மலைய சமூகத்தின் ஊடாக அரசியல் செயற்பாட்டாளர்கள் எடுத்து செல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இந்த ஆய்வுகள் மூலமாக கனவுகள் காண மட்டுமே முடியும். அந்த ஆய்வு கனவுகளை நனவாக்க அர்ப்பணிப்பு கொண்ட களப்பணியாளர்கள் தேவை. இதுதான் தென்னிலங்கையில் நடந்தது. இதுதான் வடக்கு, கிழக்கிலும் நடந்தது. இதுதான் மலையகத்திலும் நடக்க வேண்டும். களத்தில் இறங்கி மக்கள் மத்தியில் அரசியல் பணியாற்ற மலையக இளைஞர்கள் முன்வராத வரைக்கும் மலைநாட்டில் மாற்றம் வராது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலையக ஆய்வு மையம் கொழும்பு மிலாகிரிய புனித. போல் தேவாலய மண்டபத்தில் நடத்திய, நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
மலையக ஆய்வு மையம் சார்பாக இங்கே மலையகத்து மண்வாசனை கொண்ட வண. பிதா சக்திவேல், மமமு செயலர் லோரன்ஸ், சிந்தனையாளர் சடகோபன், இவர்களுடன் ஈழத்து ஆய்வாளர் சோதிலிங்கம் ஆகியோர் மலையகத்து நிலைமைகளை ஆய்வு செய்து, முன்நகரும் மார்க்கத்தை மலையக சமூகத்துக்கு எடுத்து கூறுகிறார்கள்.
இந்த பணி மகத்தானது. இவர்களை நான் வாழ்த்துகிறேன். ஆனால், இதனால் மட்டும் மலையகத்தில் மாற்றம் வந்துவிடாது. இந்த ஆய்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு சமூக களத்தில் இறங்கி அர்ப்பணிப்புடன் முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட மலையக இளைஞர்கள் முன்வர வேண்டும்.
இதைபோன்ற கூட்டங்கள், சந்திப்புகள், ஆய்வுகள் எத்தனையோ காலத்துக்கு காலம் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் முன்னெடுப்புகள் இல்லை.
இன்று வடக்கு, கிழக்கு தமிழர் விவகாரம் சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இன்று வடக்கில் அரசியல் செய்யும் தேர்தல் அரசியல்வாதிகள் அல்ல. நான் சொன்ன அந்த வடக்கு கிழக்கு இளையோரின் அன்றைய அர்ப்பணிப்பின் மூலமாகத்தான் இன்று உலகம் இலங்கை தமிழர் பற்றி பேசுகிறது. இதை நாம் செவ்வனே புரிந்துகொள்ள வேண்டும்
இதைபோல் மலையகத்து பிரச்சினை உலகமயமாக வேண்டும் என்றால் மலையக இளைய சமூகம் அர்ப்பணிப்புடன் சமூகத்தில் ஊடுருவி களப்பணியாற்ற வேண்டும்.
இன்று மலையக பிரச்சினைகள் சர்வதேச எல்லைகளை அல்ல, இந்நாட்டு தேசிய எல்லைகளை அல்ல, மலையக மாகாண, மாவட்ட எல்லைகளைகூட தாண்டவில்லை. இதுதான் உண்மை.
மலையக பாடசாலைகளில் நியமனம் பெற்று சென்ற இளைஞர்களான மலையகத்து ஆசிரிய சமூகம், மலையகத்தில் மாற்றத்தை கொண்டு வர பங்காற்றும் என்ற நம் எதிர்பார்ப்பு இன்று கானல் நீராகிவிட்டது.
ஒப்பீட்டளவில் படித்த இந்த மலையக ஆசிரிய சமூகத்தின் மிகப்பெரும்பாலோர் இன்று கோலோச்சுபவர்களுடன் கூட்டாக பணியாற்றுகிறார்கள். இது என் தனிப்பட்ட ஆய்வு கருத்து. ஆனால், இதை நான் மிகத்திடமாக கூறுகிறேன். இது பெரும் தூரதிஷ்டம். ஆனால், உண்மை. சமூக உணர்வுடன் நமது இளைஞர்கள் களத்தில் இறங்கி மலையக இலக்குகளை நோக்கி பணியாற்ற வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன்.
No comments:
Post a Comment