August 5, 2014

சிறீலங்காவின் விசாரணைப் பொறிமுறையை ஈழத் தமிழர்கள் முற்றாகவே நிராகரிக்க வேண்டும்! - இசைப்பிரியா

இலங்கைத் தீவின் இனப் பிரச்சினை தொடர்பான சர்வதேசக் கவனங்களும், அழுத்தங்களும் அதிகரிக்கும் காலங்களில் புதிது புதிதான ஆணைக்குழுக்களும்.
விசாரணைக் குழுக்களும் உருவாக்கப்படுவதும், அதை அப்படியே அடக்கம் செய்து விடுவதும் சிறீலங்கா ஆட்சியாளர்களுக்குப் புதிய விடயமல்ல. தமிழ்த் தலைமைகளுடன் இனப் பிரச்சினை விவகாரம் தொடர்பாக நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களும் எவ்வாறு குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டன என்பதும் இரகசியமானவை அல்ல.
இந்திய ஆட்சியாளர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13வது அரசியல் திருத்தமும், அதனால் உருவாக்கப்பட்ட வடக்கு - கிழக்கு இணைந்த தமிழ் மக்களுக்கான மாகாண சபைக்கு நேர்ந்த கதியும், பிரிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாண சபைகளின் அவல நிலையும் உலகப் பிரசித்தமானவை. நீதியை நிராகரிக்கும் உலகத்தின் முதன்மைத் தேசமாகவே சிறீலங்கா தன்னை அடையாளம் காட்டி வருகின்றது.
2009 இல் ஈழத் தமிழர்கள்மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர்தான், உலக நாடுகளால் சிங்கள தேசத்தின் சுய ரூபத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. இலங்கைத் தீவினுள்ளேயே தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய இனப் பிரச்சினையை, இன முரண்பாட்டின் உச்ச நிலைக்குக் கொண்டு சென்று, அதனையே பயங்கரவாதப் பிரச்சினையாக உலகிற்குக் காண்பித்து, தமிழின அழிப்பிற்கான அங்கீகாரத்தை உலக நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டது. அதற்காகப் பல உறுதி மொழிகளை உலக நாடுகளுக்கு வழங்கியுமிருந்தது. யுத்த காலத்தில் சிங்கள ஆட்சியாளர்களால் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகள் மீறப்பட்ட நிலையிலேயே உலக நாடுகள் சிங்கள ஆட்சியாளாகள்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தன.
ஐ.நா. மனித உரிமைகள் மன்றம்வரை கொண்டு செல்லப்பட்ட மென் அழுத்தங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் தொடர்ந்தும் உதாசீனம் செய்யப்பட்ட நிலையில், சிங்கள ஆட்சியாளர்கள் மீதும் அதன் படைத் தலைமைகள் மீதும் போர்க் குற்ற விசாரணை ஒன்றை நடாத்தவேண்டிய கட்டாய நிலைக்கு ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் உள்ளாக்கப்பட்டது. ஐ.நா. வின் மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை சிறிலங்கா மீது குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.
அந்த விசாரணைக் குழுவின் ஆலோசகர்களாக முன்னாள் பின்லாந்து ஜனாதிபதியும் கொஸொவோ பிரச்சினையின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரித்த குழுவில் கடமையாற்றியவருமான மார்ட்டி ஆட்டிசாரி, நியூசிலாந்தின் முன்னாள் ஆளுனரும், கம்போடிய பிரச்சினையின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரித்த சர்வதேச நீதிமன்றத்தில் கடமையாற்றியவருமான சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தானிய மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவியான அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். விசாரணைக் குழுவின் இணைப்பாளராக பிரிட்டனைச் சேர்ந்த சண்டிரா பெய்டாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விசாரணையை அடியோடு நிராகரித்த மகிந்த ஆட்சியாளர்கள் இலங்கை வரவும் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதனால், ஐ.நா. விசாரணைக் குழு தனது விசாரணையை இலங்கைக்கு வெளியே இருந்து மேற்கொள்வதாக அறிவித்து, நியூயோர்க், ஜெனிவா மற்றும் பாங்கொக் ஆகிய நகரங்களில் வைத்து சாட்சியங்களைப் பதிவு செய்யவும் ஆரம்பித்தும் விட்டது. 
இறுதி யுத்தத்தின்போது பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை. போர்க் குற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று ஆரம்பம் முதலே கூறிவந்த சிங்கள ஆட்சியாளர்கள், அதனை விசாரிக்கும் உள்ளகப் பொறிமுறை ஒன்றினையும் ஏற்க மறுத்தே வந்தனர். போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல வெளிவந்திருந்த நிலையிலும், அது தொடர்பான விசாரணை நடாத்த மறுத்துவந்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் நகர்வு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
நிராகரிக்கப்பட்ட குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அதன் விளைவுகளும் பாரதூரமானதாகவே அமையும் என்ற அச்சத்தினால், காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை ஒன்றை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று மகிந்த ராஜபக்ஷயினால் உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக, மக்ஸ்வெல் பரணகம நியமிக்கப்பட்டார்.
சிறீலங்காவின் ஆணைக்குழுக்கள் பற்றிய சர்வதேச விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிட்டும் அளவிற்கு காணாமல் போனவர்கள் தொடர்பான ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக மூவர் அடங்கிய குழு ஒன்றை சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே நியமித்துள்ளார். இக்குழுவின் தலைவராக சேர். டெஸ்மன் டி சில்வா நியமிக்கப்பட்டிருக்கின்றார். மற்றைய இருவர்களில் ஒருவர் பேராசிரியர். சேர். ஜெவ்றி நைஸ் எனப்படும் பிரித்தானியர். மூன்றாமவர் அமெரிக்க சட்ட நிபுணரான பேராசிரியர் டேவிட் கிறேன் ஆவர்.
சிங்கள அதிபரால் நியமிக்கப்பட்ட இந்த ஆலோசனைக் குழு குறித்த சந்தேகங்கள் ஏற்கனவே பலராலும் எழுப்பப்பட்டுள்ளது. இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்ற அனைத்துலக விருப்பங்களின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட விசாரணைப் பொறி முறையை நிராகரித்ததுடன் மட்டுமல்லாமல், போர்க் குற்றம் தொடர்பாக அந்த விசாரணைக் குழுவுக்கு சாட்சியம் வழங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாக சிங்கள ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டும் உள்ளது. இந்த நிலையில், சிங்கள அரசால் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுவும், அதற்கான ஆலோசனைக்  குழுவும் எந்த அளவிற்கு சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயற்படும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் போர்க் குற்ற விசாரணைக்கு மாற்றாக, அல்லது எதிராக சிங்கள ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட விசாரணைக் குழு சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றவே முயலும். விடுதலைப் புலிகள் குறித்த குற்றச்சாட்டுக்களைப் பிரமாண்டப்படுத்துவதன் மூலம், சிங்கள ஆட்சியாளர்களினதும், அதன் படைகளினதும் போர்க் குற்றங்களின் தீவிரத்தைக் குறைத்துவிடலாம் என்ற நம்பிக்கையின் இறுதி வடிவமாகவே இதைப் பார்க்கலாம்.
அச்சுறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்ட தமிழ் மக்கள் இந்த விசாரணைக் குழுவின் செயற்பாட்டை நிராகரிக்கும் நிலையில், சிங்கள தரப்பால் உருவாக்கப்படும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சாட்சிகள் பலப்படுத்தப்படும். இதனையே தமது தரப்பிற்கான நியாயமாக சிங்கள தேசம் வாதாடவும் முற்படும்.
தமிழர் தலைமைகள் இதனைப் புரிந்து கொண்டு செயலாற்றவேண்டும். சிறீலங்காவின் விசாரணைக் குழுவினை முற்றாக நிராகரிப்பதே தமிழர் தரப்பிற்கான நியாயத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மார்க்கத்தை உருவாக்கும்.
நன்றி: ஈழமுரசு

No comments:

Post a Comment