December 25, 2014

எங்கே போனீர்கள் அப்பையா அண்ணை!- ச.ச.முத்து

மீண்டும் ஒருமுறை அப்பையா அண்ணையின் நினைவுநாள் வந்துள்ளது. அப்பையா அண்ணை என்றவுடன் நினைவுக்கு வருவது அந்த ஓய்வு ஒழிச்சல்
இல்லாத போராளித்தனமே. அதிலும் அப்பையா அண்ணையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீலன், சங்கர் போன்றோர் திணறி ஓடி ஒழியும் காட்சிகள் இன்னமும் நினைவுக்குள் நிற்கிறது.
சீலன், சங்கர், கிட்டு போன்றோர் அதிகூடிய வேகத்துடனும் பயமில்லாத வீரத்துடனும் தினமும் ஏதாவது செயற்பாட்டில் செறிவாக ஈடுபடுபவர்கள். அவர்களின் வேகமே மிக அதிகம் என்று அண்ணை அடிக்கடி சொல்வார். அப்படியான சீலன்,சங்கர் போன்றோரையே திணறடிக்கும் வேகமும் புதிய திட்டங்களும் நிறைந்தவராக அப்பையா அண்ணை இருந்தவர். பெருகி ஓடி வரும் பெரும் காட்டாறு போன்றது அவரின் விடுதலைப் போராட்ட ஆர்வம்.
அதனை தக்கவைத்து தேக்கி செற்பாட்டில் ஆரோக்கியமாக ஈடுபடுத்துவதற்குள் சீலன் ஆட்களுக்கு போதும் போதும் என்றாகிவிடும். ஏதாவது ஒரு வெடிப்பொருளுடன் வந்து நிற்பார்’.புதிய தாக்குதல் ஒன்றுக்கான திட்டத்துடன். ஏற்கனவே திட்டமிடப்பட்டு தகவல் சேகரித்தல், வளங்களை தேடல் என்ற நிலையில் இருக்கும் பெருந்தாக்குதலை இந்த தாக்குதல் திட்டம் நடைபெறாமலேயே செய்துவிடும் என்று சொல்லி அப்பையா அண்ணையை கொஞ்சம் பொறுக்க சொல்லி கெஞ்சுவார்கள். அதற்காக அப்பையா அண்ணையை வேறு இடங்களுக்கு தங்க அனுப்பியும் விடுவார்கள்.
ஒருமுறை இப்பிடித்தான் அப்பையா அண்ணையின் உரு கொஞ்சம் அதிகமாகி விடவே அவரை எங்கள் பகுதியில் தங்கவைக்க அனுப்பிவிட்டான் சீலன். எங்களுருக்கு அருகில் இருக்கும் பொலிகண்டிப் பகுதியில் இருக்கும் எமது நெருங்கிய ஆதரவு உறவு ஒன்றின் வீட்டில் தங்கவைத்தோம்..
அப்போதுதான் சிவநேசன்(சூசை) போன்றவர்கள் அமைப்பில் இணைவதற்காக கதைத்துக் கொண்டிருந்த பொழுதது. அப்பையா அண்ணையை ஒருநாள் அவர்கள் கடற்கரைக்கு கூட்டிச் சென்றிருந்தார்கள். அந்த நேரத்தில் சிங்கள கடற்படை இப்போதையை போலவே எந்தவித பயமும் இன்றி குளங்களில் பயணம் செய்வது போல கடலில் ரோந்து போய்க்கொண்டே இருப்பார்கள்.
எதிர்ப்படும் கடற்தொழில் படகுகளை மறித்து சோதனை இடுவது அடிப்பது என்று ஒரு கடல்அரக்க இராஜ்ஜியம் தான். எல்லோரும் இதனை பலநூறு தரம் பார்த்திருப்போம். எங்களுக்குள் தோன்றாத ஒரு புது திட்டம் அப்பையா அண்ணைக்கு வெளித்தது. மறுநாளே ‘சீலனையும், சங்கரையும் உடனே பார்க்க வேணும்’ என்று ஒரே வற்புறுத்தல்.
அனுப்பி ஒரு வாரத்துள் அப்பையா அண்ணையை கூட்டிக்கொண்டு மீண்டும் அங்கு போனால் அவர்களுக்கு எப்படி இருக்கும்? ஆனால் அப்பையா அண்ணை கேட்டுவிட்டால் பிறகு மறுத்து ஆகாது. இறுதியில் சீலனே கொஞ்சம் இறங்கி வந்து ‘அப்பையா அண்ணை அங்கே வரவேண்டாம். நாங்களே அவரிடம் பொலிகண்டிக்கு வருகிறோம்’ என்று சொல்லி வந்தார்கள்.
சீலனை கடற்கரைக்கு கூட்டிச் சென்ற அப்பையா அண்ணை ‘ நேவி போர்ட் இந்த பக்கத்தாலே வரும் போது ஒரு பார்சலை அல்லது சாக்குமூட்டையை கடலில் தற்செயலாக மிதக்க விடுவோம். அவன் அதனை எடுக்கும் போது அது வெடித்தால் எப்படி இருக்கும்’ இதுதான் அப்பையா அண்ணையை கொஞ்சம் ஓய்வெடுங்கோ என்று அனுப்பின இடத்திலை அவர் கண்டுபிடித்த திட்டம்.
இந்த இடத்திலை அப்பையா அண்ணையை பற்றி கொஞ்சம். சீலனுக்கு நன்கு தெரியும் அப்பையா அண்ணை ஒரு தாக்குதல் திட்டம் தருகிறார் என்றால் அதன் ஒவ்வொரு தொழில்நுட்ப வேலையையும் அவர் செய்ய முடியும் என்றால் மட்டுமே தருவார். அதுதான் அப்பையா அண்ணை.
ஆனால் அந்த தாக்குதல் முறை வேறுவேறு காரணங்களால் பின்னர் நடைபெறாமலேயே போய்விட்டது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் கடற்படை அணியாக வளர்ச்சி பெற்ற காலங்களில் இதனை ஒத்தமுறையில் பல தாக்குதல்களை நடாத்தி அப்பையா அண்ணைக்கு காணிக்கை ஆக்கினார்கள்.
பழைய போராளிகளுக்கு மட்டுமல்ல அப்பையா அண்ணையை தெரிந்த புதிய போராளிகளுக்கும் கூட அப்பையா அண்ணை வீரமரணமாகி பதினேழு ஆண்டுகளுக்கு பிறகும் இப்போதும் அவரின் பெயரை கேட்டதும் அவர்களின் மன எழுச்சியும், ஏதோ ஒரு பெரும் உணர்வும் பெருமிதமும் அவர்களின் கண்களிலும் கதையிலும் தெரிகிறதே அதுதான் அப்பையா அண்ணை இந்த போராட்டத்துள் விட்டு சென்றுள்ள அவரின் அழியாத சுவடு ஆகும்.
அப்பையா அண்ணை என்ற மனிதன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பதித்த சுவடுகள் காலத்தால் மறையக் கூடியவை அல்ல. அவை மனங்களுக்குள் ஆழமாக கொலுவீற்று இருக்கின்றன.
மிகக்குறுகிய சாதிவாதமும் குழுவாதமும் பேசியபடி அமைப்பில் இருந்து சிலர் வெளியேறி சென்ற நேரமொன்றில் பலர் மனமொடிந்து விலகி சென்று கொண்டு இருக்க அண்ணை ஒரு கைவிரலில் இருக்கும் விரல்கள் அளவேயான உறுப்பினர்களுடன் நின்றிருந்த நேரத்திலேயே அப்பையா அண்ணையை தேசியத்தலைவர் முழுநேரமாக கொண்டுவருகிறார். அதற்கு முதலே அவர் தேசியத்தலைவரின் தொடர்பில் இருந்தார். ஆனால் பெரிதாக எவருக்கும் தெரியாமல் ஒருவிதமான உறங்குநிலை உறுப்பினராகவே இருந்தார்.
இத்தகைய சிலீப்பிங் செல்களை உருவாக்கி பேணுவதில் தலைவர் மிகவும் திறமையானவர். பகிரங்கமாக வெளித்தெரியும் கட்டமைப்பும் ஆளணியும் அழிக்கப்பட்டாலும் கூட இந்த உறங்குநிலை உறுப்பினர்கள் மீளவெளிவந்து செயற்படுவதே உலக மரபு. அப்பையா அண்ணையும் அப்படியே வெளிவந்தார்.
அவர் வேலைசெய்து கொண்டிருந்த மருத்துவமனை வேலையிலே தொடர்ந்தபடி தலைவரின் தொடர்பில் இருந்தவரை மண்ணுக்குள் புதைந்து நின்றுவிட்ட விடுதலைப் போராட்ட தேர் சக்கரத்தை நகர்த்தும் உன்னத பணிக்காக வரலாறு அழைத்து வந்தது.
உண்மையிலேயே அந்த பொழுதில் அப்பையா அண்ணை வந்திருக்காது விட்டால் மிகப்பெரிய தாக்குதல் திட்டங்கள் நடந்திருக்காது அல்லது சில காலம் தள்ளி நடந்திருக்கும் என்றே சொல்லலாம்.
ஒரு விடுதலை அழைப்புக்கு தேவையானது மக்கள் மத்தியில் கரைந்துறைந்து வாழ்ந்து கொண்டே போராட்டத்துக்கான தளத்தை விரிவுபடுத்துவதுதான்.
மக்கள் மத்தியில் வாழ வேணுமானால் எமக்கு வீடுகளும் தங்குமிடங்களும் வேணும். யார் தருவார்கள் அப்போது..??தேவையறிந்து அப்பையா அண்ணை களம் இறங்கினார்.தந்தையாக, சித்தப்பாவாக, மாமாவாக, அண்ணாவாக என்று ஒவ்வொரு இடத்துக்கு ஒவ்வொரு வேடம். போராளிகளை அறை எடுத்து தங்க வைத்துவிட்டால் அடுத்த கட்டம் இலகுவாக நகரலாம் என்பதால் அப்பையா அண்ணை அலைந்து திரிந்து பல பகுதிகளில் வீடுகளை, அறைகளை எடுத்து தங்குமிடம் ஆக்கினார்.
அப்படி அலைந்து திரிந்ததில் வீட்டு உரிமையாளர்களின் மனோவியலை அவர் ஆழமாக படித்தும் இருந்தார். இளவாலைப் பகுதியில் எடுத்து தந்த அறையில் இருக்கும் போராளிகள் தெல்லிப்பழையில் பொன்னம்மான் ஆட்கள் இருந்த வீட்டில் வந்து குளித்து சாப்பிடுவது வழமை. அப்பையா அண்ணை அடிக்கடி சொல்லுவார். ‘டேய், இளவாலை வீட்டு அறையில் இருக்கிற ஆட்கள் கிழமைக்கு இரண்டு நாள் தன்னும் அந்த வீட்டிலேயே குளியுங்கோடா வீட்டுக்காரன் சந்தேகப்பட போறான் சந்தேகப்பட போறான் என்று.
யார் கேட்டார்கள்.கடைசியில் ‘ தம்பியவையள் நீங்கள் இங்கை ரூம் எடுத்து இருக்கிறீங்கள். சீமென்ட் தொழிற்சாலையிலை வேலை செய்யிறீங்கள் என்றுதான் உங்கடை சித்தப்பா சொன்னவர். ஆனால் ஒருநாள்கூட இந்த வீட்டிலை நீங்கள் குளித்து நான் காண இல்லை.வேறு எங்கேயும் இன்னொரு ரூம் இருக்கோ’ என்று சந்தேகப்பட்டு கேட்க அந்த ரூமை காலி பண்ண வேண்டி வந்த போது அப்பையா அண்ணை ‘நான் சொன்னா ஆர் கேட்கிறாங்கள்’ என்று சொல்லி மீண்டும் இன்னொரு ரூம் தேடி அலைய தொடங்கியதுதான் அவரது இயல்பு.
விடுதலைப் புலிகள் என்றால் இப்பிடித்தான் இருப்பார்கள் என்று சிங்கள புலனாய்வு போட்டு வைத்திருந்த எல்லாவிதமான அனுமானங்களையும் சிதறடித்த தோற்றமும் வயதும் அப்பையா அண்ணைக்கு.
