January 24, 2015

தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் – சிறப்பாக நடைபெற்ற பேர்லின் தமிழாலயத்தின் தமிழர் திருநாள் பொங்கல்விழா!

தமிழர் திருநாள் – தமிழர்க்கு ஒரு நாள் – தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் – சிறப்பாக நடைபெற்ற பேர்லின் தமிழாலயத்தின் தமிழர் திருநாள் பொங்கல்விழா
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கும் முன் தோன்றிய மூத்த குடியான தமிழர் எங்கள் மரபுகள் தமிழர்க்கு என்று ஒரு தாயகம் இல்லாமையால்
அழிந்தொழிந்து போகும் அவல நிலையில் இன்று இருக்கின்றது. இந்நிலை மாற வேண்டும் என்றால் தமிழர் வாழும் இடம் எங்கும் தமிழர் மரபுகள் பண்பாட்டு விழுமியங்கள் என்பனவும் தமிழ் மொழியோடு சந்ததிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
அந்தவகையில் யேர்மனியில் 130 க்கும் மேலான தமிழாலயங்களை நிர்வகித்து 5000 க்கும் மேலான குழந்தைகளுக்கும் , சிறுவர்களும் தமிழ் மொழியையும் , பண்பாட்டையும், தேசிய உணர்வையும் ஊட்டும் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஒன்றான தலைநகரத்தில் அமைந்துள்ள பேர்லின் தமிழாலயத்தினால் தமிழர் திருநாள் பொங்கல் விழா மிக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
தை பிறந்தால் வழி பிறக்கும்’ இது ஆன்றோர் வாக்கு. தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மூலம் பண்டைய தமிழர்களின் பாரம்பரியம், பண்பாட்டு சிறப்புகளை நாம் எமது எதிர்கால செல்வங்களுக்கு கற்பித்துகொடுக்கவும் அறிந்து கொள்ளவைக்கவும் முடிகின்றது .
புலம்பெயர் தேசங்களில் பிறந்து வளர்ந்தாலும் எமது சிறுவர்களுக்கும் தற்கால இளைய சமுதாயத்தினருக்கும், நகரங்களில் வாழும் வேற்றின மக்களுக்கும் தமிழர்களுடைய பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றுவதாகவும் பேர்லின் தமிழாலயத்தின் தைப் பொங்கல்விழா விளங்கியது.
ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தனது நாகரீகம் போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது.அந்தவகையில் தாயக உணர்வுடன் மண் வாசம் வீச முந்தைய பசுமையான பொங்கல் நினைவுகளையும், மூதாதையர்களையும் மனதில் எண்ணி மண்டப முற்றத்தில் கோலமிட்டு பொங்கல் பொங்கிய காட்சிகள் தாயக நினைவுகளை முழுமையாக மீட்டு எமது குழந்தைகளுக்கு காட்சி அளித்தது .
தொடர்ந்து அரங்கநிகழ்வாக ஆடல் பாடல் கவிச்சரம் நாடகம் என பல்வேறு தமிழ் சுவைகளை உள்ளடக்கிய நிகழ்வுகள் சிறப்பாக அமைந்திருந்ததோடு தித்திக்கும் பொங்கலையும் நாவூற உண்ணும் பேரின்பமும் இந்நிகழ்வில் காணக்கூடியதாக இருந்தது .
எந்த மண்ணில் வாழ்ந்தாலும் தமிழர்கள் ஆகிய நாம் எமது இன அடையாளத்தையும் , மொழியையும் , பண்பாட்டையும் பாதுகாத்து வாழ வேண்டிய உணர்வுகளை எமது அடுத்த சந்ததியினருக்கு கொடுக்கப்பட்ட நிகழ்வாகவே இத் தமிழர் திருநாள் பொங்கல்விழா அமைந்தது .
தாயக மக்களின் துயர் நீக்க தமிழர் திருநாளில் பெற்றோர்களால் உதவிக்கரம் வழங்கப்பட்டதும் தமிழர் திருநாள் பொங்கல்விழாவை முழுமைபெற வைத்தது குறிப்பிடத்தக்கது.
















No comments:

Post a Comment