March 8, 2015

புதிய தலைமுறை தொலைக்காட்சி பணியாளர்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!

மகளிர் தினத்தை ஒட்டி ஒளிபரப்பாக இருந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர், பெண் செய்தியாளர் ஆகியோர் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஈக்காட்டுத்தாங்கலில் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 08.03.2015 ஞாயிற்றுக்கிழமை அந்த தொலைக்காட்சியில், உரக்கச் சொல்லுங்கள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சி, தாலி பெண்களை சிறுமை படுத்துகிறதா, பெருமை படுத்துகிறதா? என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டிருந்தது. இருதரப்பு விவாதங்களாக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியின் முன்னோட்டம் ஒளிபரப்பானது.

இந்தநிலையில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது என புதிய தலைமுறை அலுவலகத்திற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. எனவே, முன்னெச்சரிக்கையாக புதிய தலைமுறை தொலைக்காட்சி கேட்டுக் கொண்டதிற்கிணங்க, அந்த அலுவலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தொலைக்காட்சி அலுவலகத்திற்கு அருகே இருந்த தேநீர் கடைக்கு சென்றுவிட்டு அலுவலகத்திற்கு கையில் கேமராவுடன் சென்ற புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில்குமரன் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. அவரது கையில் இருந்த கேமராவையும் உடைத்து நொறுக்கினர்.

ஆனால் பாதுகாப்புக்காக வந்திருந்த காவல்துறையினர் நடந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்தனர். அப்போது அங்கிருந்த புதிய தலைமுறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஒளிப்பதிவாளரை, சமூக விரோதிகளிடம் இருந்து மீட்டனர்.

ஒளிப்பதிவாளர் செந்தில்குமரன் கேமராவில் எந்த காட்சிகளையும் ஒளிப்பதிவு செய்யவில்லை. தேநீர் அருந்தவே சென்றார். அப்படி இருக்கையில் ஒளிப்பதிவு செய்ததாக கூறி செந்தில் குமரனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து மிதித்து தகாத வார்த்தைகளால் திட்டினர்.

இந்த சம்பவம் குறித்து புதிய தலைமுறை ஊழியர்கள். கேட்ட போது காவல்துறையினர் முறையாக பதிலளிக்கவில்லை. இது தொடர்பாக உயர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று புதிய தலைமுறை ஊழியர்கள் கூறினர்.

இதனிடையே இந்த சம்பவத்தை தொடர்ந்து புதிய தலைமுறை அலுவலத்திற்கு வந்த பெண் செய்தியாளரையும், அந்த கும்பல் தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை ஊழியர்கள், பொதுமக்கள் மீட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment