January 24, 2015

யாழ். பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களை மாற்ற வேண்டும் – மாணவர் ஒன்றிம் வலியுறுத்து!

யாழ்.பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் அரசியல் செல்வாக்கினை வைத்துக்கொண்டு பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களாகியவர்களை
மாற்ற வேண்டும்.கல்வியறிவுள்ள அரசியல் சார்பற்ற புத்திஜீவிகள் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கடந்த காலத்தில் அரசியல் செல்வாக்குடன் மூதவை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமைக்கு கண்டத்தையும் தெரிவித்துள்ளது. மேற்படி விடயம் தொடர்பில் மாணவர் ஒன்றியம் விடுத்திருக்கும் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

எமது பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களை உடனடியாக மாற்றி அரசியல் சார்பற்ற கல்வியறிவு கொண்ட புத்திஜீவிகளை இவ் அவையிலே நியமிக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது. கடந்த காலங்களில் பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்கள் அரசியல் தலையீடுகளினாலும், தனிநபர் செல்வாக்குகளினாலும் தகுதியற்ற உறுப்பினர்களை நியமித்தமைக்கு எமது ஒன்றியம் கண்டிக்கின்றது.

எமது பல்கலைக்கழக மூதவையானது பல்கலைக்கழக தனித்துவம், பல்கலைக்கழக அபிவிருத்தி, மாணவர், சமூக நலன், எமது பாரம்பரியம், பண்பாடு, என்பவற்றை உணர்ந்து மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் எமது பல்கலைக்கழகத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் அரசியல் தலையீடுகளோ, தனிநபர் செல்வாக்குகளோ இடம்பெறக்கூடாது. அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் மாணவ போராட்டங்களின் மூலம் கடும் எதிர்பினை தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எமது ஒன்றியம் உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றது.

ஆகவே உரிய தரப்பினர் இதனை கவனத்திற் கொண்டு எமது பல்கலைக்கழகத்தின் தற்போதைய மூதவை உறுப்பினர்களின் பதவியினை இரத்துச்செய்து எதுவித அரசியல் சார்பற்ற கல்வியறிவு கொண்ட புத்தியீவிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எமது மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது.

No comments:

Post a Comment