கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளை பகுதியில் 80அடி உயரத்தை உடைய 16 காற்றாடிகளை
கொண்ட காற்றுமின்னாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. காற்றுமின்ஆலையின் நிர்மாணப் பணிகளைப் பார்வையிடுவதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை (12.08.2014) சென்றிருந்த விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முதலீட்டாளர்களுடனும் பணியாளர்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.
அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்குமாகாணசபை தோற்றம் பெற்றதன் பின்னர் தென்பகுதியில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாகப் பலர் எம்மை அணுகிவருகின்றனர். இவற்றில் சுற்றுச்சூழல் நட்புமிக்க திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைகளுக்கும் நாம் கையளிக்க வேண்டியிருப்பதால், எமது தொழில் முயற்சிகள் எதுவும் வளங்களைச் சூறையாடுவதாக அமைந்துவிடக்கூடாது. அதனால் எமக்குவரும் தொழில்முதலீட்டு விண்ணப்பங்களை மிகவும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. எமது மின்சக்தித் தேவைகளை நாம் பூர்த்தி செய்யவேண்டிய அதேசமயம், சக்தியைப் பிறப்பிக்கும் முறைகளால் சூழல் மாசடையாமலும் பார்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. அந்தவகையிலேயே, சூழல் நட்புமிக்க காற்றுமின்னாலைத் திட்டத்துக்கு எமது முதலமைச்சர் முன்னுரிமை கொடுத்து ஒப்புதல் வழங்கியுள்ளார். சுற்றுச்சூழல் நட்புமிக்க தொழில்முயற்சி என்பதற்கும் அப்பால், வடக்குமாகாணசபை தோற்றம்பெற்ற பின்னர் வடக்குமாகாணசபை ஒப்புதல் வழங்கிய முதலாவது பெரிய தனியார் முதலீடு என்றவகையில் இந்தத்திட்டத்துக்கு இன்னும் ஒரு சிறப்பு உண்டு.
இந்தக் காற்று மின்னாலையின் முதலீட்டாளர்கள் எங்களிடம் தொடர்பு கொண்டபோது, வேலைவாய்ப்பில் வடக்குவாழ் மக்களை இணைத்துக் கொள்ளுதல், வடக்கின் சமூகவேலைத் திட்டங்களுக்கு உதவுதல், மின்னாலை அமையவுள்ள இடத்தைப் பசுமை நிறைந்த சூழலாகப் பேணுதல் போன்ற விடயங்களில் எங்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார்கள். அவை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
யூலிபவர் பிரைவேட் லிமிற்றெட், பீற்றாபவர் பிரைவேட் லிமிற்றெட் ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்களே புலோப்பளை மற்றும் வள்ளிமுனைப் பிரதேசத்தில் பூநகரிக் கடல்நீரேரிப் பக்கமாக இக்காற்று மின்னாலையை உருவாக்கி வருகின்றன. 80அடி உயரத்தைக் கொண்ட 16 காற்றாடிகளைக் கொண்டு இயங்கவுள்ள இந்தக் காற்றுமின்னாலை எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இருந்து தனது சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment