வாழைச்சேனை பகுதியில் நபர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் தமிழ் இன துரோகி கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை இன்று வாழைச் சேனை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று காலை 10.00 மணிக்கு இவ்வாறு பொலிஸ் நிலையம் வருமாறு கொழும்பில் உள்ள அவரது வீட்டுக்கு பொலிஸார் தகவல் அனுப்பியுள்ளதாகவும் அவர் குறித்த நேரத்தில் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தர தவறும் பட்சத்தில் நீதிமன்றில் அவருக்கு எதிராக அறிக்கை தாக்கல்செய்யப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறீலங்கா பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் மீது தமிழ் இனத்துரோகி கருணா தாக்குதல் நடத்தியுள்ளதாக வாழைச் சேனை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அது தொடர்பில் சாட்சியாளர்களினதும் முறைப்பாட்டாளரினதும் வாக்கு மூலங்களை பொலிஸார் பெற்றுள்ளதாகவும் இதனை அடுத்தே கருணாவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
வாழைச்சேனை பகுதியை சேர்ந்த எஸ்.வனராஜா என்பவர் தான் வயலில் வேலை செய்துகொன்டிருந்த போது தாக்கப்பட்டதாக பொலிஸில் முறையிட்டிருந்தார். அத்துடன்இ தன்னை துப்பாக்கி முனையில் அவர் அச்சுறுத்தியதாகவும் அம்முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந் நிலையில் இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தகவல் தருகையில்,
குறித்த முறைப்பாடு தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முறைப்பாட்டாளரின் முறைப்பாட்டு தகவல்களுக்கு அமைவாக கிரான் பகுதியில் உள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி.யின் சகோதரி ஒருவரின் வீட்டிலிருந்து வந்தே அவர் தாக்கியதாக கூறப்படுகின்றது.
விவசாய நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இந் நிலையில் நேற்று பொலிஸார் உடனடியாகவே கருணாவின் சகோதரியின் குறித்த கிரான் பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். எனினும் அங்கு ஒருவரும் இல்லை எனவும் கருணா உள்ளிட்டவர்கள் கொழும்பு வீட்டில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து முறைப்பாட்டாளரினதும் நேரில் கண்ட சாட்சியங்களினதும் வாக்கு மூலங்களை பொலிஸார் பதிவு செய்துகொண்ட பின்னர் கொழும்பில் உள்ள எம்.பி.யின் வீட்டுக்கு பொலிஸார் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் இன்று காலை 10.00 மணிக்கு வாழைச் சேனை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் அவ்வாறு பொலிஸ் நிலையம் வராமல் தவிர்ப்பாரானால் அவருக்கு எதிராக மன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
No comments:
Post a Comment