September 14, 2014

நரேந்தர் மோடியின் நூறுநாள் ஆட்சியும் சுப்ரமணிய (ஆ)சாமியும்: ச.ச.முத்து!!

இந்த வருடம் மேமாதம் 26ம்திகதி பிரதமர் பதவியில் உத்தியோகபூர்வமாக நரேந்திரமோடி ஏறி உட்கார்ந்தார். நீண்டகாலத்துக்கு பிறகு அதிகூடிய
பெரும்பான்மை ஆசனங்களுடன் ஒரு கட்சி ஆட்சியேறிய விந்தையை நிகழ்த்தி காட்டியவர் அவர்.
பாரதீய ஜனதா கட்சியின் கொள்கைகளுக்காகவோ, தேர்தல் விஞ்ஞாபனத்துக்காகவோ அந்த வெற்றி அல்ல. மாறாக நரேந்திரமோடி என்ற பிரதமர் வேட்பாளருக்காகவே என்ற பெயருடன் பிரதமராக அமர்ந்து இந்த மாதம் 2ம் திகதியுடன் தனது நூறாவது நாளை தொட்டு தாண்டியுள்ளார். (சுப்ரமணிய(ஆ)சாமி போன்றவர்களை அணைத்து வைத்துள்ள ஒரு கட்சி நூறாவது நாளை தாண்டுவது சாதனைதான்) மோடியின் நூறுநாள் ஆட்சியை ஒரு கண்ணோட்டம் பார்பது நல்லது. நூறுநாள் என்பது ஒருவிதமான உரைகல் என்று மோடியே முடிவுசெய்ததால்தான் தான் பதவி ஏற்றதும் தனது அமைச்சர்களை உடனடியாக நூறு நாட்களுக்கான திட்ட ப்ளுபிரிண்டை தயார் பண்ணி தமக்கு சமர்ப்பிக்கும்படி வேண்டினார்.
மோடியின் நூறு நாள் ஆட்சி என்பது எல்லாவிதமான திட்டங்களுக்கும் வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் போடுவதிலேயே ஆர்வம் காட்டிவருவதை பார்க்கலாம். உள் கட்டமைப்பு திட்டங்களுக்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்று அந்த நாட்டுடன் 35 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தங்களை கையெழுத்திட்டதும் இந்திய உள் கட்டமைப்புக்கு இதனைவிட சிறப்பாக திட்டங்களை தம்மால் தரமுடியும் என்று செஞ்(?) சீனா கூறியதும் இந்தியாவின் அனைத்து துறைகளும் வெளிநாட்டு முதலீடுகளுக்காக திறந்துவிடப்பட்டுள்ளதையே மோடி அரசு உறுதிபடுத்தி உள்ளது.
பாதுகாப்புதுறையினுள்கூட 49 வீதமான அந்நிய முதலீடுகளை அனுமதித்து உள்ளது. அத்துடன் உலகின் மிகப்பெரும் தொடரூந்து (ரெயில்) வலையமைப்பை கொண்ட இந்தியா தொடரூந்து வலையமைப்பில் 100 வீதமான அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளது. இவற்றால் இந்தியாவின் பங்கு சந்தை புள்ளிகள் இந்திய தேசிய பங்கு சந்தை 'நிப்டி' 8 வீதமும், மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 9 வீதமும் அதிகரித்துள்ளது.
இரண்டு முறை பெற்றோல் டீசல் விலைகளை குறைத்துள்ளதும் குண்டு துளைக்காத மேடையில் நின்றபடி சுதந்திரதின நிகழ்வில் பேசியதும் கொஞ்சம் வித்தியாசமானதாக பார்ப்பவர்களுக்கு இருந்தாலும் இன்னும் பல விடயங்களில் பழைய சோனியா காங்கிரஸ் நிலைப்பாடே நீடிக்கிறது. ஊழல், கருப்பு பணத்தை மீட்டு இந்தியா கொண்டுவருவது, உணவு பாதுகாப்பு சட்டம், நிலக்கரி ஊழல் என்பனவற்றில் இதே நீர்த்துப்போன காங்கிரஸ் நிலைப்பாடுதான் இன்னமும் நீடிக்கிறது. அதனைப்போலவே எமது பிரச்சனையிலும் இன்னமும் அதே காங்கிரஸின் கண்களுக்கூடாகவே பார்க்கும் பார்வையே தொடர்கிறது மோடி ஆட்சியிலும்...
