May 30, 2016

பேனா போராளிகள் மரணிப்பதில்லை விதைக்கப்படுகின்றனர். மீண்டும் எழுவர் – வி.தேவராஜ்!

ஊடகத்துறையினரே நாம் ஒன்றிணைந்தால் எழுவோம். ஒன்றிணை யாவிட்டால் வீழ்வோம்.
எழுவதா? வீழ்வதா? ஊடகத்துறையினரே குறிப்பாக தமிழ் ஊடகத் துறையினரே சிந்தித்து முடிவெடுங்கள். இனந் தெரியாத நபர்களும் கண்ணுக்குத் தெரியாத துப்பாக்கிதாரிகளும் மர்ம நபர்களும் நிரையில் இல்லை என்பது உண்மைதான்.

ஆனால் அந்த இடத்தை ஊடகக் காவலர்களும் தமிழ்த் தேசியத்தின் இன்றைய கர்த்தாக்களும் ஏகபோகமாக்கிக் கொண்டுள்ளனர் என சிரேஸ்ட பத்திரிகை ஆசிரியரான வி.தேவராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் யாழ் ஊடக அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக்குழுவின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பிலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தில் நடத்தப்பட்ட மறைந்த ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 12ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் நினைவுரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவருடைய நினைவுரையில் தொடர்ந்து உரையாற்றிய வி.தேவராஜ்,
நடேசா நீ இன்று எம்மிடம் இல்லை. 2004 மே 31ஆம் திகதி நீ மரணித்து விட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் நீ மரணித்ததாக நானோ உன்னை நேசிக்கின்ற நண்பர்களோ நம்புவதற்குத் தயாராக இல்லை.

நீ இன்னும் எம்முடன் இருப்பதாகவே நினைக்கின்றோம், உணர்கின்றோம். ஆனால் நெஞ்சு கனக்கின்றது. மீண்டும் துயில் எழுந்து வர மாட்டாயா என மனம் ஏங்குகின்றது. உன்னுடன் பழகிய நாட்கள் பசு மரத்தாணி போல் நெஞ்சில் ஆழப் பதிந்துள்ளது.

ஆனால் அந்த இறுதிக் கணம். நீ என்னைச் சந்தித்தது இன்னும் என் கண் முன் நிழலாடிக் கொண்டிருக்கின்றது.

இறுதியாக நான் உன்னைச் சந்தித்த போது உன்னில் காணும் வழமையான கலகலப்பு, பேச்சு இவை அனைத்தையும் தொலைத்து விட்டு கனத்த நெஞ்சுடன் காணப்பட்டாய். உனது இந்த நிலை சற்று என்னைத் தடுமாற வைத்தது.

ஊருக்குப் போகாதே. கொழும்பிலேயே நின்று வேலை செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்கின்றேன் என்று பல முறை வற்புறுத்தினேன்.

முதலில் சரி என்று கூறிய நீ, சற்றும் எதிர் பாராமல் ஊருக்குப் போய் விட்டு வந்து விடுகிறேன் என்று பிடிவாதமாக நின்று அவசரமாகக் கிளம்பியும் விட்டாய். நீ மீண்டும் வருவாய் என்ற எதிர் பார்ப்புடன் உன்னை வழி அனுப்பி வைத்தேன்.

அதுதான் எமது இறுதி சந்திப்பு என நான் நினைக்கவில்லை. ஆனால் இறுதிச் சந்திப்பாகவே அந்தச் சந்திப்பு அமைந்து விட்டது.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த நீ அவசரமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டாய், ‘உங்களது நண்பன் தம்பையாவைச் சுட்டு விட்டார்கள்’ என்று பதை பதைத்துக் கூறினாய்.

யாழ் பல்கலைக்கழக எனது சகபாடியான குமாரவேல் தம்பையாவின் கொலைச் செய்தி என்னை நிலை தடுமாற வைத்தது. இரத்தத்தை உறைய வைத்தது.

நண்பன் தம்பையாவின் கொலைச் செய்தி கேட்டுத் தடுமாறிய நிலையிலும் உனக்கும் நண்பனின் நிலை உருவாகி விடக் கூடாது என்று என் மனதில் பெரும் போராட்டம் எழுந்தது. ‘நீ எங்கு நிற்கின்றாய்’ என நான் வினாவினேன். நீ வெலிக்கந்தையில் நிற்பதாகக் கூறினாய். கொழும்புக்குத் திரும்பிவிடு என்று மன்றாடினேன். நீயோ ஊருக்குப் போய் விட்டு வருகின்றேன் என்று கூறிச் சென்று விட்டாய்


பேனா போராளிகள் மரணிப்பதில்லை விதைக்கப்படுகின்றனர். மீண்டும் எழுவர் – வி.தேவராஜ்நண்பன் தம்பையாவை இழந்த சோக மூட்டம் விலகும் முன்பே உனது கொலை குறித்த செய்தி ஒரு கிழமைக்குள் வந்து என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நண்பன் தம்பையாவின் கொலைச் செய்திக்கூடே நீ கவனமாக இரு. உன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் அக்கறை காட்டு என்று கூறிய போது ‘பத்திரிகையாளன் மீது கை வைக்க மாட்டார்கள்’ என்று உன் மீது குறி வைத்திருந்த கோழைகள் பற்றி அறியாது நம்பிக்கை வெளியிட்டாய்.



ஒரு சில தினங்களுக்குள் உனது உயிரைப் பறித்தெடுக்கக் காத்திருந்த கொலையாளிகளை அறியாமலேயே இருந்து விட்டாய்.

நண்பர் சிவராம் அடிக்கடி கூறும் வார்த்தை மண்டையில் போட்டு விடுவார்கள். ஆனால் எப்பொழுது மண்டையில் போடுவார்கள் என்று தெரியாது. மண்டையில் போடுவதற்கு முன் முடிந்ததைச் செய்து விட வேண்டும் எனக் கூறி வேகமாகக் காரியமாற்றினார்.

அதே போல் நீயும் எங்களை எப்போதாவது மண்டையில் போட்டு விடுவார்கள். அவ்வாறு போடப்பட்டால் யார் யாருடைய கொலையைச் செய்தியாக வடிப்பது என்பதுதான் மாறுபடும். ஆனால் நாமும் ஒரு நாள் செய்தியாக, கட்டுரையின் கருப் பொருளாகப் போய் விடுவோம் என்பது மட்டும் உண்மை என அடிக்கடி கதைக்கும் போது கூறுவாய்.

நான் செத்தாலும் பரவாயில்லை. புற முதுகில் சூடு பட்டுச் சாகக் கூடாது. நெஞ்சில் குண்டு பாய்ந்து வித்தாக விதைக்கப்படுவதையே விரும்புகின்றேன் என்றும் அடிக்கடி பகிடியாகக் கூறுவாய். அது பகிடி அல்ல உண்மை என்பதை உனது மரணத்தின் கோலம் பதிவு செய்து விட்டது. நீ இன்னொரு விடயத்தையும் பகிடியாகக் கூறுவாய், பத்திரிகையாளன் குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகையாளன் மரணித்தாலோ அது செய்தியாக ஒரு கிழமை உலா வரும்.
பிறகு மறந்து விடுவார்கள்.

மறந்து விடுவது மரணித்த பத்திரிகையாளனை மாத்திரமல்ல, அவனது குடும்பத்தையும் தான். மரணித்த அந்தப் பத்திரிகையாளன் இல்லாது அவனது குடும்பம் சோகத்தில் மாத்திரமல்ல பொருளாதாரத்திலும் மீள முடியாத நிலையை அடைந்து விடும்.

இது பற்றி எவருமே கவலைப்படுவதில்லை என்பது தான் உனது ஆதங்கம். உனது ஆதங்கத்தை உனது மரணத்தின் பின் உலகத்தில் முன் வைக்கின்றேன். உனது கொலைச் செய்தி கேட்டவுடன் மட்டக்களப்பு பத்திரிக்கை ஒன்றுடன் தொடர்பு கொண்டேன். நடேசன் கொலை செய்யப்படுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்புதான் நான் சந்தித்தேன்.

எனக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்து எனது நெஞ்சில் கையை வைத்து டுமில் என்று கூறி விட்டு சென்றவன் சுடப்பட்டு விட்டானாம் என நா தளதளக்கக் கூறினார். நடேசா, கடந்த வாரம் உனது இரு கட்டுரைகளையும் பிரசுரத்துக்கென தயார்படுத்திக் கொண்டிருந்தேன். அந்த இரு கட்டுரைகளிலுமே ஒரு ஆவேசம் ஆர்ப்பரித்தது. தம்பையா பற்றித் தேனாடான் என்ற புனை பெயரில் நீ எழுதிய கட்டுரை இப்படி ஆரம்பிக்கின்றது.

கிழக்குப் பல்கலைக்கழகப் பொருளியற்துறைத் தலைவர் குமாரவேலு தம்பையா ஆயுததாரிகளால் கோழைத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் துளிர் விட்டு விஸ்வரூபம் எடுத்துள்ள முரண்பாடுகளின் விளைவாக இடம்பெற்று வரும் தொடர்ச்சியான ஆயுத வன்முறைகளின் உச்சமாக கல்விமான் ஒருவரின் உயிர் காவு கொள்ளப்பட்டிருக்கின்றது என்று தொடரும் அந்தக் கட்டுரையில் நிராயுதபாணிகளை நோக்கி துப்பாக்கிகள் நீளுவதை மக்கள் சக்தி தடுத்து நிறுத்த தயங்குமானால் எந்த வீட்டுக்குள்ளும் துப்பாக்கி நீளும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உனது மற்றொரு கட்டுரையில் மட்டக்களப்பு மாவட்டம் மீண்டும் கலங்கிய குட்டையாக உள்ளது. கருணாவின் பெயரைப் பயன்படுத்தி சில தரப்பினரும் மீன் பிடிக்க முற்படலாம் என்ற சந்தேகமும் பலமாக உள்ளது.

எது எப்படியிருந்தாலும் பகடைக் காய்களாவது தமிழ் மக்களே என்று குறிப்பிட்டுள்ள நீ அந்தக் கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில், மட்டக்களப்பில் 60 நாட்களில் 20 வன்முறைச் சம்பவங்கள், 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது என்ற அடிப்படையில் கருணாவுக்கு நெருக்கமான மேஜர் ஜெனரல் சாந்த கோட்டே கொடே நியமிக்கப்பட்டிருப்பதும் பல்வேறு ஐயங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்றும் தொடர்கின்றாய்.

ஒட்டுமொத்தத்தில் நடேசனே நீயும் செய்தியாக, கட்டுரையின் கருப் பொருளாக மாத்திரம் ஆகிவிடவில்லை. நிராயுதபாணிகளை நோக்கி துப்பாக்கி நீட்டப்படக் கூடாது, தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த நிராயுதபாணியான உன் மீதும் துப்பாக்கி திருப்பப்பட்டு விட்டது.

போர்க் காலத்தில் தான் நிராயுதபாணிகளை, பத்திரிகையாளர்களை, புத்திஜீவிகளை இழந்தோம். ஆனால் அந்த இழப்புக்கள் போர் நிறுத்த அமைதி காலத்திலும் தொடர்ந்தது விசனத்துக்குரியது.

அன்று மயில்வாகனம் நிமலராஜன், இன்று ஐயாத்துரை நடேசன் இடையில் பல அச்சுறுத்தல்கள், அடிதடிகள், சிறைவாசம் என பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்தமை வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.

இவை அனைத்துமே தமிழ் ஊடகத் துறையினர் மீது பாய்ச்சப்பட்ட பயங்கரவாத ஒளிப் பாய்ச்சலின் விளைவாக எழுந்ததாகும்.

தமிழ் ஊடகத்துறை சார்ந்தோர் மீது ஒன்றில் புலி முத்திரை குத்தப்படுகிறது. அல்லது பயங்கரவாத பட்டம் சூட்டப்படுகின்றது. அல்லது விடுதலைப் புலிகளுக்கான உளவாளி என்ற நாமம் இடப்படுகின்றது.

இவையனைத்துமே தமிழ் ஊடகவியலாளர்கள் இலங்கை வரலாற்றில் மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றுப் பக்கங்களை பயங்கரவாதமாகத் திரிபுபடுத்தப்படும் தமிழ் மக்கள் மீதான அடக்கு, ஒடுக்கு முறைகளின் உண்மை பக்கங்களை உலகுக்குப் படம் பிடித்துக் காட்டி பறைசாற்றுவதன் எதிரொலியாக விளைந்த விளைவாகும்.

நவாலி தேவாலயத்தில் அடைக்கலம் தேடியவர்கள் மீது விழுந்த குண்டுக்கும் நாகர் கோவிலில் பாடசாலை மீது விழுந்த குண்டுக்கும் பலியான பள்ளிச் சிறார்களும் பயங்கரவாதிகளாகத் தெரிவது போன்றே தமிழ் ஊடகத்துறையினரும் பயங்கரவாதிகளாக அல்லது பயங்கரவாதத்துக்குத் துணை போகின்றவர்களாக சித்திரிக்கப்பட்டனர்.

மயில்வாகனம் நிமலராஜன் மீதும் ஐயாத்துரை நடேசன் மற்றும் சிவராம் மீதும் பாய்ந்த குண்டுகள் பலியாக்க நினைத்தது அவர்களது உயிர்களை மாத்திரமல்ல தமிழ்த் தேசியத்தின் மீதும் தமிழர் போராட்டத்தின் மீதும் கொண்டுள்ள பற்றுதலை, அக்கறையை திசை திருப்பிக் கொண்டு ஒன்றில் சும்மா இருங்கள் அல்லது ஒதுங்கிக் கொள்ளுங்கள் அல்லது நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள் என்ற செய்தியை ஒட்டுமொத்தமாக அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் விடுவிக்கப்பட்ட அச்சுறுத்தலாகவுமே அமைந்தது.

கருத்துச் சுதந்திரத்திற்கு துப்பாக்கி மூலமான கொலைதான் பரிசு எனின் இந்த மண்ணின் கருத்துச் சுதந்திரத்திற்கான தர்மம் தலையெடுக்க வழியில்லாது போய்விடும். ஆனால் நிமலராஜன், நடேசன் போன்றோரது தியாகம் இந்த மண்ணில் அநியாயம், அக்கிரமம், கொலைகள் என்பவற்றுக்கும் அப்பால் கருத்துச் சுதந்திரம் சற்றேனும் தலை நிமிர்ந்து நிற்க வழி சமைத்துள்ளது.

ஆனால் இன்று இனந் தெரியாத நபர்களும் கண்ணுக்குத் தெரியாத துப்பாக்கிதாரிகளும் மர்ம நபர்களும் நிரையில் இல்லை என்பது உண்மைதான்.

ஆனால் அந்த இடத்தை ஊடகக் காவலர்களும் தமிழ்த் தேசியத்தின் இன்றைய கர்த்தாக்களும் ஏகபோகமாக்கிக் கொண்டுள்ளனர்.

தமிழ்த் தேசியம் பற்றிப் பேசாதீர்கள். தமிழர் உரிமைகள் குறித்து எழுதாதீர்கள் என்பதுதான் இனந் தெரியாத நபர்களின் செய்தியாக இருந்தது.

ஆனால் இன்று அந்த யுகம் போய் தமிழ்த் தலைமைகளும் ஊடகக் காவலர்களும் தமிழ்த் தேசியத்திற்கு புதிய வரைவிலக்கணம் வகுத்து அந்த வட்டத்துக்குள் ஊடகத்துறையினர் நிற்க வேண்டும் என்ற எழுதாத மரபை, கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.

இதனைக் கடைப்பிடிக்க மறுப்போர் தமிழர் நலன்களுக்கு எதிரானவர்கள் என தூக்கப்படுகின்றனர் அல்லது ஊடகத்துறையில் இருந்து மிக இலாபகமாக அகற்றப்படுகின்றனர். எழுத்துக்கள் முடக்கப்படுகின்றன.

இதற்கும் மசியாதவர்கள் ஊடகத் துறையை விட்டு வெளியேறுவதற்கான காரியங்கள் நடைபெறுகின்றன அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறு சகபாடிகள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர் அல்லது தனியார் துறையினரை ஏவி புலனாய்வு மேற்கொள்கின்றனர்.

அத்துடன் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளனின் வீட்டுக்கு பொது மலசல கூடங்களில் இருந்து சிறு நீர் அள்ளி வந்து நாளாந்தம் அபிஷேகம் செய்யப்படுகின்றது.

இது நவீன இனந்தெரியாத நபர்களின் கைங்கரியமாக உள்ளது. தமிழ்த் தேசியத்திற்காக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக, ஊடக தர்மத்திற்காக நீ உனது உயிரைத் தியாகம் செய்தாய்.

உன்னைப் போலவே சிவராம், சுகிர்தராஜ், சுப்ரமணியம் மற்றும் நிமலராஜன் போன்றோரும் தமது உயிரைத் தியாகம் செய்தனர்.

நீங்கள், நான் உட்பட எமது பயணம் புனிதப் பயணம் எனக் கருதிச் செயற்பட்டோமோ அதனை நமக்குத் தெரியாமலேயே ஊடக நிறுவனங்கள் அதைப் பணமாக்கிக் கொண்டது மாத்திரமல்ல தமிழ் மக்கள் மத்தியில் நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொள்வதற்கும் தமது விநியோகத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும் எம்மை எமது ஊடகப் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டன என்ற உண்மையை இன்றைய நிகழ்கால உண்மைகள் உணர்த்தி நிற்கின்றன.

இன்று ஊடக நிறுவனங்களுக்குத் தேவைப்படுவது அரசியல் செல்வாக்கு. இதற்காக தமிழ்த் தேசியத்திற்கு மாற்று இலக்கணம் வகுக்கப்பட்டு ஊடக அரசியல் நடத்தப்படுகின்றது.

உன் போன்றோர்களின் தியாகத்தின் மேல் கட்டியெழுப்பப்பட்டுள்ள ‘பொய்மை தேசியத்திற்காகவா’ உயிர்த் தியாகங்கள் பயன்படுகின்றன என்பதை நினைக்கும் போது எம் முன் வெறும் சூனியமே விரிந்து கிடக்கின்றது.

ஊடக அரசியல் இன்று தமிழ்த் தலைமைகளுடன் கை கோர்த்துப் பயணிக்கின்றது. தமிழ்த் தலைமைகளுக்கும் பாரம்பரிய தமிழ்த் தேசியம் தேவைப்படவில்லை. தமது சமாளிப்பு அரசியலுக்கு சாதகமான அடக்கி, அமர்த்தி வாசிக்கப்படும் தமிழ்த் தேசியமே தேவைப்படுகின்றது.

நல்லாட்சியைப் பாதுகாப்பதன் மூலம் அயல் நாட்டினதும் சர்வதேச நலன்களுக்கும் குந்தகம் விளைவிக்காத ஒருவித சமாளிப்பு தமிழ்த் தேசியத்தைக் கொண்டு நடத்தும் அரசியல் செய்ய வேண்டிய தேவை தமிழ்த் தலைமைகளுக்கு உள்ளது.

இந்த வரலாற்றுத் துரோகத்தை அச்சு ஊடக நிறுவனங்களும் தமிழ்த் தலைமைகளும் மிகக் கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றன.

2005 ஆம் ஆண்டு நண்பன் சிவராமின் படுகொலைக்குப் பின் துரத்திய வெள்ளை வான், மோட்டார் சைக்கிள், அநாமதேய தொலைபேசி அழைப்புக்களை அலட்சியம் செய்து இலங்கை மண்ணிலேயே இருந்திருந்தால் உன் போன்றோரது நிலைதான் எனக்கும் ஏற்பட்டிருக்கும்.

அந்த நெருக்கடியான வேளையில் எனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள என்னை நானே தயார்படுத்த வேண்டியிருந்தது. வெளிநாட்டுப் பயணத்துக்கான ஒழுங்குகளையும் பணத்தையும் நானே ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.

இவை அனைத்தையும் செய்து எனது உயிரைக் காப்பாற்ற வேண்டிய தார்மீக பொறுப்பைக் கொண்டவர்கள் காட்டிய அலட்சியம், அக்கறையீனம் என்னை நானே காப்பாற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

எனது உயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பினைக் கொண்டவர்கள் என்னை நோக்கி உதிர்த்த வாசகம் இதுதான், வெளிநாட்டில் புகலிடம் பெறுவதற்காக அச்சுறுத்தல் இருப்பதாக கூறுகின்றேன் என்பதே அது. இது சஞ்சிகை ஒன்றில் வெளிவந்தது.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக இரு முறை நாட்டை விட்டு நான் வெளியேறினேன். ஆனால் எந்த ஒரு நாட்டிலும் புகலிடம் கோரவில்லை. வெளிநாடுகளில் தங்குவதற்கும் நான் முயற்சிக்கவில்லை.

இன்று நான் உங்கள் முன் நின்று உரையாற்றுவதற்கு உயிருடன் இருக்கின்றேன் என்றால் அதற்கு இரு நிறுவனங்கள் காரணமாக இருந்துள்ளன.

முதலாவது, சு.ளு.கு – பரிசில் இருந்து இயங்கி வரும் எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்பு எனது பாதுகாப்பு குறித்தும் எனக்குள்ள அச்சுறுத்தல் குறித்தும் அறிக்கை வெளியிட்டு எனது உயிருக்கு உத்தரவாதம் பெற்றுக் கொடுத்தது.

இரண்டாவது, என்னைப் பாதுகாப்பதில் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் பெரும் பங்காற்றியது. இந்த இரு நிறுவனங்களுக்கும் நான் என்றும் நன்றியுடையவனாவேன்.

எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்பின் அறிக்கை வெளிவந்த பின் கொழும்பில் உள்ள ஒரு ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்னுடன் தொடர்பு கொண்டு சகல விபரங்களையும் பெற்றுக் கொண்ட பின் மீண்டும் அச்சுறுத்தல் வந்தால் தனக்கு அறிவிக்குமாறு கூறினார்.

அதே நபர் எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்புடன் தொடர்பு கொண்டு வெளிநாடுகளில் புகலிடம் பெறுவதற்காகவே இவ்வாறு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுகின்றனர்.

அதனால் இனிமேல் இலங்கை தொடர்பாக அறிக்கை வெளியிடுவதற்கு முன் தன்னைக் கலந்தாலோசிக்குமாறு கேட்டுக் கொண்டாராம். இதனை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் உள்ளது.

அதாவது ஊடகத்துறையினரின் மத்தியில் எந்தளவுக்கு சக பத்திரிகையாளன் குறித்த கரிசனை, அக்கறை உள்ளது என்பதற்கப்பால் ஊடகத்துறை சார்ந்தோரே தமக்கிடையே ஒற்றுமையின்றி தம்மைத் தாமே வெட்டிச் சாய்த்துக் கொள்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டவே ஆகும்.

இந்த அபாயகரமான நிலை ஊடகத்துறையினர் மத்தியில் தொடர்ந்தும் இருப்பது எந்த வகையிலும் ஆரோக்கியமான சூழலை உருவாக்காது.

எனவே தான் நான், ‘இறைவா நான் எனது எதிரிகளைப் பார்த்துக் கொள்கின்றேன் நீ எனது நண்பர்களைப் பார்த்துக் கொள்’ என எனது பத்தி ஒன்றில் இறைவனிடம் மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டேன்.

ஏனெனில் ஊடக நிறுவனங்களும் ஊடகத்துறை நண்பர்களும் மிகவும் கசப்பான அனுபவங்களையே இன்று வரை எனக்குக் கொடுத்து வருகின்றனர்.

எனது எழுத்துக்களையோ நூல் உருவில் கொண்டு வர எடுத்த முயற்சிகள் கூடத் தகர்க்கப்பட்டன. உயிருடன் வாழ வேண்டுமென்றால் ஊடகத்துறையை விட்டு விலகி விடு, நாட்டை விட்டு வெளியேறு என்பதுதான் நடேசன், சிவராம் போன்றவர்களுக்கு இனந்தெரியாத நபர்களின் செய்தியாக இருந்தது. இதனையும் மீறி ஊடகப் பயணம் மேற்கொண்ட போது அவர்கள் கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

ஆனால் இன்றும் அதே செய்தி வேறு வடிவில் ஊடகத்துறை சார்ந்தோருக்குக் குறிப்பாக அச்சு ஊடகத்துறையினருக்கு விடுக்கப்படுகின்றது.

இனந் தெரியாத நபர்கள் போய் அந்த இடத்தை குறிப்பாக அச்சு ஊடக நிறுவனங்களும் தமிழ் பேசும் தலைமைகளும் கையேற்று தமக்கு வசதியான ஏற்ற ஊடக அரசியல் கலாசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஆனால் ஊடகத்துறை சார்ந்தோர் தாம் “நலம் அடிக்கப்பட்டவர்களாக” இருப்பதை அறிந்தும் அறியாது உள்ளனர்.

இதற்கும் அப்பால் தமிழ் பேசும் தலைமைகளும் ஊடக நிறுவனங்களும் ஊடகத்துறையினரையே கூர் வாளாகத் தீட்டி ஊடகத்துறை சகாக்களை வெட்டி வீழ்த்துகின்றனர் என்பதையும் ஊடகத்துறை சார்ந்தோர் அறிந்தும் அறியாதவர்கள் போல் கோடரிக் காம்பாக துணை போய்க் கொண்டிருக்கின்றனர் என்ற கசப்பான விடயத்தையும் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

இதனை எதிர்கொள்ளும் நிலையிலான திராணி தமிழ் ஊடகத்துறையினரிடம் இல்லையென்பது துரதிஷ்டமே.

இன்று தனது சகாக்களுக்கு நடைபெறுவது நாளை அவர்களுக்கு வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தமிழ் ஊடகத்துறையில் கோலொச்சுகின்ற ஒற்றுமை இன்மைதான் படுகொலை செய்யப்பட்ட தமது சகாக்களுக்காக நீதி கேட்டு உரத்து குரல் எழுப்ப முடியாது உள்ளது.

போர் முற்றுப் பெற்று அமைதி திரும்பி விட்டது என்ற மாயைக்குள் ஊடகத்துறையும் பயணிக்க முடியாது.

ஊடகத்துறையினரே நாம் ஒன்றிணைந்தால் எழுவோம். ஒன்றிணையா விட்டால் வீழ்வோம். எழுவதா? வீழ்வதா? ஊடகத்துறையினரே குறிப்பாக தமிழ் ஊடகத்துறையினரே சிந்தித்து முடிவெடுங்கள் என தனது உரையை நிறைவு செய்துள்ளார்.








No comments:

Post a Comment