ஏற்கனவே வெடிப்பொருட்களுடன் ஏதாவது தொழில்நுட்பம் செய்யும் ஆவல் இருந்த பொன்னம்மான், சங்கர், செல்லக்கிளி, கிட்டு ஆட்களுக்கு அப்பையா அண்ணையின் வருகை பல கதவுகளை திறந்து விட்டிருந்தது. அதிலும் அப்பையா அண்ணைக்கும் சத்தியநாதனுக்கும்(சங்கர்) ஒருவிதமான வெடிகுண்டு பாசையே இருந்தது என்று சொல்லுமளவுக்கு எறிகுண்டுகளையும், கண்ணிகளையும் செய்ய முயற்சித்ததில் ஒரு ஒருமித்த உணர்வு இருந்தது.
இந்த விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பித்த நாட்களில் பகலில் குப்பை மேடுகளில் பார்த்து கண்வைக்கப்படும் பேணிகள், மார்மைட் போத்தல்கள், தோசைசட்டிகள் என்பன இரவில் குண்டுகள் செய்வதற்கான மூலப்பொருட்களாக அண்ணையால் தேடி எடுக்கப்பட்டதை போலவே அப்பையா அண்ணை தன் இறுதி நாள் வரைக்கும் எமது வளவுகளில் தெருக்களில் தேடி எடுக்கும் பொருட்களை போராட்டத்திற்காக பயன்படுத்தும் முறை பற்றி ஆராய்ந்தவர்.
இந்த விடுதலைப் போராட்டம் உலக விடுதலைப் போராட்டங்கள் எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமாக விமானங்கள், அதிவேக தாக்குதல் படகுகள், நீர்மூழ்கிகள், துல்லியமான எறிகணை வீச்சு என்று வளர்ந்ததற்கு ஏதோ ஒரு புள்ளியில் மிகப்பெரும் ஆதர்சமாக, ஊக்கியாக அப்பையா அண்ணையும் நின்றிருக்கிறார்.
இவ்வளவு செய்யும் அப்பையா அண்ணைக்குள் ஒரு குழந்தை மனது எப்போதும் தூங்காமல் விழித்தபடியே இருந்திருக்கிறது. அவர் எமக்கெல்லாம் தந்தையாக, சித்தப்பாவாக, மாமாவாக, பெரிய அண்ணாவாக வீடுகள், அறைகள் வாடகைக்கு எடுப்பதற்கு நடித்திருக்கிறார். ஆனால் உண்மையிலேயே அவர் போராளிகளை தனது பிள்ளைகளாகவே, தனது மருமக்களாகவே, தனது பெறா மக்களாகவே நினைத்திருந்தவர்.
சங்கர் முதன்முதலில் வீரமணமடைந்த சேதி கேட்டு அப்பையா அண்ணை ஒரு சின்னக் குழந்தை போலவே வெடித்து அழுத போதிலே அது புரிந்தது. பிறகு சீலன் போன போது, செல்லக்கிளி போன போது என்று..
வெறுமனே இந்த நினைவுகள் மீட்டி பார்ப்பதற்கு மட்டுமல்லமால் கற்றுக்கொள்ளவும் செய்தால் மட்டுமே நாம் அடுத்த கட்டத்துக்கு நகரமுடியும்.
அப்பையா அண்ணையின் நினைவுப்பாடம்: எல்லோரும் பகுதிநேர செயற்பாட்டாளர்களாக அரசியல் செய்தும் எழுதியும் கொண்டிருக்கும் இந்த பொழுதில் முழுநேரமாக தன்னை போராட்டத்துக்காக கொடுத்து முன்வந்த அப்பையா அண்ணையின் முனைப்பு நம் எலலோர்க்கும் வந்தே தீர வேண்டும்.
தனது மருத்துவமனை வேலையை விட்டுவிட்டு முழுமையாக அந்த வயதிலும் போராட முன்வந்த அப்பையா அண்ணை நம் எல்லோர்க்கும் எப்போதும் முன்மாதிரி தான்.-எப்போதும், எப்போதுமே….
ச.ச.முத்து
Appaiyaa-Annaa

No comments:

Post a Comment