January 6, 2015

அனந்தி சசிதரன் வீட்டின் மீது இன்று அதிகாலை தாக்குதல்!

தனது வீட்டின் மீது இன்று அதிகாலை கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்  தகவல் வெளியிட்டுள்ளார்.


சுழிபுரம் வடக்கம்பரையில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, இன்று அதிகாலை 1.30 மணியளவில், சரமாரியாக கற்கள் வீசப்பட்டதாகவும், தான் எழுந்து விளக்குகளைப் போட்டவுடன், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து தாம், தொலைபேசி மூலம், காவல்துறையினருக்கும், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும், முறைப்பாடு செய்துள்ளதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போதும், அனந்தியின் வீடு தாக்குதலுக்குள்ளாகியிருந்தது.

சிறிலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அனந்தி சசிதரனின் குரலில் நேற்று உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரம் ஒளிப்பரப்பாகியிருந்தது.

அது தமது குரல் அல்ல என்றும், அந்த விளம்பரத்தை ஒளிபரப்ப கட்டணம் செலுத்தியவர்களின் விபரத்தை தரக்கோரியும், அனந்தி சசிதரன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment