February 8, 2015

“நீங்களும் மரண சான்றிதழ் கொண்டு வந்தீங்களெண்டால் உங்களைக் கொன்றுபோட்டிடுவம்” ஆறாத்துயரில் ஆயிரத்தில் ஒருத்தி!

“நீங்களும் மரண சான்றிதழ் கொண்டு வந்தீங்களெண்டால் உங்களைக் கொன்றுபோட்டிடுவம்”, என மிரட்டி வழியனுப்புதல் தருகிறார் 20 வயதைத் தொடும் சகோதரி.

“செத்துப்போகத் துணிஞ்சிற்றன்,” தன் வாழ்வின் இறுதிமுடிவை அறிவித்து வழியனுப்பிவைக்கிறார் ஒரு தாய்.

இந்த வசனங்களின் முடிவுபோலவே போராடிக் களைத்துப் போன அவர்களின் முகங்களிலும் மிஞ்சியிருப்பது கோபமும், விரக்தியும்தான்.

“2008 ஆம் ஆண்டு என்ர மகன என்ர கண்ணுக்கு முன்னாலதான் பறிகொடுத்தன். எட்டு ஆமிக்காரர், 4 பீல்ட் பைக்ல வந்து பிடிச்சவங்கள். யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்னுக்குள்ள இடத்தில கூலி வேலைதான் செய்துகொண்டிருந்தவன். நான் மதியம்போல சாப்பாடு கொண்டுபோயிருந்தன். சாப்பாட்ட குடுத்திட்டு, பிஸ்கட் வாங்க முன்னுக்குள்ள கடைக்குப் போனன், இங்கால வந்த பீல்ட் பைக் குரூப் மகன பிடிச்சி ரெண்டு பேருக்கும் நடுவில இருத்திக் கொண்டு போறாங்கள். நான் திரத்திக்கொண்டு ஓடினன். கதறினன். அவங்கள் கொண்டு மறஞ்சிட்டாங்கள்”.

அவரின் தொடர்ச்சியான கதையை குழப்புகிறது தும்மலும் அதை மிஞ்சும் இருமலும். உயிர்மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் இடைவெளிகளில் ஓய்வெடுத்துக்கொள்கிறார். அவரால் தொடர்ச்சியாகவோ, கோர்வையாகவோ இப்போது எதனையும் பேச முடியவில்லை. முதல் கதையில் பாதியுடன் நிறுத்திக்கொண்டு தும்மத் தொடங்கி அதிலிருந்து விடுதலை பெற்றபின், வேறொரு கதையை ஆரம்பிக்கிறார். அந்தக் கதை முடியமுதல் தும்மல் குறுக்கிட்டுவிடுறது. “மகன பறிகொடுத்த நாளில இருந்து எனக்கு இதே வருத்தம்தான்” என்கிறவரின் கண்கள் ஈரமாகவே இருக்கின்றன.

பிறகு நான் திரத்திக்கொண்டே போனன். அந்த நேரத்தில எங்கயும் பயம். றோட்டில சனமே இராது. தனியத்தான் றோட்டால கத்திக்கொண்டு ஓடினன். மதிலுக்குள்ளால எட்டிப்பாக்கிற சனங்களிட்ட பீல்ட்பைக் எதால போனது எண்டு கேட்டுக் கேட்டு ஓடினன். அவையள் எல்லாரும் யாழ்ப்பாணத்தில இருக்கிற சிவில் ஒவீஸத்தான் சொல்லிச்சினம். அங்கபோனன். வாசலில நிண்டு கதறினன். அழவும் பயமாகக் கிடந்தது. நான் அழுகிறதபாத்து மகனுக்கு கூட அடிச்சிடுவாங்கள் எண்டு அழுகைய அடக்கிக் கொண்டு போற, வாற ஆமிக்காரங்கள பிடிச்சிக் கெஞ்சினன். தங்களுக்குத் தெரியாதெண்டே சொல்லிப்போட்டாங்கள். நான் பின்னேரம் வரைக்கும் அங்கயே அழுதுகொண்டு நிண்டன். பின்னேரமாக நாலைஞ்சு ஆமிக்காரர் மகன வெளியால கூட்டிக்கொண்டு வாறாங்கள். சந்தோசப்பட்டன். எனக்கு முன்னால கொண்டந்து, என்னைக் கடந்து மகன பிடரில பிடிச்சி இழுத்துக்கொண்டு போனாங்கள். கை ரெண்டயும், கறுப்புத் துணியால பின்னுக்கு இழுத்து கட்டிருந்தவங்கள். பிள்ள என்னையப் பாத்து அழுறான். நானும் கெஞ்சி அழுதுகொண்டே ஆமிக்காரங்களுக்குப் பின்னால போனன். அப்பிடியே ஒரு வாகனத்தில ஏத்திக் கொண்டு போயிட்டாங்கள். திரும்பவும் அந்த வாகனத்துக்குப் பின்னால ஓடினன். பலாலி றோட்டில ஏறினது வரைக்கும் திரத்திக்கொண்டு ஓடிவந்தன். பிறகு வாகனம் எங்கயோ போய் மறைஞ்சிட்டுது”.

