(25.04.2014) காலை சின்ன வலையன்கட்டு பாடசாலைக்கு சிவில் உடையில் சென்ற இராணுவ புலனாய்வாளர்கள் பாடசாலை அதிபர் மற்றும்
ஆசிரியர்களை தனித்தனியாகவும், பாடசாலை மாணவர்களை வகுப்பறை ரீதியாக குழுவாகவும் புகைப்படம் எடுத்து விவரம் திரட்டிச்சென்றுள்ளனர்.
மன்னார் மடு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்குள் சிவில் உடையில் பிரவேசிக்கும் இராணுவ புலனாய்வாளர்கள் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களை தனித்தனியாகவும், பாடசாலை மாணவர்களை வகுப்பறை ரீதியாக குழுவாகவும் புகைப்படம் எடுத்து விவரம் திரட்டி வருகின்றனர்.
பாடசாலைகளுக்குள் நுழைந்து ஒளிப்படங்களுடன் விவரம் திரட்டும் இராணுவ புலனாய்வாளர்களின் நடவடிக்கையால் பாடசாலை சமுகம் கடும் மன உளைச்சலும், பீதியும் அடைந்துள்ளது. ஊடகங்களுக்கு தன்னை அடையாளப்படுத்த விரும்பாத ஆசிரியர் ஒருவர் சம்பவம் தொடர்பில் விவரிக்கையில் – வழமை போன்றே இன்றும் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
திடீரென்று பாடசாலைக்குள் சிவில் உடையில் நுழைந்த 15இற்கும் மேற்பட்ட இராணுவ புலனாய்வாளர்கள் விவரம் எடுக்க வந்திருக்கிறோம் என்றதும், பாடசாலை அதிபர் முதலில் தனது எதிர்ப்பை தெரிவித்தார். “எங்களுக்கென்று ஒரு கல்வியமைச்சு இருக்கு. அமைச்சர் இருக்கிறார். அவர் உங்களுக்கு அனுமதி தந்திருக்கிறாரா?” என்றெல்லாம் கேள்விகள் கேட்டார். யார் யாருக்கோ எல்லாம் தொலைபேசியில் அழைப்பு எடுத்தார். அவரது எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. பின்னர் அவர்களின் மிரட்டல்களுக்கு முன்னால் அவரால் வளைந்து கொடுக்காமல் இருக்க முடியவில்லை.
எங்கள் எல்லோரதும் விருப்பத்துக்கு மாறாக எம்மையும் பாடசாலை பிள்ளைகளையும் இராணுவத்தினர் புகைப்படம் எடுத்துச்சென்றுள்ளனர். இதுவொரு அடிப்படை மனித உரிமை மீறலாகவே நாம் பார்க்கின்றோம். சம்பவத்தை கேள்வியுற்றதும் பிள்ளைகளின் பெற்றோர்கள் பாடசாலையை நோக்கி பதறியடித்துக்கொண்டு ஓடி வரத்தொடங்கி விட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்த பெரும்பாடுபட வேண்டியதாயிற்று. “இராணுவத்தின் இந்த பதிவு நடவடிக்கைகள் தொடரத்தான் போகின்றன.
இதை தடுத்து நிறுத்தி இந்த பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அளிக்கிற தகுதி இங்கு எவருக்கும் இல்லை என்பதையே இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. “தட்டிக்கேட்கிற பலத்தை இழந்து விட்டதன் பயனை இன்று நாம் அனுபவிக்கிறம். நாளை இந்த பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமையப்போகுதோ தெரியேல்ல. ஆனால் ஆரோக்கியமற்ற ஒரு கல்விச்சூழலும், சமுகமும் உருவாகப்போவது உண்மை என்று மட்டும் எங்களால இப்போதைக்கு கூற முடியும்” – என்று அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment