இந்தோனேசியா சிறையில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் ஈழத்தமிழ் இளைஞரான மயூரன் சுகுமாரன் விடுதலைக்கு உதவ வேண்டுமென போரால்பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் கோரியுள்ளது.
இது தொடர்பினில் அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையினில்:-
சுகுமாரன் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். அவுஸ்ரேலியா குடியுரிமை பெற்றவர். சில வருடங்களுக்கு முன் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இந்தோனேசியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு அவர் மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் 4 முன்னாள் பிரதமர்கள் இவரது தண்டனையை ரத்து செய்யுமாறும், அல்லது கைதிகள் பரிமாற்று நடவடிக்கைகள் ஊடாக இவரை அவுஸ்ரேலியா மீள பெறுவதற்கும், கருணை கோரிக்கை முன்வைத்துள்ளனர். ஆனால் இந்தோனேசிய அரசு இதனை நிராகரித்துவிட்டது.
இந்த இளைஞர் எமது சகோதரன் போன்றவர். புலம்பெயர்ந்து வாழும் இடத்தின் அசாதாரண சூழ்நிலையே இவற்றிற்கு தேவையற்ற சகவாசங்கள் ஏற்படவும், தீய வழியில் செல்லவும் காரணமாய் இருந்திருக்கிறது. வடக்கு கிழக்கு போரின் கொடுமை காரணமாக புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ் சமூகத்தின் ஒரு பிரதிநிதியாகவே நாம் இவரை பார்க்க வேண்டும். இவரை பிரிந்து வாழும் இவரின் குடும்பத்தினரின் மன வேதனையை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
தற்போது திருந்தி வாழ மனம் விருப்பம் கொண்டுள்ள மயூரன் சுகுமாரன் சிறையிலுள்ள மற்றைய கைதிகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் விளங்குகிறார். அத்துடன் அவர் ஓவியம் உட்பட கலைகளில் தேர்ச்சி பெற்ற ஒருவராக விளங்குவதுடன் தனது படைப்புக்கள் மூலம் கிடைக்கும் வருவாயினை போதைப்பொருள் பாவனை மூலம் பாதிப்படைந்தவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் நோக்கத்துடனும் செயற்பட்டு வருகிறார். இவ்வாறான நலையில் எந்த நேரமும் அவரது தண்டனை நிறைவேற்றப்படலாம்.
துப்பாக்கியால் இவரது உடல் சுடப்பட்டு உயிர் பறிக்கப்படும் என்ற செய்தி நெஞ்சை உலுக்குவதாகும். உள்நாட்டு யுத்தத்தில் ஆயுதங்களினால் பறிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்ட இவ்வுயிர் இன்று ஆயுத முனையில் ஊசலாடுகின்றது.
எனவே இவரது விடுதலைக்கு எமது தமிழ் மக்கள், பிரதிநிதிகள் அரசாங்கத்தினூடாக ஒரு கோரிக்கையை முன்வைத்து இந்தோனேசிய அரசுக்கு அவசர கருணை மனு எழுதி இவரது விடுதலைக்கு ஆவன செய்ய வேண்டும் என மன்றாட்டாக கேட்டுக்கொள்கின்றோம். இதற்கு முன்னர் நடந்த இவ்வாறான இரு சம்பவங்களை மனதில் கொண்டு இவ்விடயத்தில் இந்தோனேசிய அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறோமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment