January 18, 2015

தமிழர் தேசம் விடுதலை பெறுமா? விடைதேடுமா தமிழ் தலைமைகள்?

இதைத் தெளிவாகப்புரிந்து கொள்வார்கள்.
8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தைலின் மொத்த வாக்குகளின் விபரங்களின் முடிவுகளை பார்த்தால்

தமிழ்மக்கள்தான் மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். வாக்களிப்பு விபரங்களை ஆய்வு செய்யும் எவரும்
மைத்திரிபால சிறிசேன- 6217162 ,
மகிந்த ராஜபக்ஷ - 5768090,
வடகிழக்கில் மைத்திரிபால சிறிசேன- 978111 ,
வடகிழக்கில் மகிந்த ராஜபக்ஷ - 323600 ,
அவ்வாறே சிங்கள மாவட்டங்களில்
மைத்திரிபால சிறிசேன - 5239051 ,
சிங்கள மாவட்டங்களில்
மகிந்த ராஜபக்ஷ -5444490,
சிங்கள மக்கள் ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் அது மட்டுமன்றி வடகிழக்கில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களும் ராஜபக்ஷவுக்கே வாக்களித்திருக்கிறார்கள்.
ஈழத்தமிழர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து தமிழ் மக்களின் வாக்குகளை முழுமையாக பெற்று சிங்களத்தலைமைகளை நிராகரிக்கும் செய்தியினை மீண்டும் உணர்த்த விரும்பிய தமிழ்மக்களின் தீர்க்கதரிசனமான முடிவினை நிராகரித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மீண்டும் சரணாகதி அரசியலான இணக்க, சலுகைக்கான அரசியல் சகதிக்குள் தமிழ் மக்களைத் தள்ளியுள்ளது.
தந்தை செல்வாவினது கொள்கையை நடைமுறைப்படுத்தியவர் தலைவர் பிரபாகரன். இக் கொள்கையினை ஏற்றுக்கொண்ட மாவீரர்களினதும் தமிழ் மக்களினதும் குருதியில் உருவானதுதான் தமிழ் தேசியகூட்டமைப்பு.
இன்று அவை அனைத்தையும் மறந்து தமிழ்மக்களின் உரிமைகளை தங்கள் ஒரு சிலரின் நலனுக்காக சிங்கள அரசிடம் அடகு வைத்துள்ளதுதமிழ் தேசிய கூட்டமைப்பு. தமிழீழ அரசையும், சிங்கள அரசையும் ஒன்றிணைத்தவர்கள் ஆங்கிலேயர் என்பது தமிழ்த்தலைவர்கள் அனைவருக்கும் தெரியும்.
இறுதியில் இத் தேசம் விடுதலை பெறும் போது தமிழ்த்தலைவர்கள் சிங்கள அரசை சிங்களவர்களுக்கும், தமிழரின் அரசை தமிழர்களுக்கும் தரும்படி கேட்டுப் பெற்றுக்கொள்ளாததாலேயே இன்றைய துன்பம் எமக்கு ஏற்பட்டது.
எமது தலைவர்களின் தீர்க்கதரிசனமற்ற இம் முடிவினால்தான் இன்று தமிழினம் அழிந்து சிதறுண்டு சின்னாபின்னமாக சீரழிந்தது. இதன் பின்னால் வந்த தமிழ்த்தலைவரான தந்தை செல்வா தமிழீழத்துக்கு பதிலாக சமஸ்டி அரசைக்கோரினார்கள்.
இக் கோரிக்கையை முன்வைத்து பல ஆண்டுகளாக அகிம்சைப் போராட்டங்களை நடாத்தினார். அதைக்கூட சிங்கள அரசு ஏற்க மறுத்தது மாத்திரமன்றி, அவை அனைத்தையும் சிங்கள அரசும் சிங்களத்தலைவர்களும் இராணுவத்தை ஏவி கொடூரமாக அடக்கினார்கள்.
இதையடுத்துத்தான் 1976ல் ஏனைய தமிழ்த்தலைவர்களையும் ஒன்றிணைத்து தமிழீழ அரசுக்கான தீர்மானத்தை தந்தை செல்வா ஏக மனதாக நிறைவேற்றினார். இக் கோரிக்கையை தந்தை செல்வா முன் வைத்து தேர்தலிலும் நின்று பெரு வெற்றியையும் ஈட்டினார்.
அந்த ஜனநாயகக் கோரிக்கையையும் சிங்கள அரசு தங்களின் பெரும்பான்மை பலத்தைக்கொண்டு சட்டம் போட்டுத் தடுத்ததோடு. 1977ம், 1983ம் ஆண்டுகளில் இனக் கலவரத்தை ஏற்ப்படுத்தி தமிழ்மக்களை அழித்தது.
1958ல் தமிழ் மக்களை அழித்த வரலாறும் நம்மவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். தந்தை செல்வாவின் மறைவிற்குப் பின் தலைமையேற்ற அமிர்தலிங்கம் அவர்கள் சுயநலமான சலுகை அரசியலுக்கு விலைபோனார்.
ஆயினும் இவ் அடக்குமுறைகளுக்கு எதிராக தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆயுதப்போராட்டத்தை 25வருடங்களுக்கு மேலாக நடாத்தி உலக நாடுகள் அனைத்தையும் தமிழ் ஈழ மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.
30வருடங்களாக நடந்த அகிம்சைப் போராட்டத்தையும்,மக்களின் அழிவினையும் திரும்பிப் பார்க்காத உலக நாடுகள் எமது விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்ததோடு, எமது தலைமையையும் எமது மக்களையும் அழிப்பதற்கு சிங்கள அரசுக்கு உதவினார்கள்.
இவை அனைத்தும் தமிழ் மக்களின் வாழ்வில் மறைக்கவோ திரிக்கவோ முடியாத வரலாற்று உண்மைகள். இன்று எமது மக்களின் பிரச்சினைகள் உலக அரங்குகளில் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. இது அகிம்சைப் போராட்டத்தினால் ஏற்பட்டதல்ல. ஆயுதப்போராட்டத்தினால் ஏற்பட்டது.
விடுதலையடைந்த நாடுகளின் வரலாறும் இதுதான். அண்மையில் பொதுவாக்கெடுப்பு நாடாத்தி விடுதலைப் பெற்ற நாடுகளின் வரலாறும் இப்படித்தான் உள்ளது. உண்மைகளை வார்த்தைகளால் மறைத்துவிட முடியாது.
இன்று புலம்பெயர் அமைப்புகளின் பெரு முயற்சினால் தமிழீழத்தில் நடைபெற்ற கொடுமைகளுக்கு எதிராக சர்வதேசவிசாரனை, மற்றும் பொதுவாக்கெடுப்பு என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வளர்ந்து வரும் சூ ழ்நிலையில் அதை இல்லாமல் செய்து தங்களது பதவி அரசியலை முன்னெடுத்துள்ளது தளத்தில் உள்ள தமிழ்த்தலைமை.
தமிழ் மக்களின் விடுதலையை மறந்து அவர்களின் எதிர்காலத்தை மீண்டும் அடிமைத்தனத்தை நோக்கி இவர்கள் நகர்த்தியிருக்கிறார்கள் வடகிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற மாட்டேன். சர்வதேசவிசாரணையை இலங்கையில் நடாத்த விடமாட்டேன் என பகிரங்கமாக அறிவித்த சிங்கள ஜனாதிபதியை தமிழ்மக்களின் வாக்குகளால் வெற்றிபெறச் செய்துள்ளது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு.
பதவியேற்பு வைபவத்திலேயே தமிழ்மக்களினால் பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன தமிழ்த்தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. மாறாக சிங்களத்தலைவர்களுக்கே நன்றி தெரிவித்திருப்பதை மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாவது நிகழ்விலேயே ஒரு நன்றி கூட சொல்லமுடியாது, வேறுபாட்டைக் காட்டிய இவர்தான் தமிழ் மக்களைக் காப்பற்றப் போகின்றாரா?மைத்திரிபால சிறிசேன தமிழ்மக்களைக் காப்பாற்றுகின்றாரோ இல்லையோ, தமிழ் தலைவர்களுக்கு பதவிகளும் வசதிகளும் நிச்சயமாகக் கிடைக்கும்.
1919ல் இருந்து கிட்டத்தட்ட 95 வருடங்களாக சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட தமிழினத்தை மீண்டும் சிங்களத்துக்கு அடகு வைத்துள்ளது தமிழ்த்தலைமை. இதைத் தங்களின் இராஜதந்திரம் எனவும் சொல்லிக்கொள்கின்றார்கள்.
நூறு வருட காலமாக சிங்களவர்களிடம் ஏமாறுவதுதான் இவர்களின் இரஜதந்திரமாம். தங்கள் உடுபிடவைகளில் அழுக்குப்படாமல் அரசியல் செய்யும் இத் தமிழ்த்தலைவர்கள் தங்களின் பதவி ஆசைகளுக்கே தமிழ் மக்களைத் தீனியாக்கியுள்ளார்கள்.
இன்று தமிழ்மக்களின் பிரதான கோரிக்கைகளான:
வடகிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவது
வடகிழக்கில் குடியேற்றிய புதிய சிங்களக்குடியேற்றங்களை அகற்றுவது
தமிழ் மக்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு ஒன்றைநடத்துவது
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது
மாவீரர் துயிலும் இல்லங்களை புனரைமைப்பது
இவற்றை இந்த ஜனாதிபதியை ஆட்சியில் அமர்த்திய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒரு வருட காலத்துக்குள் செய்யுமா?
விடையைத் தமிழ் மக்கள்தான் தேட வேண்டும்!!
- மாறன்

No comments:

Post a Comment