August 2, 2014

வாழும் வரலாறு.. - அய்யா நெடுமாறனின் அரும்பணிகள்


1981 - தருமபுரி மாவட்டத்தில் மோதல் சாவுகள் என்ற பெயரில் அப்பாவி ஊர்ப்புற இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தப் பகுதிகளில் சுற்றுப் பயணம்
செய்து உண்மைகளை அறிந்து வந்து அம்பலப்படுத்தி மோதல் சாவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
1981 - யாழ் நூலகம் கொளுத்தப்பட்ட போது அங்கு சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து வந்து தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை அளித்தார். அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்து தலைமை அமைச்சர் இந்திராவிடம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் முறையீடு அளிக்கப்பட வேண்டுமென்ற யோசனையைத் தெரிவித்தார். அதற்கிணங்க எம்.ஜி.ஆர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு புது தில்லி சென்று தலைமை அமைச்சரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்த முறையீடு ஒன்றை அளித்தது.
1982 - சிங்கள அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி, செகன் ஆகியோரின் மரண தண்டனையை கைவிட வேண்டுமென தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றச் செய்தார்.
1983 - கொழும்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மதுரையிலிருந்து இலங்கை நோக்கி 5000 தொண்டர்களுடன் தமிழர் தியாகப் பயணம் நடத்தினார்.
1985 - விடுதலைப் புலிகளின் துணையோடு இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் கமுக்கமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிங்களப் படையாட்களின் அட்டூழியங்களைப் பற்றிய விவரங்களையும், ஈழத் தமிழர்களின் துயரங்களையும் நேரில் கண்டறிந்து அவற்றை ஒளிப்படமாக எடுத்து வந்து இந்தியா உட்பட உலக நாடுகளில் காட்டச் செய்தார்.
1987 - திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அங்கு சென்று நிலைமையை அறிந்து வந்து தமிழக மக்களுக்குத் தெரிவித்தார்.
1987 - 1990 - தமிழர் தேசிய இயக்கமும் தோழமைக் கட்சிகளும் இணைந்து ஈழத் தமிழர் போராட்டத்துக்காக அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தின.
20-12-1990 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழர் அமைப்புகளின் கூட்டத்தில் ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றினை நிறுவி கூட்டாக செயல்படுவதற்கு முடிவு செய்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அமைப்பாளராக பொறுப்பேற்றார்.
1991 முதல் இன்று வரை இந்த ஒருங்கிணைந்த அமைப்பின் சார்பில் போராட்டங்களும் மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் அரசு தடை விதித்த போது அதை மீறி தோழர்கள் சிறை புகுந்தனர்.
1991 - மீண்டும் இலங்கை சென்று இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களைப் பற்றிய உண்மைகளைத் திரட்டி வந்து தலைமை அமைச்சர் வி. பி. சிங்கைப் பார்த்து அவரிடம் அளித்து இந்திய அமைதிப் படையை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெறும்படி வற்புறுத்தினார்.
1991 - தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காயமடைந்த, ஊனமுற்ற விடுதலைப் புலிகளின் நிலைமை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு முறையிட்டு அவர்கள் விடுதலை பெற உதவினார்.
1993 - பன்னாட்டுக் கடல் எல்லையில் விடுதலைப் புலிகள் தளபதி கிட்டு பயணம் செய்த கப்பலை இந்தியக் கடற்படை வழி மறித்ததைத் தொடர்ந்து கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. தளபதி கிட்டு உட்பட பல தோழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். கப்பலின் மாலுமிகள் 9 பேரை இந்தியக் கடற்படைக் கைது செய்தது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் வழக்கை உச்ச நீதிமன்றம் வரை நடத்தி 9 பேரின் விடுதலைக்கும் வழி வகுத்தார்.

1998 - இராசீவ் காந்தி கொலை வழக்கில் 26 தமிழர்களுக்கு ஒட்டு மொத்தமாகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது அதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்காக குழுவை அமைத்து வழக்கை நடத்தி 19 பேர் விடுதலை பெறுவதற்கும் மூவருக்கு வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்படுவதற்கும் வழிவகுத்தார். 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மட்டுமல்ல, இந்தியாவில் தூக்குத் தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் பெரும் இயக்கத்தை நடத்தியதோடு சென்னையில் ஐம்பதினாயிரம் பேரைத் திரட்டி மரண தண்டனை ஒழிப்பு ஊர்வலம் நடத்தினார். அதன் விளைவாக மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரான நளினியின் மரண தண்டனை வாழ்நாள் தண்டையாக குறைக்கப்பட்டது.

2000 - கன்னட நடிகர் இராசகுமாரை வீரப்பன் கடத்திய போது காட்டுக்குள் சென்ற குழுவிற்குத் தலைமை தாங்கிச் சென்று வீரப்பனிடம் பேசி இராசகுமாரை விடுவிக்க உதவினார். இதன் விளைவாக இரு மாநிலங்களுக்கிடையே மூளவிருந்த இனக் கலவரத்தைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து அதிரடிப் படையின் அட்டூழியங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டினார்.

2000 - வீரப்பனுக்கு உதவியவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் தடா சட்டப்படிக் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் வாடிய 121 அப்பாவி ஊர்க்காரர்களின் வழக்கைச் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்தி அவர்களில் 117 பேரின் விடுதலைக்கு வழி வகுத்தார்.

2007 - பட்டினியால் வாடும் யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் திரட்டும் இயக்கத்தினை நடத்தி, தமிழகமெங்குமிருந்து ஏறத்தாழ ரூபாய் 1 கோடி பெறுமானமுள்ள பொருட்களைத் திரட்டினார். அப்பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப இந்திய அரசு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பல கட்சியினரை ஒன்று திரட்டி நாகப்பட்டினத்திலும், இராமேசுவரத்திலும் படகுப் பயணப் போராட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் சாகும் வரை பட்டினிப் போராட்டம் மேற்கோண்டார்.

வரலாறு படைக்க, தமிழ் இளைஞர்களை அய்யா நெடுமாறன் அவர்கள் அன்புடன் அழைக்கிறார்...

No comments:

Post a Comment