July 27, 2014

தமிழ் ஊடகவியலாளர் மீதான அரச பயங்கரவாத ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறது - த.தே.ம.மு

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அரச பயங்கரவாத ஒடுக்கு முறையை தமிழ் தேசிய மக்கள் முன்னனி வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பில் அவ் அமைப்பின்
பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
வெள்ளிக்கிழமை(25-7-2014) மாலையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்த யாழ் ஊடகவியலாளர்கள் மீது பொலீசாரும் இராணுவத்தினரும் இணைந்து பொய்க்குற்றச் சாட்டுக்களை சுமத்தி கைது செய்ய முயன்றுள்ளனர்.
குறித்த ஊடகவியலாளர்கள் யாழில் இருந்து கொழும்பு நோக்கி ஹயஸ் வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியில் இவர்களது வாகனம் சோதனையிடப்பட்டுள்ளது.
சோதனையிடுதல் என்ற போர்வையில் இவர்களது வாகன சாரதியின் ஆசனத்தின் கீழ் சிகரட் பெட்டி ஒன்றினை ஒரு இராணுவ சிப்பாய் வைத்ததை அதில் பயணம் செய்த ஊடகவியலாளர்கள் மூவர் நேரில் அவதானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பொலீசார் வாகனத்தை சோதனையிடுவது போன்று சோதனையிட்டு அந்தப் பொட்டியை எடுத்து அதில் போதைப் பொருள் உள்ளதாக கூறி குறித்த வாகனத்தில் பயணம் செய்த ஏழு ஊடகவியலாளர்களையும், வாகன சாரதியையும் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இவ்விடயம் உடனடியாக குறித்த ஊடகவியலாளர்களால் சக ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இச் சம்பவம் தொடர்பில் உடனடியாகவே கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுடன் தொடர்பு கொண்டு குறித்த ஊடகவியலாளர்களது விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் தூதரக அதிகாரிகளிடம் கோரியிருந்தார். பல தரப்புக்களிலிருந்தும் அரசுக்கு வழங்கப்பட்ட அழுத்தத்தை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையிலும், ஊடக சுதந்திரத்தை நசுக்கும் வகையிலும் சிறீலங்கா அரசு தனது இராணுவ மற்றும் பொலிஸ் இயந்திரத்தைப் பயன்படுத்தி தமிழ் ஊடகவியலாளர்களை கைது செய்வதற்கு மேற்கொண்டுள்ள இந்த அநாகரீகமான செயற்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது எனத் தொஜிவித்துள்ளார்.

No comments:

Post a Comment