எட்விகே அன்ரோனியோ அல்பினா மைனோ என்ற சோனியா ராஜீவ்க்கு இருந்த அதே அணுகுமுறைதான், இம்மியும் மாற்றமடையாமல் நரேந்திர தாமோதர மோடியின் காலத்திலும் தொடர்கிறது. இதன் உள்அர்த்தம் ஒன்றேதான். இலங்கையுடன் நட்புறவு மிக முக்கியம் என்பதே கோனியாவினதும் நரேந்திரமோடியினதும் முக்கியமான நோக்கம். சிங்களத்துடன் நட்புறவாக இருந்து கொண்டு தமிழர்களின் உரிமைகளுக்காக ஒருபோதும் மத்திய அரசால் குரல் கொடுக்கவே முடியாது என்பதை எப்போது புரிய போகிறார்களோ..?
ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய கடலில் கொல்லப்படும் தமிழக மக்களுக்கும்கூட இந்தியா குரல் கொடுக்கவே முடியாது.. காலகலமாகவே இலங்கை, அல்லது சிறீலங்கா என்பது இந்தியாவுடனான தொடர்புகளை அறுத்தெறிந்து இன்னொரு சக்தியுடன் தொடர்புகளை வலுப்படுத்துவதை தடுப்பதற்கான முயற்சிக்கின்றோம் என்று சொல்லி சொல்லியே சிங்களத்தின் அத்தனை இன அழிப்புகளுக்கும் இந்தியா துணைபோகின்றது.. இது இன்று நேற்றல்ல 1954ல் சேர் ஜோன் கொத்லாவலா என்ற சிங்கள அதிபருடன் நேரு மலையக தமிழர்களின் குடியுரிமைக்கு கொள்ளி சொருகிய ஒப்பந்தத்தை செய்தபோது அப்போதைய நேருவின் நண்பரும், கம்யூனிஸ்ட் தோழரும்(?), பாதுகாப்பு அமைச்சருமான கிருஸ்ணமேனன் கூறினார் 'இந்த விசயத்தால் தமிழர்கள் பாதிப்படைவார்கள் என்பது நேருவுக்கு தெரியும். ஆனால் அதனை அவர் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை' என்று நேருவுக்காக வக்காலத்து வாங்கினார்.
மேற்குலகின் எதிர்பாளராக தன்னை காட்டிய நேரு அவுஸ்திரேலியாவுடன் இலங்கை அப்போது நெருங்குவதை தடுப்பதற்காகவே இதனை செய்ததாக காரணமும் கூறப்பட்டது. இப்போதும் பாருங்கள் இதே நிலைதானே.. சீனா வருகிறது.. இதோ சீனா நுழைகிறது என்று சொல்லி சொல்லியே ஒரு இனத்தின் வாழும் உரிமை மறுக்கப்படுகிறது. சீனாவையும், தமிழர்களின் உரிமையையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பதே இந்திய ராஜதந்திர கோணங்கித்தனம்.. அதுவே மோடியின் காலத்திலும், இந்த 100நாள் ஆட்சியிலும் தொடர்கிறது. இதன் உச்சமாகவே சுப்ரமணிய(ஆ)சாமி ஒரு உத்தியோக பூர்வமற்ற இடைத்தரகர்போல சிங்களத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறார்.
சிறீலங்காவின் பாதுகாப்பு மாநாட்டில் தான் கலந்துகொள்வேன் என்று பகிரங்கமாக அறிவிப்பதில் தொடங்கி சிங்கள தேசம் பிடித்து வைத்திருக்கும் தமிழ்நாட்டு படகுகளை விடவேண்டாம் என்று தான்தான் மகிந்த ராஜபக்சேக்கு சொன்னதாக சொல்வதுவரை வந்துள்ளார். சுப்ரமணிய(ஆ)சாமி என்ற தனிநபர் சிங்களத்தின் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டால் என்ன சிங்கள அதிபரின் பாதங்களை புனித நீரால் கழுவினால் என்ன எமக்கென்ன?
மதுரை மாவட்ட சோழவந்தானை சொந்த இடமாக இந்த சுப்ரமணிய(ஆ)சாமி சொல்லி கொண்டாலும் இவர் ஒருபோதும் தமிழர்களின் நலனிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர் அல்ல என்பதும் சிங்கள அரசுக்கு ஆதரவாக கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்துவரும் இவர் எப்படி இந்தியாவின் சார்பாக, பாஜகவின் சார்பாக பேசமுடியும்.
மேலும் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே மகிந்தவுக்கு அதரவான குரல்களை பலத்து எழுப்பியவர் இந்த மானுட விரோதி. முழுக்க முழுக்க கோமாளித்தனமான அறிக்கைகளால் பிரபல்யம் ஆன இந்த (ஆ)சாமி ஒருபோதும் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு சிறு செருமலை கூட செய்யப்போவதில்லை. எதிராகவே இருப்பார் என்பதை இன்னமும் பாஜக உயர்மட்டம் புரிந்துகொள்ளவில்லையா..?
இந்தியாவின் பிரதிநிதிபோல, பிரதிநிதியாக இவர் இதனை சொல்வதுதான் மோடி அரசுமீதும் சிறீலங்கா சம்பந்தமான வெளியுறவுக்கொள்கை மீதும் பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றது.. இந்தியாவின் குடிமக்கள் மீதான வெறியாட்டத்துக்கு இந்திய அரச கட்சியின் பிரதிநிதி ஒருவர் அந்நிய நாட்டுடன் ஒத்துழைப்பதை தேசம், தேசபக்தி என்று வரிக்கு வரி ஓதும் மோடி அரசும் பாஜகம் எப்படி அனுமதிக்கிறார்கள் என்பதே இன்றைய தமிழக மக்களின் கோபமும் கேள்வியும். இதனை பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது தமிழ்நாட்டில் இருந்து மத்திய அமைச்சராக இருக்கும் ராதாகிருஸ்ணண் அப்படியே நழுவி பதில் சொல்வதை பார்த்தால் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ்ஜா இல்லை சுப்ரமணிய(ஆ)சாமியா என்ற சந்தேகமே எழுகிறது..
மேலும் சர்வதேச அழுத்தங்கங்களில் இருந்து சிங்கள தேசத்தை காப்பாற்றும் முயற்சிகளை இந்தியா முன்னரைவிட வேகமாகவே இப்போதும் தொடர்கிறது. ஐநா விசாரணை குழுவுக்கான அனுமதி மறுப்பு என்பது அதனையே காட்டுகிறது. மோடிக்கு பிடித்தமான முறையில் அளுத்கமவில் முஸ்லீம்கள் மீது மகிந்த அரசும் சிங்கள பேரினவாதமும் தாக்குதல் நடாத்தியதன் மூலம் பாஜகவின் அதிஉயர் அதிகாரபீடமான ராஸ்ரிய சங்கம சேவயாவின் (ஆர்எஸ்எஸ்) பேரருளை மகிந்த அரசு பெற்றுவிட்டதோ என்றும் எண்ண தோன்றுகின்றது.
ஏனெனில் தமது நிலைத்தல், தப்பித்தலுக்காக சிங்களம் எதுவும் செய்யும் என்பதுதான் கடந்த ஆயிரமாயிர ஆண்டு வரலாறு - மீண்டும் முதலாவது பத்திக்கே வருவோம். இப்போதைய பாஜகவின் வெற்றி என்பது தனித்து நரேந்தர் மோடி என்ற மனிதனின் மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. அந்த நரேந்தர் மோடி 2009 மே 10ம்திகதி பஞ்சாபின் லூதியானா மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் 'ஆனால் எனது கேள்வி வேறு. குவாத்ரோச்சிக்காக இவ்வளவு தவித்துப் போகிறீர்களே.. பிரதமரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அங்கே ஸ்ரீலங்காவில் எந்தக் குற்றமும் செய்யாத நிரபராதிகளான எனது தமிழ் சகோதரர்கள் இத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், எவ்வளவு விதமான இன்னல்களை, கொடுமைகளை அவர்கள் சகிக்க வேண்டியள்ளது.. ஆனால் இன்று வரை இந்த தில்லி அரசாங்கம் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. 6 மாதங்களாக தமிழ் சகோதரர்கள் மீது தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு ஒன்றுமே செய்யவில்லை. தமிழ் நாட்டிலே அழுத்தம் அதிகரித்தவுடன், பிரணாப் முகர்ஜியை அனுப்பி வைக்கிறது.. அவர் அங்கு போய் ஏதோ பேசி விட்டு எந்த முடிவும் இல்லாமல் திரும்பி வருகிறார். ஒரு “நிரபராதி” குவாத்ரோச்சிக்காக படாதபாடு படுகிறீர்கள்.. அங்கே ஆயிரக் கணக்கில் நிரபராதிகளான தமிழ் சகோதரர்கள் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள் – ஆனால் அது உங்களை ஒன்றுமே செய்வதில்லை, இதை இந்த உலகமும் மக்களும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.. ..” -( மே-10, 2009 அன்று லுதியானா பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோதி) என்று உரையாற்றியதை இப்போது செயற்படுத்தக்கூடிய இடத்தில், அதிகாரத்தில் இருந்தும் அதனை தடுக்கும் சக்திகள் யார் யார் என்பதை கண்டுகொள்வதே நாளைய தமிழர்கள் நலனுக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

No comments:

Post a Comment