January 3, 2015

ஜெனிவாவில் இலங்கையை காப்பற்றிகொண்டு இருந்த இந்தியப் பிரதிநிதி திலிப் சின்ஹா ஓய்வு!

ஜெனிவாவுக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான திலிப் சின்ஹா, ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவரது இடத்துக்கு இந்திய
வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையிட் அக்பருதீன் நியமிக்கப்படலாம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தர விதிவிடப் பிரதிநிதியாகப்  பணியாற்றிய திலிப் சின்ஹா, கடந்த 31ம் நாளுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

இதையடுத்து, ஜெனிவாவில் அவர் வகித்து வந்த பதவி வெற்றிடமாகியுள்ளது.

இதுவரை அந்தப் பதவிக்கு இந்திய அரசாங்கத்தினால் புதியவர் எவரும் நியமிக்கப்படவில்லை.

ஏற்கனவே பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றிய பி.என்.. ரெட்டி, பதில் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.

திலிப் சின்ஹா ஜெனிவாவில் பணியாற்றிய போது, சிறிலங்காவுக்கு எதிராக மேற்குலக நாடுகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை நீர்த்துப் போகச் செய்வதில்  முக்கிய பங்காற்றியிருந்தார்.

கடந்த ஆண்டு, சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் வரப்பட்ட போது, அதனைத் தோற்கடிக்க பாகிஸ்தான் எடுத்த முயற்சிக்கும், இவர் ஆதரவளித்திருந்தார்.

ஜெனிவாவில் சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடுகளை எடுப்பதில், முக்கிய பங்கு வகித்து வந்த, திலிப் சின்ஹாவின் இடத்துக்கு, அனுபவம் மிக்க இராஜதந்திரி ஒருவரையே நியமிக்க இந்திய வெளிவிவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக உள்ள சையிட் அக்பருதீன் பெரும்பாலும், அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று புதுடெல்லி இராஜதந்திர வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவதில் சவுத் புளொக் தாமதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment