தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி சாகும் வரை உண்ணாவிரதம்!
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
பாரம்பரிய
கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை
கடற்படையினர் சிறைபிடித்து செல்வதும், அவர்களது படகுகளை முடக்கி வைப்பதும்
தொடர்கதையாகி விட்டது. கடந்த இரு மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட
மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 94 மீனவர்கள் இன்று
வரை இலங்கை சிறையில் இருந்து வருகின்றனர். மேலும், அவர்களின் 63
விசைப்படகுகளும் இலங்கை கடற்படையின் பிடியில் உள்ளது.
இலங்கை
சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி
ராமேஸ்வரம் மீனவர்க்ள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக
கடந்த 26 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2 ஆம்
கட்ட போராட்டமாக மீனவர்கள் தங்கள் படகுகளின் உரிமத்தை மாவட்ட ஆட்சியரிடம்
ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினர்.
அதன் பின்னரும் மீனவர்கள்
விடுவிக்கப்படாத நிலையில், கடந்த 2ஆம் திகதி படகுகளில் வெள்ளை கொடி கட்டி
இலங்கையில் தஞ்சம் அடையும் போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.
அன்றைய
தினம் நூற்றுகணக்கான மீனவர்கள் இலங்கை செல்ல முயன்ற நிலையில், மத்திய
அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீனவர்களுடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது
அவர், ´´மத்திய அரசு மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுத்து
வருவதாகவும். இன்னும் 10 நாட்களில் படகுகளுடன் மீனவர்கள்
மீட்கப்படுவார்கள்" என உறுதியளித்தார்.
இதையடுத்து மீனவர்கள்
இலங்கையில் தஞ்சம் அடையும் போராட்டத்தை கைவிட்டனர். மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் கொடுத்த உறுதி மொழி முடிய இன்னும் இரு தினங்களே உள்ளது.
இந்நிலையில்,
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் சிறை காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டு
வருகிறது. இதையடுத்து, ராமேஸ்வரம் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம்
என்.ஜே.போஸ் தலைமையில் நடந்தது. அதில், மத்திய அமைச்சர் உறுதியளித்தபடி
இன்னும் இரு தினங்களுக்குள் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும்,
படகுகளையும் மீட்கவில்லை என்றால் வருகின்ற 13 ஆம் திகதி படகுகளின்
உரிமையாளர்கள், சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர்
தங்கச்சிமடத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு
செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசுராஜ், எமரிட், சகாயம் உள்ளிட்ட அனைத்து சங்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment