் இந்த மாற்றம் எல்லாம் தமிழர்களை நம்பவைப்பதற்காகவும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் இப்படி ஏதேனும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிங்கள அரசு இருக்கிறது.
அண்மையில் (02 மார்சு 2015) ஐ.நா மனிதவுரிகைள் அவையில் சிறிலங்காவின் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர பேசும்போது புதிய ஆட்சிமாற்த்தினை ஏற்படுத்திய மக்கள் சிறிலங்காவிற்கு மட்டுமல்ல உலகநாடுகள் அனைத்திற்கும் சனநாயகத்தை நிலை பெறச் செய்துள்ளனர் என்னும் பொருள் பட உரையாற்றினார்.
ஆகா! எவ்வளவு நல்ல மாற்றம் என உலக நாடுகள் சிலாகித்துக் கொண்டிருக்கும் போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து பிரான்சில் இருந்து இலங்கைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த ஜெயாகணேஸ் பகீரதி என்னும் இளம் தாயாரும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற அவரது எட்டு வயது மகளும் தீவிரவாத தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரது மகள் கல்வியைத் தொடர முடியாமல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஏற்கனவே விபுசிகாவும் அவரது தாயாரும் இவ்வாறு கைது செய்யப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது நீங்கள் அறிந்ததே. ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசுகளின் நோக்கங்கள் மாறப்போவதில்லை என்பதை தெட்டத்தெளிவாக இக்கைதுகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
இவர்களின் கைது தொடர்பாக உடனடியாகவே பிரான்சு வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கும்இஅரச அதிபருக்கும் நாம் கொண்டு வந்துள்ளோம்.
இவர்களின் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்து முகமாக பிரான்சு நாடாளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்றையும் எதிர்வரும் திங்கள் கிழமை 09-03-2015 அன்று மாலை 3 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகளவில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று அன்பாக வேண்டி நிற்கின்றோம்.
நாமே நமது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். ஒற்றுமை அதற்கு வலுச்சேர்க்கட்டும்.


poraddam

No comments:

Post a Comment