சிறீலங்கா அரசாங்கத்தின் மீதான சர்வதேச விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளிவருகின்றன. சிங்களப் பேரினவாதம்
விரும்புகின்றதோ இல்லையோ சர்வதேச விசாரணைக்கு முகம்கொடுக்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். என்னதான் ‘நாங்கள் யாருக்கும் அடிபணியப் போவதில்லை’ எனச் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் மார்தட்டிக் கொண்டாலும், கடந்த காலங்களில் மீறப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு மட்டுமல்ல, தொடர்ந்தும் தமிழர்கள் மீது பிரயோகிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அவர்கள் பதில் சொல்லியாகவேண்டும். எனவே, இந்தக் கேள்விகளில் இருந்து தப்பிக்க சிங்களம் காரணத்தைத் தேடுகின்றது. அதற்கான வழிகளை உருவாக்குகின்றது.
தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவத்தைக் குறைக்கவேண்டும் என்பதே சர்வதேச நாடுகளின் முக்கிய வலியுறுத்தலாக இருக்கின்றது. இராணுவத்தைக் குறைத்துவிட்டதாக சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் கூறும் கதைகளை அப்படியே நம்புவதற்கு இப்போது சர்வதேசம் தயாராக இல்லை. எனவே, தமிழர் தாயகத்தில் இராணுவத்தின் நிரந்தர இருப்பை நியாயப்படுத்துவதற்கு சிங்களப் பேரினவாதம் காரணங்களை உருவாக்குகின்றது.
ஒரு சின்ன இடைவெளி கிடைத்துவிட்டாலும் தமிழர்கள் தங்கள் அடக்குமுறையை வெளிப்படுத்திவிடுவார்கள். ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து விடுவார்கள். அதனைத் தடுக்க வேண்டுமாயின் அவர்களைத் தொடர்ந்தும் நிரந்தரமான அச்சம் மிகுந்த வாழ்விற்குள் வைத்திருக்கவேண்டும். இதற்குத் தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவம் நிரந்தரமாக தங்கியிருக்கவேண்டியது அவசியம்.
இதனைவிட, தமிழர் தாயக நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும், ஆக்கிரமிக்கப்படும் பகுதியில் நிறுவப்படும் சிங்களக் குடியேற்றங்களைப் பாதுகாப்பதற்கும், பௌத்த தலங்களை நிறுவி நிரந்தரமாக்கவதற்கும் அங்கு இராணுவ இருத்தல் என்பது மிகவும் அவசியமானது. எனவே, வடக்குக் கிழக்கில் தமிழர்கள் இருக்கும் வரைக்கும் அங்கிருந்து இராணுவத்தை சிங்களம் அகற்றப்போவதில்லை.
ஆனால், இந்தக் காரணங்களுக்காக அங்கு இராணுவத்தை வைத்திருக்க முடியாது. தமிழர் தாயகத்தில் இராணுவம் இருப்பதாயின் அதனைச் சர்வதேசத்திற்கு நியாயப்படுத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தேவை. தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தால் மட்டுமே தமிழர் தாயகத்தில் இராணுவம் நிலைகொண்டிருப்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும்.
எனவேதான், ‘காகம் கறுப்பாயின் கிளி பச்சை. கிளி பச்சையாயின் கொக்கு வெள்ளை. எனவே, காகம் கறுப்பாயின் கொக்கு வெள்ளை’ என்ற எந்தக் குழந்தையும் புரிந்துகொள்ளும் சாதாரண தர்க்க ரீதியான வாதம்போன்று சிங்களப் பேரினவாதம் நடந்துகொள்ள முயல்கின்றது.
கடந்த வாரம் தமிழர் தாயகத்தில் நடந்து முடிந்த சம்பவங்கள் தமிழ் மக்களிடையே பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள - தமிழ் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுவதற்கு இலங்கைத் தீவு தயாராகிக் கொண்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தமிழர் தாயகத்தை சாவீடாக்கியிருக்கின்றது சிங்களப் பேரினவாதம். அவர்கள் விடுதலைப் புலிகளா அல்லது சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட முனைந்தவர்களா என்ற கேள்விகளுக்கும் அப்பால், கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதுதான் இங்கு முக்கியம். சிங்களத்தின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பலிக்கடாக்களாக தமிழர்களே இருக்கின்றார்கள் என்பதே இங்கு கவனத்திற்குரியது.
விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக மார்தட்டிய சிங்களப் பேரினவாதம் மீண்டும் மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்க பகீரதப் பிரயத்தனங்களை எடுத்துவருகின்றது. தமிழீழ மக்களுக்கு உள்ள அவசரத்தை விடவும் மேலாக, சிங்களப் பேரினவாதத்திற்கே தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் மிகவும் அவசரமாக இருக்கின்றது. பல நூற்றாண்டு காலமாக ‘விடுதலைப் புலிகள் - பயங்கரவாதம்’ என்ற ஒரு சில வார்த்தைகளுடன் ஆட்சியைத் தக்கவைத்துவிட்ட சிங்களப் பேரினவாதத்திற்கு, விடுதலைப் புலிகள் இல்லாமல் ஆட்சியை தொடர்ந்து நடத்துவதென்பது அத்தனை இலகுவானதல்ல. எனவே, உண்மையிலேயே விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுகின்றார்களோ இல்லையோ, தங்கள் தேவைக் கேற்றவாறு விடுதலைப் புலிகளை மீள உருவாக்குவதையும், தேவை முடிந்ததும் அழிப்பதையும் சிங்கள ஆட்சியாளர்கள் தொடரவே செய்வார்கள்.
விடுதலைப் புலிகள் மீண்டும் மீளுருப்பெற்றுவிட்டார்கள் என்று அண்மைக் காலமாக தீவிர பிரச்சாரம் செய்த சிங்களப் பேரினவாத அரசாங்கம், தேடுதல் என்ற பெயரில் தமிழ் மக்களை மீண்டும் பெரும் அச்சத்திற்குள் தள்ளியது. பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு தமிழர்களை அவலத்திற்குள் வைத்திருக்கின்றது. சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடுகளில் நடப்பதுபோன்று தேடப்பட்ட மூவருக்காக அவர்களின் தாய், மனைவி என உறவினர்களையும் கைது செய்து கொடுமைப்படுத்தியது. கரப்பிணி மனைவியின் கருக் கலைகின்ற அளவிற்கு சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறை இருந்திருக்கின்றது.
தேடப்பட்ட மூவரையும் தற்போது சுட்டுக் கொன்றுவிட்டதாக கூறுகின்றது. இவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள், எங்கு கொல்லப்பட்டார்கள் என்பதை பக்கசார்பற்று உறுதிப்படுத்த முடியாது. ஏனெனில் இப்போது சிங்கள தரப்பு கூறுவது மட்டுமே செய்தியாக உள்ளது. இவர்களின் கதையை இத்துடன் முடித்துவிட்டது.
ஆனால், நாளை மீளவும் இவர்கள் உயிர்த்தெழுவார்கள். ஏனெனில் தமிழர்கள் இருக்கும் வரைக்கும் சிங்களப் பேரினவாதம் தனது விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்தை நிறுத்தப் போவதில்லை. நாளையே அது இன்னொரு புதிய புலியை உருவாக்கும் என்பது உறுதி.
ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு
நன்றி: ஈழமுரசு
No comments:
Post a Comment