இவ்வளவு சம்பவங்களையும் சொல்லிமுடிக்க அதிகமாகவே சிரமப்பட்டார் அந்தத் தாய். சொல்லிமுடித்த திருப்தியில் அவரது வீட்டின் உடைந்த ஜன்னல் பக்கம் திரும்பி அழத் தொடங்கினார். கையில் இருந்த ஆவணங்களை மேலும் மேலும் இறுக்கிப் பிடிக்கிறார். ஆவணங்கள் அடங்கிய பொலித்தீன் பையை கசக்கி அது எழுப்பும் மெல்லிய சத்தத்தில் தன் அழுகையின் விம்மலை மறைக்க முயல்கிறார். கடைசி வரைக்கும் அவரால் முடியவில்லை.

“பிறகு சாவகச்சேரி, உடுவில், யாழ்ப்பாணம், வவுனியா, வெலிக்கடை எண்டு எல்லா இடமும் அலைஞ்சி திரிஞ்சன். கிடந்த நகை நட்டெல்லாம் வித்துத்தான் ஒவ்வொரு முறையும் கொழும்புக்குப் போவன். கொழும்பு போறதெண்டால், சிங்களம் தெரிஞ்ச ஒருத்தர கூட்டிக் கொண்டுதான் போகவேணும். அவரின்ட செலவையும் நாங்கள்தான் பாத்துக்கொள்ள வேணும். ஒரு கட்டத்தில வீட்டில விக்கிறதுக்கு எதுவுமேயில்ல. பிள்ளையள பள்ளிக்கூடத்தால நிப்பாட்டி எல்லாருமா சேர்ந்து கூலி வேலைக்குப் போவம். கொஞ்சம் காசு சேர்த்துக்கொண்டு மகனத் தேடத் தொடங்குவம். பிறகு அந்தக் காசு முடிஞ்சதும் திருப்பியும் கூலி வேலைக்குப் போவம். அவருக்கும் ஏலாது. வீசிங். அக்சிடென்ட்ல கை முறிஞ்சிட்டு. இப்பிடிதான் 2008 ஆம் ஆண்டில இருந்து வாழுறம்”.

இந்த இடத்தில்தான் காணாமல் போனவர்களைத் தேடும் குடும்பங்களின் பிரச்சினைகளில் முக்கியமானதொன்றாகப் பொருளாதாரத்தையும், அவர்களின் உளப் பாதிப்புக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை அந்தத் தாய் நமக்கு நினைவுறுத்துகின்றார். போர் மட்டுமே தமிழர்களுக்கு ஆறாத வடுவினை ஏற்படுத்தவில்லை. போரின் விளைவுகள் தொடர்ந்தும் அவர்களைத் துரத்திக்கொண்டேயிருக்கின்றதென்பதையும், அதற்கு சரியான தீர்வு வேண்டுமென்பதையும் அந்தத் தாயிடமிருந்து உருகும் கண்ணீர் நமக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது.

இப்பிடியே தேடிக்கொண்டிருக்கேக்க, 2010 ஆம் ஆண்டில ஒருநாள் பூசா முகாமில இருந்து கடிதமொண்டு வந்தது. முழுக்கலும் சிங்களத்தில இருந்தது. வாசிக்க கொண்டு திரிஞ்சன் அதுக்கிடையில 1 மாசம் ஆகிட்டு. பிறகுதான் வாசிக்க முடிஞ்சது. அதில, கடிதம் வாசிச்சதுக்கு முதலே மகன் பற்றிய விசாரணைக்கு வரச் சொல்லி எழுதியிருந்திச்சினம். ( தன் கையுக்குள் அவ்வளவுநேரம் பற்றிப் பிடித்திருந்த ஆவணங்களைக் கிளறி அந்தக் கடிதத்தைக் காட்டுகிறார்) பழையடி சிங்களம் தெரிஞ்ச ஆளையும், வேற சில ஆக்களையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்குப் போனன். தனியப் போக வேணாம் எண்டு எல்லாரும் சொல்லிச்சினம். கொழும்பு மனித உரிமை ஆணைக்குழுவில இருந்து ஒரு அதிகாரிய கூட்டிக்கொண்டு போனன். பூசா சிறைக்குள்ள கூட்டிக்கொண்டு போனாங்கள். என்னோட வந்த அதிகாரிய இடையில நிப்பாட்டிப் போட்டு, என்னைத் தனிய ஒரு பக்கம் கூட்டிக்கொண்டு போனாங்கள். இருத்தி வச்சிட்டு, உயரமான ஒருத்தர் வந்து என்னை விசாரிச்சார். மகனப்பற்றி எல்லாம் கேட்டார். நாங்கள் யாரோடயும் தொடர்பில்லாத அப்பாவியள் எண்டும், மகன் அன்றாடம் செய்த கூலி வேலையிலயே பிழைப்பு நடத்தினம் எண்டும் சொல்லிக் கொண்டிருக்கேக்க, உள்ளுக்கிருந்து ஒரு பெடியன கூட்டிக் கொண்டு வந்து எனக்கு முன்னால நிப்பாட்டினாங்கள்.

என்ர மகன விட நல்ல உயரம் அவன். குண்டுப் பெடியன். முதல்ல பாத்தவுடன இது என்ர மகன் இல்ல எண்டுதான் நினைச்சன். பிறகு யோசிச்சன், எங்கள பிரிஞ்சி கனகாலம் ஆகிட்டு. மகனின்ர உடம்பு மாறியிருக்கும். முக சாயலயும் மாறியிருக்கும் எண்டு நினைச்சிக்கொண்டே, அவரின்ர கையப்பிடிச்சிப் பாக்க எழும்பினன்.

“அம்மா நான் உங்கட மகன் இல்ல. என்ர பேர் லோகநாதன் சுவேந்திரகுமார். உங்கட மகனின்ர பேர் லோகநாதன் பிரதீபன்..  என்னைய நீர்வேலியில இருந்து பிடிச்சிக்கொண்டு வந்தவ. நீங்க நான் இங்க இருக்கிறன் எண்டும், வந்து பாத்து என்னைய எடுக்கச் சொல்லியும் அம்மாட்ட சொல்லிவிடுங்கோ “ என்று அந்தப் பெடியன் சொல்ல, அவனுக்கு அங்க நிண்டவங்கள் விட்டாங்கள் அடி. எனக்கு முன்னாலயே அவன அடிச்சி இழுத்துக்கொண்டு போயிட்டாங்கள்.

பிறகு திரும்பி வந்து என்னட்ட கேட்டாங்கள் நீங்க தனிய வந்திங்களோ, யாரோடயும் சேர்ந்து வந்தனிங்களோ எண்டு. நான் சேர்ந்துதான் வந்தன் எண்டு சொன்னன். வேற ஆக்கள அனுப்பி வெளிய யாரும் நிக்கினமா எண்டு பாத்துவரச் சொல்லி, ஆக்கள் நிக்கினம் எண்டத தெரிஞ்ச பிறகே என்னைய வெளியில விட்டவங்கள்.

இங்க வந்து நீர்வேலி பக்கம் விசாரிச்சன். அந்தப் பேர் வழிய என்னால கண்டுபிடிக்க முடியேல்ல.
அண்டையில இருந்து போகாத கோயில் இல்ல. வேண்டாத கடவுள் இல்ல. மனோகணேசனின்ர காலில் விழுந்து அழுதன். எம்.பி அப்பாத்துரையின்ர காலைப் பிடிச்சி கதறினன். எங்க விசாரணை நடந்தாலும், போராட்டம் நடந்தாலும், நானும் மகளும் போயிடுவம். ஆனால் இதுவரைக்கும் எந்த முடிவும் கிடைக்கேல்ல.

இன்னும் அதிகமாகவே சொல்ல முயன்றார். தொடர்ந்த தும்மலும், இருமலும் அவரை களைத்துவிழச் செய்கிறது. அமைதியாகிவிடுகிறார். சிறுமனப்பாரத்தை இறக்கிவைத்த திருப்தி அவரின் முகத்தில் படர்வதை அவதானிக்கிறேன். நீண்ட நேர அமைதி. அந்தக் குடிசையைவிட்டு விடைபெற்றுப் படலையடிக்கு வருகிறேன்.

பின்னாலிருந்து கேட்கிறது என்னைப் பின் தொடர்ந்து வந்து வழியனுப்பியவர்களின் குரல்.

“நீங்களும் மரண சான்றிதழ் கொண்டு வந்தீங்களெண்டால் உங்களைக் கொன்றுபோட்டிடுவம்”, என மிரட்டி வழியனுப்புதல் தருகிறார் 20 வயதைத் தொடும் சகோதரி.

“செத்துப்போகத் துணிஞ்சிற்றன்”, தன் வாழ்வின் இறுதிமுடிவை அறிவித்து வழியனுப்பிவைக்கிறார் ஒரு தாய்.

பிடித்துச் சென்ற ஆயிரக்கணக்கான பிள்ளைகளில் ஒரு சிலரையாவது திருப்பி அனுப்ப முடியும் என்பதை நிரூபிக்க இந்தத் தாயின் சாட்சியத்தைவிட வேறு எதைக் காட்டுவது ஜனநாயகவாதிகளே..!

(விசேட ஆக்கம் ஜெரா)
நன்றி - கொழும்புமிரர்

No comments:

Post a Comment