February 26, 2015

புதிய ரயில்களை அறிவிக்காமல் ஏமாற்றிய ரயில்வே நிதி நிலை அறிக்கை!-தி.வேல்முருகன்

இந்திய மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ரயில்வே நிதிநிலை அறிக்கையில் "புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு இடம்பெறாது" என்று அறிவித்திருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.


நடப்பு நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் முடிவதற்குள் "புதிய ரயில்களை அறிவிப்போம்" என்றெல்லாம் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த தமிழ்நாடு உள்ளிட்ட மாநில மக்களை ஏமாற்றுகிற ஒரு நடவடிக்கையே இது.

புதிய ரயில்களைத்தான் அறிவிக்கவில்லை எனில் கடந்த ஆண்டு தமிழகத்துக்கு என அறிவித்த 10 ரயில்கள் என்னவாயிற்று? அது எப்போதுதான் தமிழகத்துக்கு வரும் என்ற எதிர்பார்ப்புக்கு விடை என்ன?

தமிழகத்தில் கிடப்பில் உள்ள, தேங்கிக் கிடக்கிற எத்தனையோ ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எப்போது அறிவிப்பு வெளிவரும் என்பதற்கு பதில் இல்லை.

நாடு விடுதலை அடைந்தும் கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் ரயில் சேவையைக் கூட பெற முடியாவில்லையே என்ற அவல நிலையின் குமுறலின் வெளிப்பாடுதான் புதிய ரயில்களுக்கான கோரிக்கையும் எதிர்பார்ப்பும். ஆனால் இதை பற்றி கண்டுகொள்ளாத போக்கு என்பது மாற்றதுக்காக வாக்களியுங்கள் என்ற முழக்கத்தின் மூலம் வாக்குகளைப் பெற்ற பாரதிய ஜனதா அரசு மக்களை ஏமாற்றுகிற வேலையைத்தான் செய்து வருகிறது என்பதையே வெளிப்படுகிறது.

தமிழகத்தில் முதன்மையாக மதுரை - சென்னை இரட்டை ரயில் பாதை திட்டத்தில் திண்டுக்கல் - செங்கல்பட்டு வரையிலான பகுதிக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போயிருக்கிறது.

இதேபோல் மதுரை - திருநெல்வேலி-துாத்துக்குடி இரட்டை ரயில் பாதை திட்டம், மதுரை - விருதுநகர் 2வது பாதை, மதுரை - போடி, மதுரை-அருப்புக்கோட்டை-விளாத்திகுளம்- துாத்துக்குடி, மதுரை-மேலுார்-காரைக்குடி, திண்டுக்கல் - சபரிமலை, செங்கோட்டை-புனலூர்  என பல்வேறு திட்டங்கள் நிதி ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கின்றன.

திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, திண்டிவனம் - வாலாஜா - நகரி, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை  ஆகிய திட்டங்களுக்கு திட்டக்குழு ஒப்புதல் அளித்த போதும் கேட்பாரற்றே இத்திட்டங்கள் கிடப்பில் இருக்கின்றன.

சென்னை ராயபுரம் ரயில் நிலையம் 4-ஆவது ரயில் முனையமாகவும், தாம்பரம் ரயில் நிலையம் 3-ஆவது ரயில் முனையமாகவும் மாற்றப்படும் என்பதும் அறிவிப்பு அளவில்தான் இருக்கிறதே தவிர நிதியைக் காணவில்லை.

சேலத்தில் இருந்து கோவை, பெங்களூருக்கும் கோவையில் இருந்து பெங்களூருக்கும் இரவு நேர கூடுதல் ரயில்கள்; தென்மாவட்டத்தில் இருந்து டெல்லிக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளுக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

இப்படி எண்ணற்ற பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் கேட்பாரற்றுக் கிடக்கும் நிலையில் தற்போது உள்ள ரயில் சேவையை நவீனப்படுத்துகிறோம் என்ற பசப்பு வார்த்தைகளின் பெயரில் தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுப்பதைத்தான் மோடி அரசு முதன்மை கொள்கையாகக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் ரயில்வே நிதிநிலை அறிக்கை தெள்ளத் தெளிவாக கூறுகிறது.

ரயில்வே நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்திருக்கும் அறிவிப்புகளும் வசதிகளும் மேம்போக்காக வரவேற்கத்தக்கதாக தோன்றினாலும் இன்றைய நவீன விஞ்ஞான உலகில் ஒரு அரசு என்பது மக்களுக்கு கட்டாயம் செய்து தர வேண்டிய அடிப்படை கடமைதான்.

இந்தியாவிலேயே சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களை கொண்ட மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேக்கு தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்து பல்லாயிரம் தொழிலாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி ஒரு சில பெருமுதலாளிகள் மட்டுமே லாபம் ஈட்டுவதற்கு வசதியை ஏற்படுத்தித் தருவதுதான் மக்களுக்கான அரசா?

ஒட்டுமொத்தமாக வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தையும் தங்களை வளப்படுத்துக்கிற பெருமுதலாளிகளுக்கு ஏற்றத்தையும் தருகிற நிதிநிலை அறிக்கையைத்தான் மோடி அரசு தாக்கல் செய்திருக்கிறது.

பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

No comments:

Post a Comment