September 14, 2014

மாதகலில் கடற்படையினர் கெடுபிடி!

யாழ்.மாதகல் பிரதேசத்தில் கடற்படை முகாம் மற்றும் பௌத்த விகாரை ஆகியன அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கடற்தொழிலில் ஈடுபடுவதற்கு
அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சில தினங்களில் உபகரணங்கள் அனைத்தையும் அகற்றுமாறும் படையினர் உத்தரவு பிறப்பித்திருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறித்த பகுதியில் சம்பில்துறை, திருவடிநிலை ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான நிலம் கடற்படையினராலும், விகாரை அமைப்பதற்காகவும் அபகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் நீண்டகாலம் வாழ்ந்த நிலங்களில் குடியேற முடியாமல் காட்டுப்புலம் பகுதியில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு மேற்படி கடற்படை முகாம் மற்றும் பௌத்த விகாரை ஆகியன அமைந்துள்ள பகுதியான தரையில் 5 கிலோ மீற்றர் வரையிலான பகுதிக்கு கடல் பக்கமாக உள்ள 2 கடல் மைல் தூரத்திற்கு மீனவர்கள் எவரும் வரக்கூடாதென கடற்படையினர் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
இந்நிலையில், அந்தப் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுவந்த மீனவர்கள், அயல் கிராம மீனவர்களுக்குச் சொந்தமான பகுதியில் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் பல பிணக்குகள் இரு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கிடையில் உருவாகியிருந்தது. அந்தப் பிணக்கு ஒருவாறாக தீர்ந்திருந்த நிலையில், மீண்டும் தங்கள் பகுதிக்குள் வரக்கூடாதென கடற்படையினர் கடுமையான உத்தரவினை மீனவர்களுக்கு கொடுத்துள்ளதுடன், கடற்கரையிலிருந்த கடற்றொழில் உபகரணங்களை உடனடியாக அகற்றுமாறும் பணித்துள்ளனர்.
இந்நிலையில் கடற்றொழிலை அடிப்படை வாழ்வாதார தொழிலாக கொண்டிருக்கும் ஏழை மீனவக் குடும்பங்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
தங்களுடைய பகுதியில் தம்மை கடற்றொழிலையாவது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசியல்வாதிகள் மற்றும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அங்கு வரும்போது மீனவர்களுக்கு எவ்வாறான இடையூறையும் செய்வதில்லை என கூறும் கடற்படையினர் பின்னர் தம்மை கடுமையாக அச்சுறுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்.
இதேவேளை தாம் எடுத்திருக்கும் காணி இந்தியாவில் உள்ள சிதம்பரம் ஆலயத்திற்குச் சொந்தமானது என்பதனால் அதனை மக்கள் உரிமை கோர முடியாது என கடற்படையினர் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment